பரசுராமரைப் பற்றிய புராணக் கதை


    சீதாராம விவாஹ வைபவங்கள் முடிந்த பிறகு தசரதர் தன் பந்து வர்க்கங்கள் சூழ மிதிலையை
விட்டுப் புறப்பட்டார். மூன்று யோஜனை தூரம் சென்ற பிறகு, புதிய மணமகனாக
விளங்கிக் கொண்டிருந்த ஸ்ரீஇராமருடைய தந்தை தசரதர் துர்நிமித்தங்களைக்
கண்டார். அவற்றை தன் குரு வஸிஷ்டரிடம் காட்டி வினவினார்.


“குரு சிரேஷ்டரே! நம்மைச் சுற்றிக் காணப்படும் நிமித்தங்கள் சுபமாக இல்லையே? அதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?”

குரு
அவற்றைக் கவனித்துப் பார்த்து விட்டுச் சொன்னார். “ஏதோ ஓர் ஆபத்து நம்மை
எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனாலும்
மிருகங்கள் பிரதக்ஷிணமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்க்கும் போது
வரக்கூடிய ஆபத்து சீக்கிரமே விலகிச் சென்று விடும் என்றும் தெரிகிறது.
ஆகையால் கவலை வேண்டாம்” என்றார்.

அப்போது
மிகப் பலமான காற்று வீசத்தொடங்கியது. ஆகாசமெங்கும் புழுதி நிறைந்து
திக்குகளை மறைத்தது. எதையும் காணமுடியாமல் கண்களை மூடிக் கொள்ள
வேண்டியிருந்தது. அந்தப் புழுதி அடங்க அடங்க அதன் நடுவே அனேக சூர்யன்கள்
ஒருங்கே எழுந்தாற்போல பிரகாசமாக ஓர் உருவம் எதிரே தோன்றியது.

நீலமேக
சியாமள மேனியராகவும் மின்னலின் ஒளிக் கற்றையைப் போன்ற தேஜஸ் உள்ளவராகவும்
பரசுராம பகவான் தங்களை நோக்கி வெகு வேகமாக நடந்து கொண்டு வருவதை அவர்கள்
கண்டார்கள். சிரத்தில் ஜடா மண்டலம். கரங்களில் ஒரு பெரிய தனுஸும் ஒரு
கோடரி போன்ற ஆயுதமும், யமராஜனே வருவது போலத் தோன்றியது அவர்களுக்கு.

அவர்
தன் எதிரே வந்து வழியை மறைத்ததைப் பார்த்த தசரதர் வெலவெலத்துப் போனார்.
ஆயிரம் கரங்களைப் படைத்திருந்த கார்த்த வீர்யார்ஜுனனைக் கொன்றவர் அல்லவா
அவர்? க்ஷத்திரியர்களைக் கூட்டம் கூட்டமாக அழித்தவர் அல்லவா? அவர் எங்கே
இங்கே வந்தார் என்று நடுங்கினார்.

அவருக்கு
பாத்யம், அர்க்கியம் ஆகியவற்றை அளித்துப் பூஜை செய்ய வேண்டியதையும் மறந்து
போன தசரதர் “காப்பாற்ற வேண்டும்! காப்பாற்ற வேண்டும்!” என்று கதறத்
தொடங்கினார்.

“என் பெயரான இராமன் என்பதை
நீயும் தரித்துக் கொண்டு பெருமையுடன் பூமியில் உலவி வருகிறாய். பழையதான
ஒரு தனுஸை முறித்துவிட்டு கர்வத்துடன் இருக்கிறாய். நீ நிஜமான
க்ஷத்திரியன் என்றால், இதோ நான் கொண்டு வந்திருக்கும் விஷ்ணு தனுஸைக்
கையில் எடுத்து நாணேற்றுவாயாக! அப்போது உன்னுடன் த்வந்த்வ யுத்தம்
செய்வேன். அப்படிச் செய்வது உன்னால் முடியாது என்று தெரிந்தால் உன்னையும்
மற்றவர்களையும் கொன்று விடுவேன். நான் க்ஷத்திரியர்களுக்கு யமன் என்பதை நீ
அறிவாய் அல்லவா?” என்றார்.

தசரதகுமாரர்
இராமன் மஹாவீரன். கோபத்தால் ஜ்வலித்துக்கொண்டிருந்த பரசுராமரை சிறிது
நேரம் உற்றுப் பார்த்து விட்டு அவருடைய கையிலிருந்த தனுஸை அலட்சியமாக
வாங்கிக் கொண்டு அதை வளைத்து நாணேற்றினார். பிறகு தன் அம்பறாத்
தூணியிலிருந்து ஒரு பாணத்தை எடுத்து அந்த வில்லில் பூட்டினார்.

“பிராம்மணரே!
என்னுடைய வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள். நான் வில்லில்
பூட்டியிருக்கும் பாணம் மிகவும் பலம் வாய்ந்தது. அதற்கு இலக்கு என்று
ஒன்றை வைத்து விட்டால் அது வீண்போகாது. அதன் லக்ஷ்யம் எதுவாக
இருக்கவேண்டும் என்று உடனே சொல்லுங்கள்” என்றார் ஸ்ரீஇராமர்.

பதில் சொல்ல பரசுராமர் சற்றுத் தயங்கவே ஸ்ரீஇராமர் மேலும் வற்புறுத்திக் கேட்டார்.

