பக்தியுள்ளவன் பாரம் சுமப்பான்


  ராமபிரான் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. கரடிகளின் தலைவன்  ஜாம்பவான், ராமபிரானிடம் வந்தார். ""ஸ்ரீராமா! பாலப்பணிகள் முடிந்து விட்டது. ஆனால், அகலம் குறைவாக இருப்பதால், நம் படையினர் மொத்தமாக பாலத்தில் நடக்க இயலாது. ஒவ்வொருவராகத்தான் வரிசையில் செல்ல முடியும்,'' என்றார்.


""அப்படியா!'' என்ற ராமபிரான், ""பாலத்தைப் பார்வையிடுவோமே!'' என்று ஜாம்பவானையும் அழைத்துக் கொண்டு அதில் நடந்தார். ராமன் பாலத்தில் ஏறி நடந்தாரோ இல்லையோ! கடலுக்குள் கிடந்த மீன்கள், சுறாக்கள், முதலைகள் எல்லாம் பாலத்தின் ஓரமாக வந்தன. அவை அனைத்துமே ராமனின் தரிசனம் தங்களுக்கு கிடைத்ததே என ஆனந்தம் கொண்டன. ஒன்றுக்கொன்று நெருக்கிக்கொண்டு பாலத்தின் இருபுறமும் நெருக்கியடித்து நின்றதால், பாலம் மிக அகலமானது போல் தோன்றியது. ராமன் ஜாம்பவானிடம்,""ஜாம்பவான்! இந்த கடல் ஜந்துக்கள் பாலத்தின் ஓரமாக அரண்போல் நிற்கின்றன. இவற்றின் மீது ஒரே நேரத்தில் பலர் நடந்து செல்லலாமே!'' என்றார். ராமனின் மகிமையை அறியாத ஜாம்பவான் சிரித்தார். ""ராமா! அதெப்படி சாத்தியம்! ஜந்துக்களின் மீது கால் வைத்தால் அவை பாரம் தாங்காமல் மூழ்கும்! படையினர் கடலுக்குள் அல்லவா விழுந்து விடுவார்கள்!'' என்றார்.  ""நீங்கள் படைகளை வரச்சொல்லி நடக்கச்சொல்லுங்கள்,'' எனறார் ராமன். ஜாம்பவானும் அவரே செய்ய படையினர் ஜந்துக்கள் மீது ராமநாமம் சொன்னபடியே பக்தியுடனும், நம்பிக்கையுடனும் நடந்தனர். அந்த ஜந்துக்களெல்லாம் ராமசேவைக்கு நாங்களும் பயன்பட்டோமே என்று தங்கள் மீது படையினர் நடந்ததால் ஏற்பட்ட வலியையும் பொறுத்துக்கொண்டு சேவை செய்தனர். பகவானை அடையும் குறிக்கோள்  உள்ளவன் எத்தகைய சோதனைகளையும், தன் முதுகில்  ஏற்றப்பட்ட பெரும்பாரம் போல் தாங்கிக்  கொள்வான்! புரிகிறதா! 


நன்றி தினமலர்