ஜென் கதை –ஓர் உரையாடல்

                           ஜென் கதை –ஓர் உரையாடல்

    ஜென் ஆசிரியர்கள் தமது மாணவர்கள் தம்மை சுயமாக வெளிப்படுத்த பயிற்றுவிப்பது வழக்கம். இரு வேறு ஜென் மடாலயங்களில் இரண்டு சிறுவர்கள் படித்து வந்தார்கள். ஒரு சிறுவன் தினமும் காலை மடத்துக்காக காய்கறிகள் வாங்கப் போவான். வழியில் இருவரும் ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.
ஒருநாள், “நீ எங்கே செல்கிறாய்?” என்று கேட்டான் முதலாமவன்.
“எங்கே என் கால்கள் என்னை இட்டுச்செல்கிறதோ அங்கே செல்வேன்,” என்றான் இரண்டாமவன்.
இந்த பதிலால் குழம்பிய முதல் சிறுவன் தன் ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப் போனான். அவனது ஆசிரியர், “நாளை நீ அந்தச் சிறுவனை சந்திக்கும் போது இதே கேள்வியை மீண்டும் கேள். அவன் அதே பதிலை மீண்டும் சொல்வான். அப்போது “உனக்கு கால்களே இல்லாவிட்டால் நீ எங்கே செல்வாய் எனக் கேள், அவன் மாட்டிக்கொள்வான்,” என்றார்.
மறுநாள் காலை மீண்டும் இருவரும் சந்தித்தனர்.
“நீ எங்கே செல்கிறாய்?” என்றான் முதலாமவன்.
“எங்கெல்லாம் காற்று வீசுகிறதோ அங்கே செல்கிறேன்,” என்றான் மற்றவன்.
மீண்டும் குழம்பிப்போன முதல் சிறுவன் தன் ஆசிரியரிடம் சென்றான். “காற்றே இல்லாத பட்சத்தில் அவன் எங்கே செல்வான் எனக் கேள்,” என்றார் ஆசிரியர்.
மறுநாள் மூன்றாம் முறையாக இருவரும் சந்தித்தார்கள்.
அவனை மடக்கி விடலாம் என்ற சந்தோஷத்துடன் “நீ எங்கே செல்கிறாய்?” என்றான் முதலாமவன்.
“நான் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் செல்கிறேன்” என்றான் இரண்டாமவன் அமைதியாக.