“முனிவரே!
உங்களுடைய புண்யத்தால் ஜயித்த மேல் லோகங்களை அதற்கு லக்ஷ்யமாக
வைக்கட்டுமா? அல்லது உங்களையே இதற்கு லக்ஷ்யமாக வைக்கட்டுமா? அந்த
லோகங்களையோ அல்லது இந்த லோகத்தையோ நீங்கள் விடவேண்டிய நிர்பந்தம்
ஏற்பட்டிருக்கிறது. சீக்கிரமாக பதில் கூறுங்கள்!” என்றார் ஸ்ரீஇராமர்.

லோகான் பாதயுகம் வா அபி வத சீக்ரம் மம ஆக்ஞயா |
அயம் லோக: பரோ வா அத த்வயா கந்தும் ந சக்யதே ||

பரசுராமரின்
முகம் வாடிப் போயிற்று. முன் ஒரு காலத்தில் நடந்த விருத்தாந்தம் அவருடைய
நினைவுக்கு வந்தது. அவருடைய அகக் கண்கள் திறந்தன.

அப்போது அவர் ஸ்ரீஇராமரிடம் கூறினார்:

“ஹே
இராமா! உன்னை நான் இப்போது அறிந்து கொண்டேன். நீ ஜகத்தின் உற்பத்தி,
ஸ்திதி, லயம் மூன்றிற்கும் மூலகாரணமாக இருந்து கொண்டிருக்கும் பரமேசுவரன்
அல்லவா! சிறு வயதில் நான் சக்ரதீர்த்தம் என்ற புண்ய க்ஷேத்திரத்தில் தபஸ்
செய்து கொண்டு மஹாவிஷ்ணுவை ஆராதித்துக் கொண்டிருந்தேன். அதனால்
பிரீதியடைந்த பரமாத்மா ஸ்ரீமந் நாராயணன் சங்கு சக்ர கதாதாரியாகப்
பிரஸந்நமாகி என்னை ஆசிர்வதித்து “பிராம்மண குமாரனே! உன்னுடைய தபஸ்
பலனுடையதாக ஆயிற்று. என்னுடைய சித் அம்சம் உன்னிடம் வைக்கப்பட்டதால் நீ
கார்த்தவீர்யார்ஜுஅன்னை வதம் செய்து, மதம் கொண்டிருந்த க்ஷத்திரியக்
கூட்டங்களையும் அழித்தாய். இப்போது உன்னுடைய மனம் சாந்தமடைவதற்காக பூமி
முழுவதையும் உடனே கசியப முனிவருக்குத் தானமாகக் கொடுத்து விடு.
திரேதாயுகத்தின் தொடக்கத்தில் எக்காலத்திலும் அழிவற்றவனான நான் தசரத குமார
இராமனாக அவதரிக்கப் போகிறேன். அப்போது என்னைச் சந்திப்பாய். உன்னிடத்தில்
நான் வைத்துள்ள என்னுடைய தேஜஸை அப்போது எடுத்துக் கொண்டு விடுவேன்.
அதற்குப் பிறகு தபஸ் செய்து கொண்டு கல்பம் முடியும் வைர பூமியில்
இருப்பாய்.” என்று என்னிடம் கூறி மறைந்தார்.

“அப்படி
என்னிடம் சொல்லி ஆசீர்வதித்த ஸ்ரீமந் நாராயணன் நீயே! பிரம்ம தேவரால்
பிரார்த்திக்கப்பட்டு இப்போது ஸ்ரீஇராமனாக உருவெடுத்து வந்திருக்கிறாய்.
என்னிடம் வைத்திருந்த உன்னுடைய தேஜஸ் மீண்டும் உன்னால்
தரிக்கப்பட்டுவிட்டது. அதை அறிந்து கொண்டு இப்போது உன்னை நமஸ்கரிக்கிறேன்.
என்னுடைய ஜன்மம் ஸபலமாயிற்று”

இப்படி
பரசுராமர் கூறிவிட்டு ஓர் அபூர்வமான ஸ்துதியையும் செய்தார். பல ஸ்துதிகள்
நிறைந்ததாக உள்ள “அத்யாத்ம இராமாயணம்” என்ற கிரந்தத்தில் பரசுராமர் செய்த
“இராமஸ்துதி”யும் வெகு விசேஷமாக உள்ளது. ஸ்ரீஇராமரின் பரமாத்ம நிர்குண
ஸ்வரூபத்தைப் போற்றுவதாக அது அமைந்திருக்கிறது.

