மகா குபேர யாகம்


ல்லோருக்கும் சகல ஐஸ்வர்யங்களையும் தரும் குபேரன் இலங்கையில் ஆட்சி புரிந்துகொண்டிருந்தான். ராவணனால் தன் நாடு, நகரம், புஷ்பக விமானம் எல்லாம் இழந்து வடதிசை நோக்கி வந்து சசிவனம் என்னும் வன்னிக்காட்டுப் பகுதிக்கு வந்தான். விருபாசுர சதுர்வேதிமங்கலம் என்று
முனிவர்களாலும், தேவர்களாலும் போற்றப்படும் இவ்விடத் தில், சுயம்புவாக தோன்றி, அமலேஸ்வரர் என்ற பெயருடன் திகழ்ந்த தஞ்சபுரீஸ்வரரை வணங்கி, தொண்டு செய்து வந்தான். அவன் வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், குபேரனுக்கு உமாதேவியுடன் மேற்கு நோக்கி காட்சி தந்தார்.

சர்வ லோகங்களும் அவனை வணங்கும் வகையில் செல்வம், சக்தி, நவநிதிகளும் தந்து அருள்புரிந்தார். இதனால் இந்த தலம் ஸித்தி தரும் தலம் என்றும் அழைக்கப்படுகிறது. ஈசனிடமிருந்து அருள் வரங்கள் பெற்ற குபேரன், தன் சக்தி வலிமையால் அழகாபுரி என்ற நகரை உருவாக்கினான். இந்த தலத்தில் வழிபடும் அனைவருக்கும் வேண்டும் வரங்கள் தந்து அருளுமாறு அவன் சிவபெருமானை வேண்டிக் கொண்டான்.

தஞ்சாவூர், கரந்தட்டாங்குடி, வடவாற்றின் தென்கரையில் தற்போது ராஜகோரி என அழைக்கப்படும் வம்புலா ஞ்சோலையில் கிரேதாபராசர முனிவர் முற்காலத்தில் ஆசிரமம் அமைத்து தவம் புரிந்து வந்தார். பல மாணவர்கள் அவரிடம் கல்வி பயின்று வந்தனர். திருப்பாற்கடலை கடைந்து அமுதம் பெற்றபோது தேவர்களிடமிருந்து அவ்வமுத த்தில் சிறிதளவு பராசர முனிவர் பெற்று வந்து இங்குள்ள தீர்த்தத்தில், பொது மக்கள் நன்மைக்காக கரைத்தார். இத் திருக்குளமே அம்ருத தீர்த்தம் எனப்பட்டது. தற்போது ராஜகோரி குளமென அழைக்கப்படுகிறது.

இலவந்தீவில் தஞ்சகன், தாரகன், தாண்டகன் என்ற 3 அரக்கர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானிடம் வரம் பெற்று செருக்குற்று தேவர்கள், மனிதர்கள், முனிவர்களை துன்புறுத்தி வந்தனர். சிவபெருமானால் மட்டும் அவர்களுக்கு மரணமில்லை. இதுவே அவர்கள் பெற்ற வரம். இந்நிலையில் 12 ஆண்டுகள் மழையின்றி உலகில் பஞ்சம் நிலவியது.

பருகிட நீரும் இல்லை. ஆனால் வம்புலாஞ்சோலை அம்ருத தீர்த்தத்தில் மட்டும் நீர் நிறைந்திருந்தது. பசி, தாகத்தில் வாடிய மூன்று அசுரர்களும் நீர் தேடி வம்புலாஞ்சோலையை அடைந்து நீர் பருகி இங்கேயே வசிக்கத் தொடங்கினர். தாம் உயிர்வாழ அமிர்த நீர் தந்த அந்தத் தலத்திலும் தங்கள் அரக்க குணத்தை அவர்கள் அரங்கேற்றினர். அங்கு தவம் செய்துவந்த பராசர முனிவரை துன்புறுத்தி, அவரது தவத்தை கலைக்கவும் முற்பட்டனர்.

அவர்களை எதிர்க்க இயலாத முனிவர்கள் தங்கள் இன்னல் தீர்க்குமாறு நான்முகனையும், சிவபெருமானையும் வே ண்டினர். ஈசனின் யோசனைப்படி, திருமால் நீருண்ட மேகமாகவும், காளி மின்னல் வடிவமாகவும் தோன்றினர். அம்ருத தீர்த்தத்தில் இருந்த அமுதத்தை திருமால் அப்படியே நீரிலிருந்து பிரித்து பருகிவிட்டார். பின்னர் சதுர்புஜராய் முனிவர்களுக்கு காட்சியளித்து, நீலமேகப் பெருமாளாக எழுந்தருளினார். நீரின் மகிமை நீங்கியதால் அசுரர் பலம் குன்றியது. அப்போது காளியானவள், எட்டு திக்குகளிலும் உக்கிரகாளி, மயானகாளி, நிசும்பசூதனி, வடபத்திரகாளி, செல்லியம்மன், குந்தாளம்மன், செங்கமல நாச்சியம்மன், அகோர கோடியம்மன் என தோன்றி அசுரர்களை வதம் செய்தாள்.

