தீராத நோய்களை தீர்க்கும் திரிலிங்கமூலிகை தான்றிக்காய்


    னாதியாய்- அகண்ட பரிபூரணமாய்- வெளியாய்- காற்றாய்- நெருப்பாய்- இருட்டாய்- சுத்த சூன்யமாய்- நிறையாய்- உருவ மாய்- அருவமாய்- ஆக்குபவனாய்- காப்பவனாய்- அளிப்பவ னாய்- ஏகாந்தப் பரம்பொருளாய் வீற்றிருக்கும் இறைவனே!


எம்மையும் மானுடனாய்ப் படைத்து ஜீவன் முக்தி பெற வாய்ப்பளித்தவனே! உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள். நீ படைத்த எண்பத்து நான்கு லட்சம் உயிரினங்களில் மானுடப் பிறப்பே மிக உன்னதமானது என்பதை எமக்கு உணர்த்தியுள்ளீர். மோட்சத்திற்குரிய மனிதப் பிறப்பை அருளியுள்ளீர்.

புல்லாய்ப் பிறந்து புவியில் உழன்று மறுபிறவி கண்டோம். ஆடாய், மாடாய், மரமாய், குரங்காய் பல பிறவிகளில் பரிணாமம் கண்டு, கடைசியாய் மனிதனாய்ப் பிறந்து சிவத்துவமிக்க இந்த ஜீவனை உன்னுள் கலந்திட, உணர்வு கலங்கி உருகி வேண்டுகிறோம் இறைவா!

தன்னையறியும் கலையே உன்னை அறியும் நிலை என்பதை உணர்ந்து, உன்னுள் கலந்த சித்தர்களையும் சித்தருள் கலந்த தாவர வர்க்கங் களையும் எம்முள் கலந்து மோட்சம் பெற முனைகிறோம் இறைவா!

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மாபெரும் தெய்வசக்தி உறங்கிக் கொண்டிருப்பதை பல்லாயிரம் சித்தர் பெருமக்கள் வாயிலாக உணர்த்தி வரும் வள்ளலே! உறங்கும் மகா சக்தியை எழுப்பும் வல்லமையை எமக்குத் தந்தருள் பரம்பொருளே!

உன் அருள் பெற்ற திரிலிங்க மூலிகையாம் தான்றிக்காயை மருந்தாய்ப் பாவித்து, ஆணவம், மாயை, கன்மம் என்னும் முக்குணங்களை நீக்கி, உடல்சாரும் எப்பிணியும் போக்கி ஜீவன் முக்தி பெற உம் அருளாசி வேண்டும் ஏகாந்த நாதனே!

பதஞ்சலி வகுத்த யோக நியதிகளான இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகிய அனைத்தும் எமக்கு நல்கி, உன்னுள் கலக்கும் உன்னத முக்தியை எமக்குத் தா ஐயா!

இக்கலியுகத்தில் கபட வேடம் பூண்டு, மூச்சைப் பிடிக்கவும் இழுக்கவும் அடக்கவும் சொல்லிக் கொடுத்து தீட்சையளிக்கும் கம்ப்யூட்டர் ஞானிகள், சிவன் சொத்தைக் காசாக்கிப் பாவம் தேடி அடுத்த பிறப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் குருவழி நடந்தால்தான் தீட்சை கிடைக்கும் என்பதை சித்தர்கள் அருளியுள்ளனர். ஆனால் இன்றோ மூன்று மணி நேரம் கண்ட தைப் பிதற்றி நம்ப வைத்து, காசைப் பறித்து தீட்சை தரும் காவிகள் ஏராளம். அவர்களை எம் எண்ணில் காட்டாத உனக்கு கோடானு கோடி நமஸ்காரங்கள்.

சித்தர்கள் சொன்னபடி, பன்னிரண்டு ஆண்டுகள் நீ அருளிய தான்றிக்காயை கற்ப மருந்தாய்ப் பாவித்து, நோய் நீங்கி சுத்த தேகம் பெற்று, உன்னையே நினைத்து யோக வாசல் நுழைந்து ஞானம் பெற முயல்வோம் இறைவா!

பிறவிப் பெருங்கடல் நீந்தி, உன் அடி சேர தான்றிக்காயைச் சரணடைந்து உடல்நலம் பெற முனைகிறோம் பரம்பொருளே!

மலச்சிக்கல் நீங்க...