“ஹே
ராம! பக்தர்களின் ஸங்கம் ஏற்படும்போது உன்னிடம் பக்தி உண்டாகிறது. அந்தப்
பக்தி த்ருடமாக ஆகும் போது ஸம்ஸார துக்கத்திலிருந்து விடுபட வேண்டும் என்ற
மன உறுதி ஏற்படுகிறது. அந்தப் பக்தியுடன் உன்னை உபாஸித்தால் கண்களை
மயக்கும் மாயை சிறிது சிறிதாக விலகிவிடுகிறது. நீயே பரம்பொருள் என்ற உண்மை
புலனாகும் போது உன் அருளால் ஒரு ஸத்குரு கிடைப்பார். அவரிடம் உபநிஷத்
மஹாவாக்ய உபதேசம் பெற்றுக் கொள்ளும் பாக்யம் ஏற்படுகிறது. அதுவே
முக்திக்கு அழைத்துச் செல்லும் பாதையாக அமைந்து விடுகிறது. உன்னிடம் பக்தி
கொள்ளாமல் கோடி ஜன்மங்கள் எடுத்தாலும் ப்ரஹ்ம ஞானமும் கிடைக்காது. நித்ய
ஸுகமான மோக்ஷமும் கிடைக்காது”

இப்படி
ஸ்தோத்திரம் செய்து விட்டு பரசுராமர், “புண்ய லோகங்களை அடையவேண்டும் என்ற
விருப்பத்துடன் என்னென்ன புண்ய கர்மாக்களையெல்லாம் செய்தேனோ அந்த
கர்மாக்களின் பலன்களையெல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமாக உள்ள உனக்கு
அர்ப்பணிக்கிறேன். அவற்றை உன் பாணத்திற்கு லக்ஷ்யமாக ஏற்றுக் கொண்டு
விடு.” என்றார்.

அந்த வார்த்தைகளால்
ப்ரீதியடைந்த ஸ்ரீஇராமர், “பரசுராமரே! அப்படியே ஆகட்டும். உங்களுடைய
மனத்தில் ஏற்பட்டிருக்கும் மோக்ஷ இச்சையை நான் பூர்த்தி செய்வேன்.”
என்றார்.

அப்போது பரசுராமர் கூறிய கடைசி பதில் மிகவும் ஆச்சர்யகரமானது.

“பகவானே!
தங்களிடம் நிரந்தரமான பக்தியை வைத்திருக்கும் பாக்யம் ஏற்படவேண்டும் என்று
அனுக்ரஹிக்க வேண்டும். நான் இப்போது செய்த இந்த ஸ்துதியை வேறு யார்
படித்தாலும், அவர் பக்திஹீனர்களாக இருந்தாலும், உடனே உங்களிடம் திருடமான
பக்தி ஏற்பட்டு ஞானத்தைப் பெற வேண்டும் என்றும் அனுக்ரஹிக்க வேண்டும்”
என்று பரசுராமர் பிரார்த்தித்தார்.

இப்படி அத்யாத்ம இராமாயணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

வால்மீகி
இராமாயணத்தில் உள்ள கதையும் ஏறக்குறைய இப்படியே இருந்தாலும் பரசுராமருடைய
ஸ்துதி அத்யாத்ம இராமாயணத்தில் உள்ள படலத்தை மிகவும் விசேஷமாகச்
செய்துவிடுகிறது.

பரசுராமருடைய அவதார
ரகசியமும், சரித்திரமும், அதில் உள்ள விசேஷமான சம்பவங்களும் ப்ரஹ்மாண்ட
புராணத்திலும் மஹாபாரதத்தில் வேறு வேறு பர்வங்களிலும் கூறபட்டிருக்கின்றன.
ஹரிவம்சம் என்ற நூலிலும் உள்ளது.

ஒரு
சமயம் அக்னி பகவானுக்குத் தீராத பசி ஏற்படவே அவர் ஹேஹய வம்ச அரசனான
கார்த்தவீர்யார்ஜுனன் என்ற மன்னனிடம் சென்று தனக்கு ஏராளமான உணவை அளிக்க
வேண்டும் என்று யாசித்தார். அந்த அரசன், “அக்னி தேவரே! என்னுடைய ராஜ்யம்
விஸ்தாரமாகக் காடு மலைகள் நிறைந்ததாக உள்ளது. உங்களுக்கு வேண்டிய மட்டும்
எடுத்துக் கொண்டு திருப்தி அடையுங்கள்” என்று கூறிவிட்டான்.

அக்னி
பகவான் காடுகளையெல்லாம் எரித்துக் கொண்டு வருகையில் ஒரு வனத்தின் நடுவில்
ஆபவர் என்ற மஹரிஷி பர்ணசாலை கட்டிக் கொண்டு தபஸ் செய்து கொண்டிருந்ததைக்
கவனிக்கவில்லை. வனத்துடன் அந்த பர்ணசாலையையும் பஸ்மீகரம் செய்து விட்டார்
அக்னி.

அதனால் கோபம் அடைந்த மஹரிஷி
“கார்த்தவீர்யனே இந்த அட்டூழியமான கார்யத்திற்குக் காரணம். அவனும் அவனைப்
போன்ற க்ஷத்திரியர்களும் தங்களுடைய பெரும் ஐசுவர்யத்தாலும் பலத்தாலும்
அகம்பாவம் அடைந்துள்ளார்கள். அது எல்லை தாண்டி ஜகத்திற்கே விநாசமாக ஆகி
விட்டது. அதை அடக்க மஹாவிஷ்ணு பூமியில் அவதரிப்பார். பரசுராமர் என்ற
பெயருடன் விளங்கி க்ஷத்திரியர்களின் ஆணவத்தை அழிப்பார்.” என்று சபித்து
விட்டார்.

மஹாபாரதம் சாந்திபர்வத்தில்
ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு பரசுராமரின் சரித்திரத்தைத் தாம் பலர்
சொல்லக் கேட்டதாகக் கூறி அதை விஸ்தாரமாகக் கூறுகிறார். அது மிகவும்
சுவாரஸியமாக உள்ளது.

