ஏட்டில் இல்லா கதைகள்



கோசலையின் மகனுக்கு வசிட்டர் "இராமன்' என்றுதான் பெயரிட்டார். "இராமன் எனப் பெயர் ஈந்தனன்' என்பது கம்பன் வாக்கு.

"இன்பத்தின் இருப்பிடம், அகில உலகுக்கும் அமைதி தருபவன் ஆதலால் இராமன் என்ற பெயரே சிறந்தது' என்று வசிட்டர் பெயரிட்ட தாக துளசி மகா முனிவரும் இதனை உறுதிப் படுத்துகிறார்.


உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் இராம காதை இருந்தாலும், அனைத்துக் கதைகளிலும் இராமன் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தனர்.

ஆனால் நடைமுறையில் இராமச்சந்திரன் என்றே பண்டிதர் முதல் பாமரர் வரை வழங்குகின்றனர்.

நாட்டுப்புறக் கதையாக உருவான இராம கதைக்கு ஏட்டுப்புற வடிவம் கொடுத்தவரும் வேடர் குலத்தவரான வால்மீகிதானே!

நாட்டுப்புறவாசியின் கற்பனை இன்பம் கண்ட நாட்டுப்புறக் கலைஞன் சும்மா இருப்பானா...?

தன்னுடைய கற்பனையும் அதனுடன் இணைந்து- இயைந்து இருக்க வேண்டும் என்று எண்ண மாட்டானா?

இதன் அடிப்படையிலேயே இராமச்சந்திரன் பெயர் காரணத்தை கற்பனைக் கதையாக வடித்து விட்டான்.

துளசி இராமாயணம் இயற்றிய துளசிதாசரே இராமரின் குழந்தைப் பருவ லீலைகளை பலப்பட பாடியுள்ளார்.

அதில் ஒரு கதை...

கைகேயி இராமனைத் தன் இடுப்பில் வைத்துப் பாலமுது ஊட்டிக் கொண்டிருக் கிறாள்.

இராமன் நிலவினைக் காட்டி, "சந்திரன் என்னுடன் விளையாட வரவேண்டும்' என்று அடம் பிடிக்கிறான்.

நிலா நிலா ஓடிவா...

நில்லாமல் ஓடிவா...

என்று பாடத்தான் முடியும். நிலவை இப்பூவுலகுக்குக் கொண்டு வருவது எப்படி?

இராமனின் பிடிவாதம் ஓயவில்லை. நிலவைக் கொண்டு வரமுடியாது. நிலா இல்லாமல் இராமன் சோறு உண்ண மாட்டான்.

தாய்
கைகேயி எத்தனையோ போக்குக் காட்டி முயன்றும் இராமனை சாப்பிட வைக்க முடிய
வில்லை. இராமன் பட்டினி கிடப்பதை எப்படிப் பொறுப்பது... கைகேயி கண்களில்
கண்ணீர்.

இப்பிரச்சினையைத் தீர்க்க தாதி ஒருத்தி முன்வந்தாள்.

ஒரு
பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வந்து இராமன் அருகில் வைத்தாள். அந்தத்
தண்ணீரில் சந்திரனின் பிம்பம் தெரிந்தது. "இராமா இதோ பார்! சந்திரன்
வந்துவிட்டான். அவனைப் பார்த்துக் கொண்டு சாப்பிடு' என்றவாறு கைகேயி
பாலமுதை ஊட்டலானாள்.

இராமனும் பிடிவாதத்தைவிட்டு சந்திரனைக் கண்ட மகிழ்வுடன் சாப்பிடத் தொடங்கினான்.

இந்த நிகழ்ச்சி நடந்தது முதல் இராமன் பெயருடன் சந்திரன் பெயரும் இணைந்து உலகம் முழுவதும் இராமச்சந்திரன் என அழைக்கப்பட்டான்.

எச்சில் இலை எடுத்த இறைவன்

பாண்டவர்கள் ஒரு முறை "இராஜ சூய யாகம்' செய்தனர். பல நாட்டு அரசர்களும் விருந்தினராக வந்தனர்.

"சபையில் முதலில் பூஜிக்கத் தகுந்தவர் யார்?' என்ற வினா எழுந்தது.

