சமயபுரத்து அன்னை


                         சமயபுரத்து அன்னை

'மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய்
ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினில்
ஏதாயினும் வழி நீ சொல்வாய் எமதுயிரே
வேதாவின் தாயே மிகப் பணிந்து வாழ்வோமே!' -- பாரதியார்.
மாரியம்மன் கோயில்களில் மிகவும் புகழ் பெற்றது சமயபுரம் மாரியம்மன். திருச்சி சென்னை சாலையில் திருச்சியிலிருந்து வடக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கண்ணனூர், மாகாளிபுரம் என்றெல்லாமும் இந்த ஊருக்குப் பெயர்கள் உண்டு.
மூன்று பிராகாரங்கள் கொண்ட கோயில். ஆசார வாயில் வழியாக உள்ளே நுழைந்துவிடலாம். மூன்றாம் பிராகாரத்தில் தென்கிழக்கு மூலையில், பௌர்ணமி மண்டபமும், தென்மேற்கு மூலையில் நவராத்திரி மண்டபமும், வடகிழக்கு மூலையில் வசந்த மண்டபமும் இருக்கின்றன.
இரண்டாம் பிராகாரத்தில் நுழைந்ததும், மண்டபத்தின் மேற்கில் வினாயகர். கொடிக்கம்பம் நடுவில் இருக்கிறது.
உற்சவ அம்மன் சந்நிதிக்குப் பக்கத்தில் கருப்பண்ணசாமி சந்நிதி இருக்கிறது.
மாரியம்மனுக்கு சீதள கௌமாரி, மகாமாயை என்ற பெயர்கள் உண்டு. மூலஸ்தானத்தில் அம்மன் நான்கு திருக்கரங்களுடன் வீற்றிருக்கும் கோலத்தில் அருள் பாலிக்கிறாள். அவளுக்குப் பின்னே ஐந்து தலை நாகம் குடை பிடிக்கிறது.
சமயபுரம் மாரியம்மன் ஆதியில் விஜய நகர மன்னர்களின் குலதேவதைகளுள் ஒருத்தியாக வணங்கப்பட்டு வந்தாள் அவர்கள் அரசு வீழ்ச்சியுற்ற போது அம்மன் சிலை மாத்திரம் ஒரு தந்தப் பல்லக்கில் இங்கே கொண்டுவரப் பட்டது. அம்மன் சிலையைக் கீழே வைத்துவிட்டு உணவு அருந்தச் சென்றனர்; திரும்பி வந்து அவர்களால் அதைத் தூக்க இயலவில்லை.
அவர்கள் அப்படியே அதை ஒரு குடிசையில் விட்டுப்போய் விட்டனர். பிறகு கிபி 1804ல் விஜயரங்க சொக்க நாயக்கர், ஆலயம் புதிதாய்க் கட்டி அதில் அம்மனைப் பிரதிஷ்டை செய்தார். ஆலயத்திற்கு வேண்டிய நிலபுலன்களையும் பொன் நகைகளையும் அளித்தார்.
சமயபுரம் மாரியம்மன் மகா சக்தி வாய்ந்தவள். தீராத நோய்களைத் தீர்த்து வைப்பாள். வைசூரி, காலரா முதலான தொற்று வியாதிகளை நீக்கி வாழ வைப்பாள். இவ்வாலயம் முதலில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சுற்றுக் கோயில்களில் ஒன்று. முதலில் அந்தக் கோயிலில்தான் இருந்ததாகவும் பிறகு ராமானுஜர் காலத்தில் சமயபுரம் எழுந்தருளியதாகவும் கூறுகிறார்கள்.

கொள்ளிடம் நதி அரங்கன் கோயிலையும் சமயபுரத்தையும் பிறிக்கிறது. ரங்கநாதர் அம்மனை சகோதரியாய்க் கொண்டாடுவார். தை மாதத்தில் மாரியம்மன் கொள்ளிடத்தின் தென்கரைக்கு வந்து திருமஞ்சனமாடுவாள். அன்றைய தினம் ஸ்ரீரங்கம் அரங்கனிடமிருந்து விலை உயர்ந்த பட்டுச் சேலைகள், மாலை முதலியன பிறந்தகச் சீராக அனுப்பப்படும்.
மூல மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது இல்லை. உற்சவ மூர்த்திக்குத்தான் எல்லாம். மாசி மாதம் கடை ஞாயிறன்று பூச்சொரியல் விழா நிகழும். வசந்த விழா, ஆடிப்பூர விழா, நவராத்திரி விழா எனக் கோலாகலமான திருவிழாக்கள் பல உண்டு. உயிர்ப்பலி இங்கு இல்லை. உப்பு, வெல்லம், ஆடு, கோழி காணீக்கையாகத் தருவார்கள். தல விருட்சம் வேம்பு.
கொள்ளிடத்தின் ஒருகிளை இங்கு வாய்க்காலாகக் கோயிலுக்கு அருகேயே ஓடுகிறது.
ராபர்ட் கிளைவ், பிரெஞ்ச்காரர் சேனைகளைச் சமயபுரத்தில் தோல்வியுறச் செய்து ஆங்கிலேயர் ஆட்சியை நிறுவினார். இதனால் அவர் அம்மனிடத்தில் தான் வேண்டிக் கொண்டபடி திருப்பணிகள் செய்ததாகத் தெரிகிறது. கிபி 18அம் நூற்றாண்டில் நடந்த இந்த சம்பவத்தால் சமயபுரம் பிரசித்தி பெற்றது. அது முதற்கொண்டு ஆங்கிலேயருக்கு இந்த அம்மனிடம் மிகுந்த பக்தி இருந்து வந்தது.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாரியம்மன் கோயில்களிலும் வணங்கப்படுபவள் இந்த துர்க்கையே. இவள் மஹாவிஷ்ணுவின் யோக மாயை என்பார்கள். 'ஆயன் சகோதரியே ஆஸ்தான மாரியம்மா!' என்று இந்த ஊர்மக்கள் அம்மனை வழிபடுகின்றனர்.
'யாதுமாகி நின்றாய் காளீ எங்கும் நீ நிறைந்தாய்!'
-- பாரதியார்.