ஜென்

                                                                    ஜென்


   ஜென் எளிமையை நிரம்பவே வலியுறுத்துகிறது. மனதை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாமல் இயற்கையாய் அது செல்லும் பாதையை மட்டும் கவனிக்கச் சொல்கிறது. அதன் இயற்கைப் பாதையின் மேல் ஏற்படும் தொடர்ச்சியான கவனிப்பு நமக்கு வாழ்வில் எது உண்மை என்பதை உணர்த்துகிறது. எவ்வித சஞ்சலமுமில்லாத தூய்மையான மனதை அடைய ஜென் வழிகாட்டுகிறது.
ஜென் ஒரு வழிகாட்டுதல் மட்டுமே! யாவரும் அதைக் கடைபிடிக்கலாம். புத்த மதம் சார்ந்த விஷயம்தான் ஜென் என்று கூறினாலும் அது ஒரு தனி மதம் சார்ந்த விஷயமல்ல. எச்சமயத்தை சார்ந்தவரும் ஜென் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி உய்ய முடியும். ஜென்னின் உயர்ந்தபட்ச குறிக்கோளே ‘தெளிவடைதல்’ (enlightenment) ஆகும்.
மனம் ஒரு முறை தெளிவடைந்து விட்டால் அதற்கு மேல் அங்கு போராட்டம் இல்லை. சலசலவென ஆர்ப்பாட்டமில்லாத அமைதியுடன் செல்லும் சிறு நதியைப் போன்றே நம் மனமும் மாறி விடும். ஒருமுறை உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். பிறப்பு முதல் இறப்பு வரை எதைத் தேடி வந்தோம், எதைத் தேடிப் போகிறோம், எதற்காக நம்மையே வருத்திக் கொள்கிறோம், எதற்காக சந்தோஷப்படுகிறோம், எது தேவை, எது தேவையில்லை… என ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டே வந்தால் இறுதியில் கிடைப்பது ஒரு வெற்றிடமே! அந்த வெற்றிடத்தை அடைந்து விட்டால் அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது புலனாகிவிடும்.
அந்த வெற்றிடத்தை அடையும் காலம் சில வருடங்களாக இருக்கலாம், பல நாட்களாக இருக்கலாம், ஏன்.. சில மணித்துளிகளே கூட இருக்கலாம். நம் மனம் எந்த அளவு இயற்கைத் தன்மையிலிருந்து வழுவி நிற்கிறது என்பதைப் பொறுத்து அது இயல்பாய் நிர்ணயம் செய்யப்படும்.
புத்தருக்கு அந்நிலை சடாரென ஒரு கணப்பொழுதில் நிகழ்ந்தது. அந்த உள்ளொளியைத் தக்க வைக்க அவர் எடுத்த முயற்சிகள் சில வருடங்களில் முழுமை பெற்றன. அது முழுமை பெற்ற இடம்தான் கயாவில் உள்ள போதி மரம். அரச ஆடம்பரங்களில் மூழ்கிக் கிடந்தவருக்கு, இன்பக் களிப்புகளிலேயே உழன்று கிடந்த சித்தார்த்தனுக்கு திடீரெனக் கிடைத்த வெளியுலகக் காட்சி அதிர்ச்சியாய் இருந்தது. ‘இது நாம் காணாத வேறு உலகமாக இருக்கிறதே… அப்படி என்றால் எதுதான் உண்மை, எதுதான் நிரந்தரம், எதுதான் எல்லாவற்றிற்கும் காரணம்’ என அக்கணப்பொழுதிலேயே அவர் உள்ளம் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டது.
நம் உள்ளங்களும் பல தருணங்களில் அந்த நிலையை அடைய நமக்கு ஏதோ ஒரு வகையில் சிக்னல் வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளும் மனோபாவம் நம்மிடம் இல்லை. ஒரு வித அதிர்ச்சியுடன் அந்த சிக்னலைக் காணும் பக்குவமே நம்மிடம் நிலைபெற்றிருக்கிறது. நாம் காணும் இயற்கை நிலையில் நீடித்திருக்க நமக்கு பயம்! நம்முடைய இருத்தலைப் பற்றிய பயம்!
ஜென்னில் எக்கருத்தையும் வலியுறுத்திச் சொல்வதற்கு பக்கம் பக்கமாக ஸ்கிரிப்டுகள் கிடையாது. நீண்ட கதைகள் கிடையாது. ஜென் சொல்வதெல்லாம் சில குறுங்கதைகளும், குறுங்கவிதைகளுமே! அதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமாக இருப்பது போலத் தோன்றும், சில நேரங்களில் ரொம்பவும் எளிமையாக இருப்பது போலவும் தோன்றும். உண்மையில், நம் மனதில் எந்த முன்முடிவுகளையும் கொண்டிராமல் ஜென்னை அணுகினோமானால் அது நமக்கு நிறையவே அள்ளித் தரக் காத்திருக்கிறது.
