மகா‌ன்க‌ள் பர‌ம்பொரு‌ளி‌ன் வடிவ‌ங்க‌ள்

(புதுடெல்லி சாணக்கியபுரத்தில் அமைந்துள்ள விவேகானந்தா சர்வதேச நிலையத் திறப்பு விழாவில் அம்மா ஆற்றிய அருளுரை)

சுவாமி விவேகானந்தரின் பெயரில் மதங்களுக்கிடையில் நட்புணர்வையும், இணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், ஸநாதன தர்மத்தின் சிறப்பை உலகமெங்கும் உணர்த்துவதற்கும் சுவாமி விவேகானந்தரின் பெயரில் இதுபோன்ற ஒரு நிறுவனம் உருவானதில் அம்மா மிகவும் மகிழ்கிறேன். சுவாமி விவேகானந்தர் என்ற பெயருக்கே ஒரு சக்தியும், தன்வசப்படுத்தும் தன்மையும் இருக்கிறது. அதைக் கேட்கும் போதே நம்மை அறியாமல் நம்மிடம் ஒரு உற்சாகமும், எழுச்சியும் தோன்றும். ஏனெனில், அப்பெயருக்குரியவர் அந்த அளவு தேஜ¤டன் திகழ்ந்தார். மாற்றமெனும் புரட்சியை ஏற்படுத்திய மகிமைமிக்க சந்நியாசி, முழுமையான ஞானி, குருபக்திக்கு உன்னத உதாரணம், சிறந்த கர்மயோகி, பேச்சுத்திறன் மிக்கவர் என குணங்கள் அனைத்தும் நிறைந்த மிக அபூர்வமானமனிதராக சுவாமி விவேகானந்தர் திகழ்ந்தார். அவர் ஸ்ரீராமகிருஷ்ணரின் நிறைவான ஆன்மிக சக்தியில் மலர்ந்து, உலகமெங்கும் நறுமணம் பரப்பிய தெய்வீக மலராவார்.

சுவாமி விவேகானந்தரைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது தூரத்தில் எங்கோ காட்டில், குகையில் கண்களை மூடித் தனிமையில் அமர்ந்து செய்யும் தவமாக மட்டும் இருக்கவில்லை, அது இங்கே, இவ்வுலகில் பல இயல்புள்ள மனிதர்களுடன் வாழ்ந்து, அனைத்துச் சூழ்நிலைகளையும், வாழ்வின் அறைகூவல்களையும் தைரியத்துடனும், மனதில் சமநிலையோடும் எதிர்கொண்டு வாழவேண்டிய ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. வாழ்வின் அஸ்திவாரமாகவும், சக்தி மற்றும் புத்தியின் உறைவிடமாகவும் திகழ்வது ஆன்மிகம் என்று அவர் உறுதியாக நம்பினார்.

சுவாமி விவேகானந்தரின் ஆன்மிகம் என்பது பிற உயிரினங்கள் மீது காட்டும் கருணையை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. பட்டினி கிடப்பவனின் பசியைத் தீர்க்காத, விதவையின் கண்ணீரைத் துடைக்காத எந்த மதத்தின் மீதும், எந்தத் தெய்வத்தின் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் கூறினார். மக்கள் தொண்டும், ஜீவகாருண்யமும் சந்நியாசத்தின் அடிப்படை லட்சியங்களாக ஆகவேண்டும் என்று கற்பித்ததன் மூலம் பாரதீயர்களின் சந்நியாசத்திற்கு அவர் புதிய கீர்த்தியை அளித்தார்.


