மூன்று குழந்தைகளை ஒரே பிரசவத்தில் பிரசவித்த உலகின் மிகவும் வயதான பெண் என்ற சாதனையை இந்தியாவைச் சேர்ந்த பத்தே தேவி என்ற 66 வயது பெண் நிலை நாட்டியுள்ளார்.
வட இந்தியாவில் ஹரியானா மாநிலத்திலுள்ள தேசிய மகப்பேற்று நிலையத்தில் சோதனைக் குழாய் முறையில் பத்தே தேவி மேற்படி குழந்தைகளை பெற்றெடுத்தார்.
உலகிலேயே, வயதான பெண்மணியான ரஜோ தேவி லோஹனுக்கு 70 வயதில் குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி செய்ததன் மூலம் பெரும் சர்ச்சைக்குள்ளாகிய மருத்துவமனை இது என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தே தேவியும் அவரது கணவர் தேவாவும் திருமணம் செய்து 44 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப் பேறு கிடைக்காத நிலையில் மேற்படி மருத்துவமனையை அணுகி சோதனைக் குழாய் முறையில் குழந்தையை பிரசவிக்க தீர்மானித்தனர்.
தேவாவுக்கு பத்தே தேவி மூன்றாவது மனைவியாவார். அவரது முதலிரு மனைவிகளுக்கும் குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பத்தே தேவி சோதனைக் குழாயில் கருத்தரிக்க ஏற்கனவே எடுத்துக் கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், மனம் தளராது மூன்றாவது முறையாக முயற்சித்து கருத்தரித்துள்ளார்.
1944 ஆம் ஆண்டு பிறந்த பத்தே தேவியின் சொந்த கரு முட்டைகளைப் பயன்படுத்தியே இந்த கருத்தரித்தல் மேற் கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது மருத்துவ உலகில் முக்கிய சாதனை நிகழ்வாக அமைவதாகவும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த குழந்தைப் பிரசவம் குறித்து தேவா விபரிக்கையில்,“எனக்கென ஒரு வாசு வேண்டும் என்ற எனது கனவை பத்தே பூர்த்தி செய்துள்ளார்'' என்று கூறினார்.
2008 ஆம் ஆண்டு 59 வயது பெண்மணியொருவர் ஒரே சமயத்தில் 3 குழந்தைகளைப் பிரசவித்தமையே இதற்கு முந்திய உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.