ஜஹ்னு மஹரிஷியின்
பேரர் ருசிகர் என்பவர். அவர் மூவுலகிலும் யாராலும் ஜயிக்க முடியாத புத்ரனை
விரும்பி பெரும் தவம் செய்தார். அதன் பலனாக தேவேந்திரனே அவருக்கு மகனாகப்
பிறந்தான். அவரே பின்னால் பெரும் க்ஷத்திரிய அரசராக விளங்கிய காதி
என்பவர். காதிக்கு ஒரு மகள் பிறந்தாள். அவள் பெயர் ஸத்யவதி. அவளை
பிராம்மணோத்தமராக இருந்த ரிசீகர் என்ற மஹரிஷிக்கு கன்யாதானம்
செய்துவிட்டார் காதி.

ரிசீகரின் மனைவி
ஸத்யவதி தனக்கு ஓர் உத்தமமான பிராம்மண குமாரன் பிறக்க வேண்டும்
புத்ரபாக்யம் ஏற்படாதிருந்த தன் தாய்க்கு ஒரு மஹாவீரனான க்ஷத்திரிய
குமாரன் பிறக்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கும்படி தன் கணவரிடம்
பிரார்த்தித்துக் கொண்டாள். தபோ பலம் நிறைந்தவரான அவர் வெவ்வேறான
பாத்திரங்களில் மந்திரபூர்வமாகச் (ஹவிஸ்) சருக்களைத் தயார் செய்து அதன்
விவரங்களைச் சொல்லி மனைவியிடம் அளித்தார்.

“இந்தச்
சருவை உன் தாயிடம் கொடு. அதை உரிய காலத்தில் நியமத்துடன் பூஜிக்கட்டும்.
இதில் யாராலும் வெல்ல முடியாதவனும் ரோஷம் நிறைந்தவனுமான க்ஷத்திரிய
குமாரனை உண்டாக்கக் கூடிய சக்தி மந்திர பலத்தால் ஏற்பட்டிருக்கிறது.”
என்று கூறி முதல் பாத்திரத்தைக் கொடுத்தார்.

மற்றொன்றைக்
கொடுக்கும்போது “சமம், தமம் போன்ற பிராம்மண்யமான குணங்களை உடைய ஒரு
குமாரன் பிறப்பதற்கு அனுகூலமாக, மந்திரபலம் இந்தச் சருவிற்கு
உண்டாக்கப்பட்டிருக்கிறது. இதை நீ பூஜிப்பாயாக!” என்று கூறினார்.

அந்த
ரகசியத்தை அறியாத கசியவதியின் தாய் தன் மகளுக்காகத் தயாரிக்கப்பட்ட சருவே
உயர்ந்ததாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தால் உந்தப்பட்டவளாக அதைத் தான்
சுவீகரித்துக் கொண்டுவிட்டாள். தனக்காகத் தயாரிக்கப்பட்ட மற்றொரு சருவை
மகள் பூஜிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தீர்த்த
யாத்திரை சென்றிருந்த ரிசீகர் கர்ப்பவதியாக இருந்த தன் மனைவி ஸத்யவதி
க்ஷத்திரியர்களுக்கு உரிய தேஜஸுடன் ஜ்வலிப்பதைக் கண்டவுடன் திடுக்கிட்டு
தன் யோகபலத்தால் நடந்ததை அறிந்தார்.

உடனே
மனைவியை அழைத்து, “பிராம்மண ஜாதிக்கு உரிய வீர்யம் யாவும் உனக்காகத் தயார்
செய்திருந்த சருவில் மந்திரங்களால் வைக்கப்பட்டன. உன்னை ஏமாற்ற எண்ணிய உன்
தாய் அதை உட்கொண்டு விட்டாள். க்ஷாத்திரமும் வீரமும் உள்ள
க்ஷத்திரியனுக்கு உரிய வீர்யம் வைக்கப்பட்ட மற்றொரு சருவை நீ உட்கொண்டு
விட்டாய். ஆகையால் உன்னுடைய தாயிடம் ஓர் உத்தமமான பிராம்மணனும் உன்னிடம்
போரிடும் ஸ்வபாவமுள்ள க்ஷத்திரியனும் பிறக்கப்போகிறார்கள்” என்று கூறினார்.

ஸத்யவதி
நடுநடுங்கி, அவரிடம் சரணமடைந்தாள். “என்னையறியாமல் இப்படிப்பட்ட தவறு
நடந்து விட்டது. அதை மன்னித்து எனக்கு பரம சாந்தகுணமுள்ள பிராம்மண குமாரன்
பிறக்கும்படி அருள்வீராக!” என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.

அப்போது ரிசீகர் சொன்னார்:

“மந்திரமும்
என் சொல்லும் வீண்போகாதவை. ஆனாலும் உன் பகவத் கிருபையால் ஒரு சிறு
மாறுதலைச் செய்கிறேன். உனக்குப் பிறக்கப்போகும் குமாரன் தபஸில்
ஆசையுள்ளவனாகவும் சாந்த குணம் நிரம்பியவனாகவும் நியமங்களை
அனுஷ்டிப்பவனாகவும் பிராம்மணனாகவும் இருப்பான். ஆனால் அவனுக்குப் பிறக்கப்
போகும் குமாரன் ஒருவன் சருவில் வைக்கப்பட்ட க்ஷத்திரிய குணங்களுடன்
கூடியவனாகவும் இருப்பான். அதைத் தவிர்க்க முடியாது” என்றார்.