மகான்களின் வாழ்க்கையே அவர்கள் வழங்கும் செய்தி. சமூகம் கற்கவேண்டிய மிகச்சிறந்த உதாரணமும் அதுவே ஆகும். அதுதான் சமூகத்தின் சமநிலையைக் காக்கிறது. பிற நாடுகளைவிட பாரதத்தில் இன்றும் குடும்ப உறவுகளும், அதன் மதிப்புகளும் நிலைத்திருப்பதற்கு மகான்களின் வாழ்க்கை தூண்டுதலாக அமைவதே காரணம் ஆகும். "ஸ்தயம் வத தர்மம் சர" (சத்தியம் பேசு, தர்மத்தைப் பின்பற்று), "மாத்ருதேவோ பவ, பித்ருதேவோ பவ, ஆசார்யதேவோ பவ, அதிதிதேவோ பவ" (மாதா, பிதா, குரு, விருந்தினர் தெய்வம்) என்றெல்லாம் அவர்கள் சொன்னது மட்டுமின்றி, வாழ்ந்தும் காட்டினார்கள். அரசாள்பவர்களைக் கொண்டல்ல, மகான்களை முன்னுதாரணமாகக் கொண்டே மக்கள் மனித வாழ்வின் மதிப்பைப் புரிந்துகொண்டனர். அரசாள்பவர்களுக்கும் வழிகாட்டியாகவும், நல் உதாரணமாகவும் திகழ்ந்தவர்கள் மகான்கள், இந்த நற்பண்புகளின் ஆதாரமாகத் திகழ்வது ஆன்மிகமாகும். நற்பண்புகள் அழிந்துவிட்டால், நமது நிலை பூமியின் ஈர்ப்பு விசையைக் கடந்துவிட்ட செயற்கைக்கோளைப் போல ஆகிவிடும்.

மகான்கள் வெறும் மனிதர்கள் அல்ல. அவர்கள் பரம்பொருளின் நேரடி வடிவங்களாவர். அவர்களிடம் சுயநலமென்பது சிறிதுமில்லை. காந்தம் இரும்பைக் கவர்வது போல், அவர்கள் உலகைத் தங்களை நோக்கி ஈர்க்கிறார்கள். பற்றும், சுயநலமும் இல்லாமல் செயல்படுவதால் அவர்களின் செயல்கள் எளிதில் உலகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

ஒருமுறை மகானான சந்நியா‌‌சி ஒருவர் தோளில் சுமையுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் கூட்டம் அவர் அருகில் சென்று அவரிடம் "சந்நியாசம் என்றால் என்ன?" என்று கேட்டது.

உடனே சந்நியா‌‌சி தன் தோளில் வைத்திருந்த சுமையைக் கீழே வைத்துவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இளைஞர்கள் அவர் பின்னாலேயே சென்று, "இதன் பொருள் என்ன?" என்று கேட்டனர்.

சந்நியாசி, "காணவில்லையா? நான் சுமையைத் தரையில் இறக்கிவைத்தேன். முதலில் "நான், எனது" என்ற மனோபாவத்தைத் துறப்பதுதான் சந்நியாசம்" என்றார்.

"அதற்கு அடுத்த நிலை எது?"

இதைக்கேட்ட சந்நியாசி திரும்பிவந்து அச்சுமையை எடுத்து மீண்டும் தோளில் வைத்துக் கொண்டு நடந்தார்.

அதன்பொருள் என்னவென்று புரியாத இளைஞர்கள் சந்நியாசியிடம் மீண்டும், "சுவாமி! "நான், எனது" என்பதைத் துறந்தபின் செய்ய வேண்டியது என்ன? அதை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டனர்.

மகான், "நான் மீண்டும் சுமையை எடுத்துத் தோளில் வைத்ததைக் காணவில்லையா? "நான், எனது" என்பவற்றைத் துறந்தபின் உலகமெனும் சுமையைத் தோளில் சுமக்க வேண்டும். பிறரது துன்பங்களையும், கஷ்டங்களையும் தனது போல் கருதி அவர்கள் மீது அன்பு செலுத்தவும், தொண்டு செய்யவும் வேண்டும். அதுதான் உண்மையான சந்நியாசம்" என்றார்.

இந்த சுமைக்குப் பாரம் இருக்காது. ஏனெனில், அன்பு உள்ள இடத்தில் எதுவும் பாரமாகத் தோன்றாது. ஒரு குழந்தையைப் பார்த்துக்கொள்வது ஆயாவுக்குக் கஷ்டமான செயலாகத் தோன்றினாலும், தாய்க்கு அது ஆனந்தமான அனுபவமாகும். அதுபோல், அன்பு உள்ள இடத்தில் எதுவும் பாரம் இல்லை.

ஆனால், சுயநலமற்று உலகிற்குச் சேவை செய்ய வேண்டுமெனில், முதலில் நாம் சக்தியைப் பெறவேண்டும். நம்முள்ளே உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்மிக சக்தியை விழித்தெழச் செய்வதன் மூலம்தான் சரியான மாற்றமும், சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வும் ஏற்படும் என்று சுவாமி விவேகானந்தர் நினைவூட்டுகிறார்.