தான்றிக்காய், கடுக்காய் வகைக்கு 100 கிராம்- ரோஜாப்பூ, ஆவாரம்பூ, நிலாவரை, வாய்விளங்கம் வகைக்கு 50 கிராம்- இவற்றை ஒன்றாக்கித் தூள் செய்துகொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு பொடியை இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வெந்நீர் அருந்தினால் மலம் சிக்கலின்றிக் கழியும்.

உடல் இரும்பைப்போல் உறுதியாக...

தான்றிக்காய், தேற்றான் கொட்டை வகைக்கு 100 கிராம்- ஜாதிக்காய், சாலாமிசிரி வகைக்கு 50 கிராம்- சுக்கு, மிளகு, திப்பிலி வகைக்கு 25 கிராம்- சாரப் பருப்பு 150 கிராம்- இவற்றை ஒன்றாய்க் கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டு சூடான பால் அருந்திவர, இளைத்த உடல் பருக்கும். முப்பிணிகளும் விலகும். உடல் உஷ்ணம் நீங்கும். வெள்ளை வெட்டை நீங்கும். உடல் இரும்பைப்போல் உறுதியாகும். இதயம் பலப்படும். ரத்த அழுத்தம் சீரான நிலைக்கு வரும்.

பல்வலி குணமாக...

தான்றிக்காயைச் சுட்டு மேல்தோலைப் பொடித்து, அதன் எடைக்குச் சமமாய் சர்க் கரை கலந்து தினசரி காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல்வலி, ஈறுநோய்கள் போன்றவை குணமாகும்.

அம்மை நோய் குணமாக...

தான்றிக்காய் தோலைச் சேகரித்து சூரணம் செய்துகொள்ளவும். இதில் அரை ஸ்பூன் பொடியைத் தேனில் கலந்து தினசரி சாப்பிட்டு வர அம்மை நோய்கள் தீரும்.

கண்பார்வை தெளிவடைய...

தான்றிக்காய் தோலை கால் கிலோ அளவில் தூள் செய்து கொள்ளவும். பொன்னாங்கண்ணிக் கீரையை இடித்துப் பிழிந்த சாறு அரை லிட்டர் எடுத்து தான்றிக்காய் பொடியுடன் கலந்து, நன்கு பிசைந்து வெயிலில் காயவைத்து உலர்த்தவும். இதில் இரண்டு கிராம் வீதம் காலை- இரவு இருவேளையும் உணவுக்குப் பின் சாப்பிட்டுவர, கண்பார்வை கூர்மை யாகும். கிட்டப்பார்வை, எட்டப்பார்வை போன்ற கோளாறுகள் சரியாகும்.

இரைப்பு, ஆஸ்துமா குணமாக...

தான்றிக்காய் தோல், திப்பிலி, அதிமதுரம் ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் எடுத்துத் தூள் செய்து கொள்ளவும். இதில் பத்து கிராம் அளவு எடுத்து, அரை லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, நான்கில் ஒரு பாகமாய் சுண்டச் செய்து கசாயத்தை வடிகட்டி, காலை- மாலை இருவேளையும் 100 மி.லி. அளவில் சாப்பிட்டு வர எப்பேர்ப்பட்ட ஆஸ்துமாவும் குணமாகும். மூச்சிரைப்பு, மூச்சுத்திணறல், படபடப்பு போன்ற குறைபாடுகள் எளிதில் குணமாகும்.

ஆறாத புண் ஆற...

தான்றிக்காயை உடைத்தால் அதற்குள் பருப்பிருக்கும். சர்க்கரை நோயால் உண்டாகும் புண்ணைக்கூட குணப்படுத்தும் வல்லமை இதற்கு உண்டு. பின்வரும் தைலம் சித்தர்களின் அருளாசி கொண்டு மானுட மேன்மைக்காக மறைக்காமல் சொல்லப்படுவதாகும். சற்று சிரமம் பார்க்காமல் இத்தைலத்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள்.

தான்றிக்காய் தோல் 50 கிராம்- புளியங் கொட்டைத் தோல், சீயக்காய், மஞ்சள் ஆகியவை வகைக்கு 20 கிராம்- இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து இளநீர் விட்டு அரைத்து வைக்கவும். பின்னர் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை அடுப்பிலேற்றி சிறுதீயாய் எரிக்கவும். எண்ணெய் நன்கு சூடானதும் அரைத்த விழுதை கொஞ்சங் கொஞ்சமாய் சேர்க்கவும். எண்ணெய் பொரிந்து அடங்கிய பின் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற வைத்து வடிகட்டிப் பத்திரப்படுத்தவும்.