இந்தத்
திருப்பத்தினால் காதி என்ற அரசருக்குப் புத்திரராகப் பிறந்த
விசுவாமித்திரர் கடுமையான நியமங்களுடன் தவம் செய்து பிரும்ம ரிஷியாக
ஆனார். குசிகரின் க்ஷத்திரிய குலம் விசுவாமித்திரரால் பிரம்ம குலமாக
உயர்ந்தது.

ரிசீகருக்கு மகனாகப் பிறந்த
ஜமதக்னி பரம சாந்தராக நர்மதை நதிக்கரையில் ஆசிரமவாசம் செய்து கொண்டு அக்னி
ஹோத்ராதி கார்யங்களுடன் தபஸ் செய்து கொண்டு வாழ்ந்தார். ஆனால் அவருக்கு
ஐந்தாவது குமாரராகப் பிறந்த பரசுராமர் தனுர்வேதம் அஸ்திர, சஸ்திர
வித்யைகள் எல்லாவற்றிலும் கரை கண்டவராக அக்னிபோல ஜ்வலிப்பராகவும்
பார்த்தவர்களெல்லாம் பயந்து நடுங்கும்படி செய்யக் கூடியவராகவும்
வளர்ந்தார்.

ஜமதக்னி முனிவரின் மனைவி
ரேணுகா என்ற பெயருடையவள். மஹா பதிவிரதையாக இருந்தாள். அவர்களுக்கு முதலில்
நான்கு புத்திரர்கள் பிறந்தார்கள். ருமண்வான், ஸுஹோத்ரன், வஸு, விசுவவஸு
என்று அவர்கள் பெயரிடப்பட்டிருந்தார்கள்.

அந்தக்
காலத்தில் க்ஷத்திரியர்கள் பூமியை ஆக்ரமித்துக் கொண்டும் தங்கள்
பலத்தினால் ஆணவத்தை அடைந்து ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும்,
கபடர்களாக, ஜனங்களைத் துன்புறுத்திக் கொண்டும் திரிந்தார்கள். அதனால்
வருத்தத்தை அடைந்த பூமிதேவி மஹாவிஷ்ணுவிடம் முறையிட்டுக் கொண்டாள்.

மஹாவிஷ்ணு
பூமிதேவியிடம் “நான் ஸாதுக்களைக் காப்பாற்றுவதற்காக பூமியில் அவதரிக்க
வேண்டிய காலம் வந்துவிட்டது. ஜமதக்னி முனிவரின் ஐந்தாவது குமாரனாகப்
பிறந்து அந்தக் காரியத்தைச் செய்து முடிப்பேன்” என்று உறுதிமொழி
அளித்தார். அப்படியே ரேணுகாவின் ஐந்தாவது குமாரனாகப் பிறந்து ‘இராமன்’
என்று பெயரிடப்பட்டார், பின்னால் ‘பரசு’ என்ற ஆயுதத்தை ஏந்தி யுத்தங்களைச்
செய்ததால் ‘பரசுராமர்’ என்ற பெயரால் அறியப்படலானார்.

பரசுராமர்
தன் தந்தையின் ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டு தன் சகோதரர்களையும் தாயையும்
கொன்றதையும் பிறகு தந்தை அளித்த வரத்தின் மூலமாக அவர்களைப் பிழைத்து எழச்
செய்ததையும் பாகவதம், பிரம்மாண்ட புராணம் போன்றவை விவரமாகக் கூறுகின்றன.
அது பிரஸித்தியாகவும் இருக்கிறது.

பிறகு
பரசுராமர் தன்னுடைய தந்தையின் அனுமதியுடன் ஹிமயமலைச் சாரலுக்குச் சென்று
சிவபெருமானைக் குறித்து தவம் செய்தார். அவருடைய அருளால் பல அஸ்திர,
சஸ்திரங்களையும் பெற்றார். அப்படி அவர் பெற்ற ஆயுதங்களில் ஒன்றே பயங்கரமான
பரசு என்ற கோடரி ஆயுதம்.

அவருடைய
தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டது விஷ்ணுவின் வில்(தனுஸ்). அதன் கதை
ஸ்ரீமத் வால்மீகி இராமாயணம் பாலகாண்டத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஏதோ
ஒரு காலத்தில் தேவர்கள் தங்களுக்குள் “விஷ்ணு, சிவன் இருவரில் யார் அதிக
சக்தி உடையவர்?” என்று சர்ச்சை செய்து கொண்டிருந்தார்கள். அதையறிந்த
பிரம்மதேவர் தேவதச்சரான விசுவகர்மாவை அழைத்து “ஒரே மாதிரியான இரு பெரிய
தனுஸ்களைத் தயார் செய்!” என்று உத்தரவிட்டார். அவற்றில் ஒன்றை சிவனிடம்
கொடுத்தார். மற்றொன்றை விஷ்ணுவிடம் கொடுத்தார். இருவருக்கும் இடையே
பயங்கரமான யுத்தத்தை மூட்டிவிட்டார்.