தஞ்சகன் இறக்கும் தருவாயில் தன் பெயரில் இவ்வூர் விளங்கவேண்டும் என்று காளியிடம் வேண்டியதால் இவ்வூர் தஞ்சாவூர் என விளங்கியது. அரக்கர்களை வதம் செய்த காளியை சிவபெருமான் தஞ்சபுரீஸ்வரர் என்ற பெயர்கொண்டு சாந்தப்படுத்தி, அன்னைக்கு ஆனந்தவல்லி என்ற திருநாமமும் வழங்கி அனைவருக்கும் அருள்புரிந்து வந்தார்.

ராஜராஜ சோழன், சிவனுக்கு பெரிய கோயில் கட்ட எண்ணம் கொண்டு கருவூர்த் தேவரிடம் ஆலோசனை பெற்று கல் எடுத்துவந்தான். தஞ்சபுரீஸ்வரர் கோயிலின் எதிரே உள்ள காட்டினருகே கல் நிலை கொண்டுவிட்டது. திகைத் தான் ராஜராஜன். அவனது ராஜகுருவின் நிஷ்டையில் தோன்றிய தஞ்சபுரீஸ்வரர் தன்னை வழிபாடு செய்யும்படி ம ன்னருக்கு சொல்லச் சொல்லி மறைந்தார். இதையடுத்து ராஜராஜன் முதலானோர் தஞ்சபுரீஸ்வரர் சந்நதியில் 41 நாட்கள் பூஜைகளும், திருப்பணிகளும் செய்தனர்.

பின்னர் பிரகதீஸ்வரர் கோயிலில் எந்த நிகழ்ச்சி செய்தாலும் முதல் பூஜை செய்து தஞ்ச புரீஸ்வரரின் உத்தரவைப் பெற்று, பின்னரே பெரிய கோயிலில் பூஜை தொடங்குவது என்பது வழக்கமானது.தஞ்சையில் மராட்டிய பேரரசின் சரபோஜி மகாராஜா ஆட்சி வந்தது. மராட்டிய மரபைச் சேர்ந்த சிவாஜி ராஜாசாகேப், மனைவி காமாட்சியம்பாயி சாகேப் முயற்சியால் இத்திருக்கோயிலில் நர்த்தன மண்டபமும், கருங்கல் மண்டபமும், செப்பு கொடிமரமும் நிறுவப்பட்டன. 1883 பிப்ரவரி 26ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றதாக கல்வெ ட்டு தெரிவிக்கிறது. 11.9.2000ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த கோயில் மேற்கு நோக்கியது. எல்லோருக்கும் வேண்டியதை கொடுக்கும் ஸித்தி தலம். தல விருட்சம் வன்னி மரம். தீர்த்தம் பொன்னி நதியின் கிளை ஆறு. சிறப்பு மிக்க இக்கோயில் வளாகத்தில் கணபதி, வள்ளி&தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஆட்கொண்டார், கஜலட்சுமி, சரஸ்வதி, பாலதண்டாயுதபாணி, சப்தலிங்கங்கள், பஞ்சமுக ஆஞ்சநேயர், அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, கோஷ்டபிரம்மா, சண்டிகேஸ்வரர்,
பூர்வதட்சிணாமூர்த்தி, துர்க்கை, தட் சிணாமூர்த்தி, கோஷ்ட நடராஜர், தல விருட்ச மகாகணபதி, கிரியாசக்தி, நந்தி, பலிபீடம், குபேரன், சிவன், குபேர மகாலட்சுமி, காலபைரவர், சிவசூரியன், சனீஸ்வரர், நவகிரகங்கள், ஐயப்பன், பிரதோஷ நந்திகேஸ்வரர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகள் உள்ளன.

தீபாவளியன்று நடைபெறும் மகா குபேர ஹோமம், மிகவும் பிரசித்தி பெற்றது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து குழுமுகிறார்கள். இந்த ஹோமத்தில் கலந்து கொள்பவர்கள், இழந்ததை மீட்பார்கள். தகுதியுடையோர், தடைபட்டதைப் பெறுவார்கள். பொருளாதார பற்றாக்குறை நீங்கி வளமாக வாழ்வார்கள் என்கிறார்கள். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அருள்பாலிக்கிறார், தஞ்சபுரீஸ்வரர்.


source http://www.dinakaran.com/