வார்த்தைகளினால் விவரணம் செய்து, ‘புரிய வைப்பது’ என்பது ஜென்னில் கிடையாது. அனுபவத்தின் மூலம் உணர்ந்து கொள்வதையே அது வலியுறுத்துகிறது. அந்த உணர்வினைப் பெற, அனுபவத்தினைப் பெறத் தேவையான வழிகாட்டுதல்களையே ஜென் குருமார்கள் வழங்குகின்றனர்.
ஜென் என்பதும் தியானமே. மனதை அலையவிடாமல் நிலை நிறுத்துவது மட்டுமே ஜென் தியானமாகி விடாது. ஒரு குறிப்பிட்ட புள்ளியிலோ, பொருளிலோ மனதை அசையாமல் நிறுத்த முடிவது மட்டுமெ ஜென் தியானம் அல்ல. மாறாக, வந்து செல்லும் எண்ணங்களை அவற்றின் போக்கிலேயே போகவிடுவதுதான் இவ்வகை தியானம்.
ஒருமுறை ஒரு சீடர் ஜென் மாஸ்டர் ஜாவோட்ச்சுவிடம் கேள்வி ஒன்றைக் கேட்டார். ”நாயிடம் புத்தாவின் பண்புகள் இருக்கின்றனவா.. இல்லையா?” இதுதான் கேள்வி.
ஜாவோட்ச்சு அளித்த பதில். ”இல்லை”
பின்னொரு நாளில் அதே சீடர் ஜாவோட்ச்சுவிடம் அதே கேள்வியை மறுபடியும் கேட்டார். ”நாயிடம் புத்தாவின் பண்புகள் இருக்கின்றனவா.. இல்லையா?”
ஜாவோட்ச்சு அளித்த பதில். ”ஆம்”
இவ்வளவுதான் ஜென் சொல்லும் தத்துவம்! இச்சிறு நிகழ்விலிருந்து நமக்கு என்ன தோன்றுகிறதோ அதை எடுத்துக் கொள்ளலாம். ஆழ்ந்து கவனித்தால் பலப் பல சிந்தனைகள் நமக்குத் தோன்றக் கூடும். எது சரி.. எது இந்நிகழ்விற்கு உண்மையான அர்த்தம் என்றெல்லாம் சொல்ல முடியாது.
மற்றுமொரு நிகழ்வு.
ஒரு சீடர் ஜாவோட்ச்சுவிடம் கேட்கிறார், தனக்கு ஏதாவதொன்றை போதனை செய்யுமாறு.
அவரை ஆழ்ந்து உற்று நோக்கிய ஜாவோட்ச்சு, பின் கேட்டார். ”உனக்கான சாப்பாட்டை சாப்பிட்டு விட்டாயா?”
சீடர் சொன்னார். ”ஆம்! சாப்பிட்டு விட்டேன்”
”அப்படியா! அப்படியென்றால் போய் உன் தட்டைக் கழுவி வை” என்றார் ஜாவோட்ச்சு.
இவ்வளவுதான் போதனை. அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பாராத சீடர் அக்கணமே சடாரென முக்தி நிலையை அடைகிறார். இதற்கும் ஆழ்ந்த பொருளுண்டு. எந்த அளவிற்கு ‘முழுமையாக’ நிகழ்காலத்தில் வாழ்கிறோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் விதமான உரையாடல் இது. இன்றைய நிகழ்காலமே நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தைப் பற்றிய கவலை வேண்டாம், இப்போதைய நம் வேலையை முழுமையாகச் செய்வோம் என்று கூறுவதாக எடுத்துக் கொள்ளலாம்.
மற்றுமொரு பிரபலமான ஜென் கதை இருக்கிறது. காலிப் பானை ஒன்றை எடுத்துக் கொண்ட மாஸ்டர் சீடர்களிடம் கேட்கிறார். ”இதற்குள் என்ன இருக்கிறது?”. சீடர்கள் அனைவரும் அதற்குள் ஒன்றுமேயில்லை, வெற்றிடம்தானே இருக்கிறது என்று கூற, சிரிக்கிறார் மாஸ்டர். ”இதற்குள் காற்று நிரம்பியிருப்பதை நீங்கள் அறியவில்லையா, உணரவில்லையா” என்று கேட்டுவிட்டு மீண்டும் சிரிக்கிறார் மாஸ்டர்.
இதே போல மற்றுமொரு சம்பவம்.
இரண்டு ஜென் சீடர்கள் கொடி ஒன்று கம்பத்தில் அசைந்து கொண்டிருப்பதைக் காண்கின்றனர். ஒருவர் இன்னொருவரிடம் கூறுகிறார். ”கொடி அசைந்து கொண்டிருக்கிறது”.
மற்றொருவரோ, ”காற்றுதான் அலைந்து, அசைந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.
இவ்விருவர் பேச்சுக்களையும் கேட்ட ஜென் மாஸ்டர் ஹுயூனெங், பின் சொன்னார். ”கொடியோ, காற்றோ அல்ல; மனம்தான் அசைந்து கொண்டிருக்கிறது”