‘போதும்,
போதும்’ என்ற தேவர்கள் கெஞ்சும் வரை அந்த த்வந்த்வ யுத்தம் நீடித்தது.
சிவனுடைய தனுஸின் சக்தி கொஞ்சம் குறைந்து வந்ததாக தேவர்களுக்குத்
தோன்றியது. ‘விஷ்ணுவே அதிக பலவான்’ என்று அவர்கள் வீண்பேச்சைத்
தொடங்கியதும் சிவபெருமான் கோபமுற்று தன்னிடமிருந்த (சிவ) தனுஸை
மிதிலாதிபதியாக இருந்த தேவ விரத ஜனகரிடம் கொடுத்துவிட்டு மறைந்து போனார்.
அதைப் பார்த்த மஹாவிஷ்ணுவும் தன் பங்கிற்கு தன்னிடமிருந்த (வைணவ) தனுஸை
ரிசீகர் என்ற தம் பரம பக்தரிடம் கொடுத்து விட்டு மறைந்து விட்டார். அந்த
விஷ்ணு தனுஸ்ஸை ரிசீகரிடமிருந்து அவருடைய புத்திரரான ஜமதக்னி மஹரிஷி
பெற்றுக் கொண்டு பின்னால் தனக்கு ஐந்தாவது புத்ரராகப் பிறந்த பரசுராமரிடம்
அதை அளித்தார்.

சிவதனுஸ் ஸீதா ஸ்வயம்வரத்தின் போது ஸ்ரீஇராமனால் பங்கம் செய்யப்பட்டது. விஷ்ணு தனுஸ் பரசுராமரிடமிருந்து அவரால் பெறப்பட்டது.

பரசுராமரின்
அவதாரகாரியம் என்பது க்ஷத்திரியர்களின் வதமும் கர்வபங்கமும் ஆகும். அதை
அவர் தொடங்கி நடத்திய கதை பிரம்மாண்ட புராணத்திலும் மஹா பாரதத்திலும் சிறு
சிறு வித்தியாசங்களுடன் உள்ளது.

ஹேஹய
மன்னன் கார்த்த வீர்யனுக்கும் அவனுக்கு முன்னிருந்த ஹேஹய தேச
அரசர்களுக்கும் ஜமதக்னியின் முன்னோர் குல குருக்களாக
இருந்திருக்கிறார்கள். ஆனால் காலத்தின் போக்கில் அந்த உறவு
விட்டுப்போயிற்று.

ஒரு முறை கார்த்த
வீர்யன் வனத்தில் வேட்டையாடிக் கொண்டு வருகையில் பசி தாகத்தால் களைத்துப்
போனான். அவனும் அவனுடன் வந்த மற்ற மந்திரி பிரதானிகளும் படைவீரர்களும்
நர்மதைக் கரையிலிருந்த ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் தங்கி
இளைப்பாறினார்கள். அதிதி ஸத்காரம் செய்ய விரும்பிய ஜமதக்னி தன்னிடம்
இருந்த சுசீலை என்ற பெயருடைய காமதேனுவைப் பிரார்த்தித்து அவளுடைய
கிருபையால் அரசனையும் பரிவாரங்களையும் நன்கு உபசரித்து உணவளித்து
திருப்தியடையச் செய்தார். மன்னன் தன்னுடைய ராஜதானிக்குப் போனதும்
முனிவரிடம் காமதேனு இருப்பதை அறிந்தான். உடனே தன்னுடைய துர்மந்திரி ஒருவனை
அவரிடம் அனுப்பினான்.

“மன்னர் உங்களுக்கு
ஒரு கோடி பசுக்களைத் தானமாக அளிக்க எண்ணுகிறார். பதிலுக்கு உங்களிடம் உள்ள
காமதேனுவை அடைய விரும்புகிறார்.” என்று அந்த மந்திரி முனிவரிடம் சொன்னார்.

ஜமதக்னிக்கு அந்தக் காமதேனுவை விட்டுப் பிரிய மனம் இல்லை.

“எனக்கு
அந்தத் தானமும் வேண்டாம். என்னிடம் உள்ள அந்தத் தெய்விகப் பசுவை
அனுப்பும்படி நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தவும் வேண்டாம்.” என்று
மறுத்து பதிலளித்து விட்டார். ஆனால் அந்த மந்திரியின் ஆக்ஞைப் படி
படைவீரர்கள் அந்தக் காமதேனுவைப் பிடித்து பலவந்தமாக இழுத்துச் சென்று
விட்டார்கள். அவர்கள் பின்னாலேயே ஜமதக்னியும் கதறிக் கொண்டு ஓடினார்.
வழியில் அவரிடம் கோபம் கொண்ட மந்திரி அவரை அடித்து வீழ்த்திவிட்டு
பசுவுடன் சென்று விட்டான். அவரைப் பின்தொடர்ந்து ஓடி வந்த அவர் பத்னி
ரேணுகா, ரத்தத்தில் தோய்ந்து உயிர் விடும் தருவாயில் இருந்த அவரைக் கண்டு
தன் மார்பில் அடித்துக் கொண்டு கதறியழுதாள்.

