7 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்பியது

                                  
                                    7 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்பியது

          பூமியிலிருந்து 30 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிறிய கிரகம் ஒன்றுக்கு, 7 ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட ஜப்பானின் 'ஹயபுசா' விண்கலம் நேற்று முன் தினம் பூமிக்கு திரும்பியுள்ளது.

பூமியிலிருந்து 30 கோடி கிலோமீட்டர் தூரத்தில் 'இட்டோகவா' என்ற சிறிய கிரகம் உள்ளது. இந்தக் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய 'ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சி' கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் 'ஹயபுசா' என்ற விண்கலத்தை அனுப்பியது.

இட்டோகவா கிரகத்தில் உள்ள மண்ணையும் கல்லையும் கொண்டு ஆராய்ச்சி செய்வதன் மூலம் சூரிய குடும்பம் தோன்றிய விதத்தை கண்டறிய முடியும் என ஜப்பானிய விஞ்ஞானிகள் நம்பினர்.

எனவேதான், அக்கிரகத்திலிருந்து மண்ணையும், கல்லையும் சேகரித்து எடுத்துவர ஹயபுசா விண்கலத்தை அவர்கள் அனுப்பினர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் பூமிக்குத் திரும்பியது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரத்தருகே உள்ள ஊமரா என்ற இடத்தில் தரையிறங்கிய ஹயபுசா விண்கலம், இட்டோகவா கிரகத்திலிருந்து 18 கிலோ மண்ணை உலோக உரைக்குள்( கேப்சூல்) பாதுகாப்பாக வைத்து எடுத்து வந்துள்ளது.

பல்வேறு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹயபுசா விண்கலம் மூன்று ஆண்டு காலம் தாமதமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.

ஹயபுசா கொண்டு வந்துள்ள இட்டோகவா கிரக மண் மாதிரி மூலம் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் மூலம் சில உண்மைகள் தெரிய வரும் என ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.