பகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும்


திறமையுடன் வாழவேண்டும், உடம்பிடமிருந்து அது கொடுக்கக்கூடிய உச்ச அளவைப் பெறவேண்டும் என்றால் பகுத்தறிவே வீட்டுக்கு எஜமானனாக இருக்க வேண்டும் என்பதை சிறு வயதிலேயே கற்கத் தொடங்கிவிடுவது நல்லது.

இது யோகம் அல்லது உயர் அனுபூதி பற்றிய விஷயம் அன்று. இது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு வீட்டிலும், எல்லா இடத்திலும் கற்றுத் தரவேண்டிய ஒன்று. மனிதன் மனோமய ஜீவனாக இருப்பதற்காகப் படைக்கப்பட்டவன்.

ஆகவே, மனிதன் மனிதனாக இருக்க வேண்டுமானால் - இப்பொழுது நாம் வேறு பெரிய இலட்சியம் எதைப்பற்றியும் பேசவில்லை, மனிதனாக இருப்பதைப் பற்றித்தான் - வாழ்க்கை பகுத்தறிவின் அதிகாரத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும். பிராணணின் தூண்டுதல்களுக்கு உட்பட்டதாக இருக்கக் கூடாது. இதைப் பாலப் பருவம் முதற்கொண்டே எல்லாக் குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும்.

சிந்திக்கத் தொடங்கிய உடனே ஒரு மனிதனுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய முதல் பாடம் அவன் மனித இனத்திற்கே உரிய ஆறாவது அறிவிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதே ஆகும். மனித இனத்தின் இயற்கைக்கு பகுத்தறிவே எஜமான். ஒருவன் பகுத்தறிவின்படி நடக்க வேண்டும், இயற்கைத் தூண்டுதல்களுக்கு அடிமையாக இருக்க மறுத்துவிட வேண்டும்.

நான் இப்பொழுது பேசிக் கொண்டிருப்பது யோகத்தைப் பற்றி அன்று, ஆன்மீக வாழ்க்கையைப் பற்றி அன்று, அதற்கும் நான் இப்பொழுது பேசுவதற்கும் சம்பந்தமில்லை. இது மனித வாழ்விற்கு, வெறுமனே மனித வாழ்விற்கு வேண்டிய அடிப்படை ஞானம்.

பகுத்தறிவின்படி நடக்காமல் வேறு தூண்டுதல்களின்படி நடக்கும் மனிதன் விலங்கிலும் கீழான காட்டுமிராண்டி அவ்வளவுதான். இதை எல்லா இடத்திலும் கற்றுத்தர வேண்டும். இதுவே குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டிய ஆதாரக் கல்வி.

இறைவனது சித்தத்தை வெளிப்படுத்தும் சைத்திய புருஷனுடைய ஒழுங்குமுறை தோன்றியபோதே பகுத்தறிவின் ஆட்சி முடிவுபெற வேண்டும்.

பயன்படுத்த பயன்படுத்த பகுத்ததறிவு அபிவிருத்தியடையும்!

பகுத்தறிவைப் பயன்படுத்துவதன் மூலம் தசைகளைப் போல், இச்சா சக்தியைப் போல் அதுவும் அபிவிருத்தியடைகிறது. அறிவோடு பயன்படுத்தும் போது இவையெல்லாம் அபிவிருத்தியடைகின்றன. எல்லோரிடமும் பகுத்தறிவு இருக்கிறது. அதைப் பயன்படுத்துவதுதான் இல்லை. சிலருக்கு பகுத்தறிவு என்றால் ஒரே பயம். அது அவர்களுடைய தூண்டுதல்களுக்கு மாறாக இருப்பதுதான் காரணம். ஆகவே அவர்கள் அதற்குச் செவி கொடுக்க விரும்புவதில்லை. இப்படிப் பகுத்தறிவுக்குச் செலவி கொடாமலிருந்து பழகிவிட்டால், பிறக அது அபிவிருத்தி ஆவதற்குப் பதில் அதனுடைய ஒளியை மேன்மேலும் இழந்துவிடுகிறது.

பகுத்தறிவை வளர்க்க வேண்டுமானால், அதை நீ மனப்பூர்வமாக வளர்க்க விரும்ப வேண்டும். ஒரு பக்கத்தில், "நான் என்னுடைய பகுத்தறிவை வளர்க்க விரும்புகிறேன்" என்று சொல்லிக்கொண்டு, மறுபக்கத்தில் பகுத்தறிவு செய்யச் சொல்வதைச் செய்யமறுத்தால் நீ சிறிதும் முன்னேற்றமடைய மாட்டாய். ஏனெனில் ஒவ்வொரு தடவை அது உன்னிடம், "இதைச் செய்யாதே" என்றோ, "அதைச் செய்" என்றோ சொல்லும் போது, அதற்கு எதிரானதையே செய்தால், பிறகு அது எதையும் சொல்கிற பழக்கத்தையே விட்டுவிடும். அது இயற்கைதானே?