காட்டிற்குள்
ஸமித்துகளைச் சேகரித்து வரச் சென்றிருந்த பரசுராமர் ஆசிரமத்திற்கு
வந்தபோது அது இருந்த அலங்கோலத்தையும் தன் தாய் தந்தை அங்கு இல்லாததையும்
கண்டு பதறிப்போய் தேடியலைந்து ஜமதக்னி வீழ்ந்து கிடந்த இடத்திற்கு வந்து
சேர்ந்தார். தன் தந்தையின் உயிரற்ற சடலத்தைத் தன் மடியில் கிடத்திக்
கொண்டு கதறிக் கொண்டிருந்த தாயையும் கண்டார். அவளிடமிருந்து எல்லா
சமாசாரங்களையும் அறிந்தவுடன் ஆக்ரோஷம் அடைந்து ஒரு பயங்கரமான சபதத்தைச்
செய்தார்.

“கார்த்த வீர்யனின் ஆயிரம்
கைகளையும் அறுத்து அவனைக் கொல்லுவேன். என் தாய் இருபத்தொரு முறை தன்
மார்பில் அறைந்து கொண்டு புலம்பினாள். அதையே ஒரு கணக்காக வைத்துக் கொண்டு
உலகத்தில் க்ஷத்திரியர்களின் பூண்டே இல்லாமல் இருபத்தொரு தலைமுறைக்கு
அவர்களை அழிப்பேன்.” என்பதே அந்தச் சபதம்.

பிறகு
பிருகு முனிவரின் சடலத்தை சிதையில் இட்டு தீமூட்டும் சமயத்தில் அங்கு
சுக்ரபகவான் வந்து சேர்ந்தார். தமக்கு ஸித்தியாகியிருந்த ‘மிருத
ஸஞ்ஜீவினி’ என்ற மந்திர பலத்தைக் கொண்டு ஜமதக்னி முனிவரை உயிர் பிழைக்கச்
செய்தார்.

சுசீலை என்ற காமதேனு தன் கன்றை அரண்மனையில் விட்டு விட்டு தானாகவே ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தது.

பரசுராமர்
தான் செய்த சபதத்தை நிறைவேற்றுவதற்காக, தன்னந்தனியாக மாஹிஷ்மதீ
நகரத்திற்குச் சென்றார். கோட்டை வாயிலில் நின்று கொண்டு மன்னனைப் போருக்கு
அழைத்தார். தன் வினையால் தூண்டப் பட்ட கார்த்தவீர்யன் தன் படைபலத்துடன்
கோட்டைக்கு வெளியில் வந்து தன் ஆயிரம் கரங்களில் ஐநூறு விற்களை ஏந்தி
பரசுராமருடன் போரிட்டான். பரசுராமர் தன்னுடைய ஒரே வில்லிருந்து விட்ட
பாணங்களாலும் அஸ்திரங்களாலும் படைவீரர்களைக் கொன்று விட்டு
கார்த்தவீர்யனையும் வென்றார். தன்னுடைய பரசு என்ற ஆயுதத்தால் அவனுடைய
ஆயிரம் கைகளையும் தலையையும் வெட்டி எறிந்தார்.

பிறகு தன் சீடரை அனுப்பி காமதேனுவின் கன்றை மீட்டுக் கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்பினார்.

ஆனால் ஜமதக்னி முனிவர் தன் புதல்வர் செய்த காரியத்தை அறிந்து மனம் வருந்தினார். அவர் கூறினார்!

“ஹே
இராம! நாம் பிராம்மணர்கள். பொறுமையே நமக்குக் கவசம். பழிவாங்குவதும்
அதற்காகப் போர் செய்து வதம் செய்வதும் நமக்குரியவை அல்ல. நீ செய்த இந்தக்
கொடும் செயலுக்காக பிராயச் சித்தம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நீ
மஹேந்திர கிரிக்குச் சென்று அன்ன ஆகாரத்தை விடுத்து தபஸ் செய்து உடலை
வருத்திக் கொண்டு கடும் பிராயச்சித்தம் செய்து வருவாயாக. அப்படியே பல
புண்ணிய தீர்த்தங்களிலும் ஸ்நானம் செய்துவிட்டு ஓர் ஆண்டு காலம் கழித்துத்
திரும்பி வருவாயாக!”

இப்படிக் கூறி
பரசுராமரை அனுப்பிவைத்தார். தந்தையின் சொல்லைத் தட்டாதவரான பரசுராமர்
அப்படியே செய்து விட்டுத் திரும்பி வந்தார். ஆசிரமத்தில் இயல்பு வாழ்வு
திரும்பியது போலத் தோன்றியது.

ஆனால் அவதார காரியம் நிறைவேற வேண்டுமே!

கார்த்தவீர்யனின்
மகன் சூரசேனன் தன் தந்தையின் வதத்திற்குப் பழிவாங்கத் தயாரானான். தன்
படையுடன் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வந்தான். பரசுராமர் அங்கு இல்லை என்று
தெரிந்ததும் யாகசாலைக்குச் சென்றான். அங்கே முனிவர் கண்களை மூடிக்கொண்டு
தனிமையில் தியானத்தில் வீற்றிருந்ததைக் கண்டான்.

அதுவே
தக்க தருணம் என்று நினைத்து அவருடைய சிரத்தைத் தன் வாளினால் அறுத்து
எடுத்துச் சென்றான். பரசுராமர் திரும்பிவந்தபோதுதான் என்ன நடந்தது என்பது
தெரிந்தது.