இந்த மருந்து ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நன்மருந்து. வாய்ப்புண், மூக்குப்புண், லேசாய் தடவிட உடனே குணமாகும். சேற்றுப் புண், வெட்டுக்காயங்கள் விரைவில் ஆறிவிடும். சர்க்கரை வியாதியில் உண்டாகும் புண்ணால் கை, கால்கள் வெட்டி எறியப்படுவதை இன்று சாதாரணமாய்க் காண்கிறோம். இந்த மருந்தைச் செய்து வீட்டில் பத்திரப்படுத்துங்கள். ஆறாத புண்ணா...? சித்தர்களை மனதில் நினைத்துப் பூசி வாருங்கள். புண் இருந்த இடம் தெரியாமல் மறையும்.

மூலநோய்கள் தீர...

தான்றிக்காய், கடுக்காய், நெல்லிக்காய், நாயுருவி இலை, துத்தி இலை, அம்மான் பச்சரிசி, பிரண்டை, பொடுதலை, அத்தி, ஆவாரம்பூ ஆகிய வற்றை வகைக்கு 100 கிராம் அளவு எடுத்து உலர்த்தி, ஒன்றாகக் கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் காலை- மாலை இருவேளை யும் உணவுக்குப்பின் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவு 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். இதனால் உள்மூலம், வெளிமூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ஆசன அரிப்பு, கடுப்பு, ஆசன வெடிப்பு, பௌத்திரக் கட்டி போன்ற மூலம் சார்ந்த அனைத்து நோய்களும் தீரும்.

ரத்தசோகை விலக...

சமீபத்திய மருத்துவ அறிக்கைப்படி, இந்திய மருத்துவர்களில் சுமார் 60 சதவிகித மருத்துவர் கள் ரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட் டுள்ளனர். மருத்துவர்கள் கதியே இப்படியென் றால் மக்களின் கதியைச் சொல்லவா வேண்டும்? நம் நாட்டுப் பணக்கார வர்க்கத்தினர் சுமார் 70 சதவிகித அளவில் ரத்தசோகைக்கு உட்பட்டவர்கள்தான். ரத்தசோகை மெல்லக் கொல்லும் கொடிய வியாதி. கோடிக்கணக்கில் பணம் கொட்டிக் கிடந்தாலும் ரத்தமின்றி நாடி தளர்ந்தால் என்ன செய்வது? ரத்தம் பெருக மருந்தொன்று சித்தர் ஆசியுடன் சொல்லுகின் றேன். சற்றே குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்.

தான்றிக்காய், நெல்லிக்காய் வகைக்கு 100 கிராம்; கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி, குப்பைமேனி வகைக்கு 50 கிராம்; சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் வகைக்கு 25 கிராம்; அன்னபேதிச் செந்தூரம் 10 கிராம்- இவையனைத் தையும் ஒன்றாய் கலந்து தூள் செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியைத் தேனில் குழைத்து காலை- மாலை இருவேளை யும் சாப்பிட்டு வர ரத்தம் பெருகும். ரத்த சோகை விலகும். இம்மருந்தைச் சாப்பிட்டவுடன் 100 மி.லி. திராட்சைச் சாறு அருந்தினால் ரத்த சோகை பதினாறு நாட்களில் குணமாகும்.

குண்டலினி சக்தியை எழுப்ப...

பரம்பொருளை அறிந்து ஜீவன்முக்தி பெற சர்வவியாபியான பரமாத்மா நமக்கு ஆறு ஆதார சக்திகளை அளித்துள்ளார். அவை, மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பனவாகும். மூலாதாரத்தில் உறங்கிக் கிடக்கும் குண்டலினி மகாசக்தியை யோக நியதிகளின்படி ஒவ்வொரு படியாய் நிறுத்தி தியானித்து, ஆக்ஞை எனப் படும் நெற்றிக்கண் திறந்தால் ஏழாவது சக்கரமான சகஸ்ரார நிலையை அடைந்தால், பரவெளி சொரூபன் நடமாடும் பிரபஞ்ச ரகசியத்தை நாமும் பெறலாம்.

சித்தர்களால் அடையாளம் காணப்பட்ட தான்றிக்காய் உடல்- மனம்- ஆன்மா ஆகியவற்றை தூய்மை செய்து மூலாதாரத்தைப் பலப்படுத்துகிறது. தான்றிக்காயை ஏதேனும் ஒருவகையில் பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, இறையருள் பெற்று ஜீவன்முக்தி பெறலாம். திரிலிங்க மூர்த்தியாம் தான்றிக்காயைச் சரணடைவோம்
                                                  
                                          சித்த மருத்துவ நிபுணர் அருண் சின்னையா.

                                                                       நன்றி நக்கீரன்