ஆன்மீகத் தாய்


  அன்னைக்கும் அவரை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் இடையே உள்ள உறவு சைத்திய, ஆன்மீகத் தாய் என்னும் உறவு. அது ஒரு தாய்க்குத் தான் ஈன்ற குழந்தையுடன் உள்ள உறவைவிட மிகவும் மேலானது. மனிதத் தாய்மை தரக்கூடிய எல்லாவற்றையும் அது தருகிறது. ஆனால், அதைவிட மிகச்சிறந்த முறையில் தருகிறது, அதோடு அதற்கு மேலும் எண்ணற்ற மடங்கு அதிகமானவை அதில் உள்ளன. ஆகவே, அது மனிதத் தாய்மையைவிட மேலானதாகவும், அதிக முழுமை பெற்றதாகவும் இருப்பதால் உடலினால் ஏற்பட்ட உறவின் இடத்தை அது முழுவதுமாக எடுத்துக்கொள்ள முடியும்.

அகவாழ்விலும், புறவாழ்விலும் அதற்குப் பதிலாக இடங்கொள்ள முடியும். இயற்கையான அறிவும், ஒளிவுமறைவற்ற அறிவுத்திறனும் உடைய யாரும் இதில் குழப்பமடையத் தேவையில்லை. தூல யதார்த்த நிலை அதைவிட மேலான ஆன்மீக உண்மையின் குறுக்கே நிற்கவோ, அது உண்மையாக இருப்பதைத் தடுக்கவோ முடியாது. இவரை என்னுடைய உண்மையான அன்னை என்று அவர் சொல்வது முற்றிலும் சரி, ஏனெனில் அவர் அவனுக்கு அகவாழ்வில் ஒரு புதுப்பிறவி அளித்து அதிகத் தெய்வீகத் தன்மை கொண்ட வாழ்விற்காக அவனைப் புதிதாக உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

ஆன்மீகத் தாய்மை என்பது இந்த ஆசிரமம் கற்பனை செய்துகொண்டது அல்ல, அது ஒரு நித்தியமான உண்மை, நீண்ட நெடுங்காலமாக ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் அறியப்பட்டிருந்த உண்மை. உடலால் ஏற்படும் உறவுக்கும் சைத்திய ஆன்மீக உறவுக்கும் இடையே நான் கிழித்துள்ள கோடும் புதிய கண்டுபிடிப்பு அன்று எல்லா இடங்களிலும் தெரிந்து, புரிந்துகொண்ட கருத்து, எல்லோருக்கும் தெளிவாக எளிதாகப் புரியக்கூடிய கருத்து அது.


அன்னை எதைத் தருகிறாரோ அதில் திருப்தி அடைந்து, அவருடைய மதிநலத்திலும், தன் மீது அவருக்குள்ள ஆழ்ந்த அக்கரையிலும் நம்பிக்கை வைத்து, அது ஐக்கியத்திலேயே முதன்மையாக, முற்றிலுமாகக் கவனம் செலுத்துதல், அதையே சாதிக்க வேண்டிய ஒரே விஷயமாகக் கொள்ளுதல், புற விஷயம் எதற்கும் உரிமை கொண்டாடாமலும் கோரிக்கைகள் எழுப்பாமலும் இருத்தல் இதுவே பத்திரமான ஒரே வழி, எதிர்ப்பு, கிளர்ச்சி, சந்தேகம், சோர்வு, கடுமையான போராட்டங்கள் இவற்றையெல்லாம் எழுப்புகின்ற ஓர் ஆசை உண்மையான ஆன்மீக இயக்கத்தின் ஒரு பாகமாக இருக்க முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரியக்கூடிய விஷயம். அதுதான் சரியானது என்று உன்னுடைய மனம் சொன்னால் அதன் யோசனைகளை நீ நம்பக்கூடாது.

தேவையான ஒன்றின்மேல் முழுக் கவனம் செலுத்து, அதைக் கலைக்கும்படியான அல்லது உன்னை வழியைவிட்டு விலக்கும்படியான எல்லாக் கருத்துக்களையும் சக்திகளையும், அவை வந்தால் ஒதுக்கித்தள்ளு. இந்த விஷயங்களுக்கு சம்மதம் அளிக்கும் வழக்கத்தை பிராணன் விடவேண்டும். அதைச் செய்ய முதலில் மனச் சம்மதத்தை அடியோடு மறுத்துவிட வேண்டும். ஏனென்றால், மனத்தின் ஆதரவு அவற்றிற்கு மற்றபடி இருக்கக்கூடிய சக்தியை அதிகப்படுத்துகிறது. மனத்திலும் ஆழ்ந்த உணர்ச்சி ஜீவனிலும் (Emotional Being) சரியான மனப்பான்மையை நாட்டு - முரண்பட்ட சக்திகள் எழும்போதும் அதைச் சிக்கெனப்பிடித்துக்கொள். அந்த சைத்திய உளப்பாங்கில் உறுதியாக நின்று அவற்றைத் துரத்து.

அன்னையின் உண்மையான குழந்தைகள்!

அவருக்குத் திறந்திருப்பவர்கள், அவருடைய உள் ஜீவனில் அவருடன் நெருங்கியிருப்பவர்கள், அவருடைய சித்தத்துடன் ஒன்றானவர்கள் இவர்களே அன்னையுடன் மிக நெருங்கியுள்ள அவருடைய குழந்தைகளாவர் - உடலால் அவருடன் அதிக நெருக்கமாக இருக்கிறவர்கள் அல்ல.