தலையற்ற பிதாவின் சடலத்தை
ஸம்ஸ்காரபூர்வமாக தகனம் செய்தார்கள் புதல்வர்கள். அந்த சிகாக்னியில்
ரேணுகா மாதா ஸஹகமனம் செய்து பதிவ்ரதா தெய்வமாக ஆனாள்.

அப்போதிலிருந்து பரசுராமரின் இருபத்து ஒரு முறை பூப்பிரதக்ஷிணமும் இருபத்தொரு தலை முறை க்ஷத்திரிய வதமும் தொடங்கின.

மஹாபாரத இதிஹாஸத்தில் ஆதிபர்வத்தில் இரண்டாவது அத்யாயத்திலேயே பரசுராமரைப் பற்றிய சில விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

திரேதாயுகம்
துவாபரயுகம் இரண்டின் ஸந்தியில் பரசுராமர் க்ஷத்திரியர்களிடம் கடும் கோபம்
கொண்டு பூமியை ஆண்டு வந்த அரசர்களில் க்ஷத்திரிய ஜாதியினரை அடிக்கடி வதம்
செய்தார். ஸமந்த பஞ்சகம் என்ற இடத்தில் ஐந்து மடுக்களை ஏற்படுத்தி
அவற்றைத் தாம் வதம் செய்த க்ஷத்திரியர்களின் ரத்தத்தால் நிரப்பினார்.
பின்னர் அந்த ரத்தத்தால் தன் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்தார்.

அவர்
ஸாஹஸமாகச் அந்தக் செய்த காரியத்தால் ரிசீகர் முதலான பிதிருக்கள் பிரீதியை
அடைந்தார்கள் என்றும் ‘உனக்கு வேண்டிய வரத்தைப் பெற்றுக் கொள்’ என்று
சொன்னதாகவும் கூறப்படுகிறது.

அவர்
கேட்டவரம், “நான் கோபத்தால் தூண்டப்பட்டு க்ஷத்திரியர்களை அழித்தேன்.
அந்தப் பாபத்திலிருந்து நான் விடுபடும்படி என்னை ஆசிர்வதிக்க வேண்டும்.
இந்த மடுக்களில் நீர் நிரம்பி புண்ணிய தீர்த்தங்களாக மாறி பூமியில்
பிரஸித்தமாக இருக்கவேண்டும்.” என்பது தான்.

அந்த மடுக்கள் உள்ள இடமே துவாபர-கலியுக ஸந்தியில் கௌரவர்களும் பாண்டவர்களும் பெரும்போர் செய்த குருக்ஷேத்திரம் என்று கூறுகிறார்கள்.

பரசுராமர் தன் அவதார கார்ய முடிவில் பல தான தருமங்களைச் செய்து பாபசமனம் செய்து கொண்ட விவரம் மஹாபாரதத்தில் வனபர்வத்தில் உள்ளது.

பிரதாபசாலியான
பரசுராமர் பெரும் யாகம் ஒன்றைச் செய்து தேவேந்திரனுக்குத் திருப்தியை
அளித்தார். பிரம்மாவின் அறிவுரையை ஏற்றுக்கொண்டு தாம் ஜயித்து அடைந்த பூமி
முழுவதையும் யாகத்தை நடத்திக் கொடுத்த கசியப முனிவருக்குத் தானமாக
அளித்தார். நாற்பது முழ நீள அகலமும் முப்பத்தாறு முழ உயரமும் உள்ளதாக ஒரு
ஸ்வர்ண வேதிகையை (யாக குண்டம்) அமைத்து அதையும் கசியபருக்கும் மற்ற
பிராம்மணர்களுக்கும் கட்டம் கட்டமாகப் பிரித்து, அளித்து விட்டார் என்று
கூறப்பட்டிருக்கிறது.

அவரிடம் மீதமாக இருந்தவை, புண்ணியபலன்களும், தனுர்வேதமும், பஞ்சபூதங்களால் ஆன சரீரமும் மாத்திரமே.

புண்ணிய பலன்களை ஸ்ரீஇராமருடைய பாணத்திற்கு இரையாக அளித்துத் தியாகம் செய்தார். அது ப்ரஹ்மார்ப்பணமாக ஆயிற்று.

தம்மை
நாடி வந்து தனுர் வித்யையும் அஸ்திர சஸ்திர வித்யையும் யாசித்த துரோணர்
என்ற பிராம்மணருக்கு அவற்றை அளித்து விட்டார் என்ற கதையும் மஹாபாரதத்தில்
உள்ளது.

துரோணர் யாசகமாக அவரைத் தேடி
வந்தபோது பரசுராமர் “பிராமணரே! நான் என்னிடமிருந்த எல்லா தனங்களையும்
கொடுத்து விட்டேன். இப்போது மீதமாக இருப்பவை தனுர் வித்யையும் இந்த
சரீரமுமே. உமக்கு இவை இரண்டில் எது வேண்டுமோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.”
என்றார்.

“எனக்கு தனுர் வித்யைத்
தாருங்கள்” என்று துரோணர் கேட்க அதை அளித்தார் பரசுராமர். பிறகே கல்பம்
முடியும் வரை தபஸில் ஆழ்ந்திருப்பதற்காக மஹேந்திரகிரிக்குச் சென்றார்.”
என்று அவருடைய சரித்திரம் முடிகிறது.
                                                                         கே.நாராயணசாமி
thanks:http://ammandharsanam.com