பல்கலைகளில்
தேர்ந்தவனான சகாதேவன் எழுந்து, ""ஆன்றோர்களே! அரசர்களே! இவ்வுலகம் எவருடைய
வடிவம்? வேள்விகள் யாருடைய உருவம்? அப்படிப்பட்டவனே முதல் பூஜை பெறத்
தகுதியுடையவன்! அத்தகை யோரில் நம்மிடையே கண்ணனைத் தவிர வேறு யாரும் இலர்.
அதனால் அவருக்கே பூஜை செய்வோம். அப்படிச் செய்தாலே எல்லா உயிர் களுக்கும்
செய்ததற்கு ஒப்பாகும்'' என்றான்.

அவன் சொல்லியதை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் எதிராக சிசுபாலன் மட்டும் இதனை எதிர்த்தான்.

அவன் எதிர்ப்பைக் கண்டு சினந்த அரசர் பலர் அவனைக் கொல்ல எழுந்தனர். நிலைமை மோசமடைந்தது.

இதனை அறிந்த கண்ணன்... பிறரின் பழிக்கு ஆளாகாமல் சிசுபாலனை தானே அழித்தார்.

பின்னர் சகாதேவன் சொன்னபடி கண்ணனுக்கு முதல் பூஜை செய்தனர்.

கண்ணன் ஓர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்து அருங்காட்சி அளித்தான்.

இராஜசூய வேள்வி தொடர்ந்து நடைபெற்றது.

ஒரு பக்கம் பல்லாயிரம் பேருக்கு விருந்து படைக்கப் பட்டது.

இந்நிலையில்,
ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த கண்ணனைக் காணவில்லை. எல்லாரும்
தேடினர். நெடுநேரம் எங்கெல்லாம் தேடியும் கண்ணன் தென்படவே இல்லை.

இறுதியில்
விருந்து நடந்து முடிந்த இடத்தில் கண்ணன் காணப்பட்டான். விருந்தினர் உண்ட
எச்சில் இலைகளை அள்ளி அப்பால் கொட்டும் பணியில் மும்முரமாய்
ஈடுபட்டிருந்தான்.

"முதற்பூஜை பெற்ற பரம்பொருள் எச்சில் இலை எடுப்பதா...!' என எல்லாரும் வியந்தனர்.

""கண்ணா!
எச்சில் இலை எடுக்க எத்தனையோ பேர் இருக்க, நீர் இக்காரியம் செய்யலாமா?
முதற்பூஜை பெற்ற நீ எச்சில் இலை எடுக்க அனுமதிப்பது அவமதிப்பது ஆகாதா...?
உடனே நிறுத்து... எச்சில் பட்ட உடைகளை மாற்றிக் கொண்டு சிம்மாசனத்தில்
இருந்து காட்சி தா'' என வேண்டி நின்றனர்.

""எச்சில் இலை எடுப்பது
இழிவான செயலா? ஏவலர் எடுக்கும்போது அக்கறை இல்லாமல் இங்கும் அங்கும்
ஒழுகவிட்டுத் தரையை சேறாக்குகின்றனர். அவ்வாறு செய்வது மறு பந்தியில்
அமருவோர்க்கு இடையூறாய் இருக்காதா...? ஆதலால் எச்சில் இலையை எவ்வாறு
சிந்தாமல் சிதறாமல் எடுப்பது என்று செய்து காட்டினேன். சொல்லிக் காட்டுவதை
விட செய்து காட்டுவது மிகப் பயன்தானே...?

அதுமட்டுமா...? தொழிலில்
ஏற்றத்தாழ்வு உண்டா...? முதல் பூஜை பெறுவதும் ஒரு தொழில்தான். எச்சில் இலை
எடுப்பதும் ஒரு தொழில்தான். இரண்டுக்கும் இடையில் வேறுபாடு காண்பவன்
மூடன். முதல் பூஜை பெற்ற நான் எச்சில் இலை எடுப்பதை இழிவாகக் கருதினால்
நான் பெற்ற முதல் பூஜை தகுதிக்காக பெற்றதாகுமா? பகட்டுக்காகத்தானே
பெற்றதாக ஆகும்'' என்றான் கண்ணன்!


                                                                                -எழிலானந்தா