அஞ்ஞானத்தின் ஆணைக்கு இணங்க மறுக்கிறோம் - ஸ்ரீ அரவிந்தர்


அன்னையும் நானும் எல்லாரையும் இறைவனுடைய நியதியின்படியே நடத்துகிறோம். நாங்கள் ஏழைகளையும் பணக்காரர்களையும், மனிதர்களின் அளவையின்படி உயர்குடியில் பிறந்தோரையும் தாழ்ந்தகுடியில் பிறந்தோரையும் ஏற்றுக்கொண்டு அவர்கள் எல்லோருக்கும் சமமான அன்பையும் பாதுகாப்பையும் அளிக்கிறோம்.  
சாதனையில் அவர்கள் அடையும் முன்னேற்றத்திலேயே நாங்கள் முதன்மையாகக் கவனம் செலுத்துகிறோம் - அவர்கள் அதற்காகவே இங்கே வந்திருக்கிறார்கள், சுவையான உணவிற்காகவோ, பதவிக்காகவோ, அந்தஸ்திற்காகவோ, செளகரியங்களுக்காகவோ வரவில்லை. அவர்கள் சாதனையில் எவ்வளவு முன்னேற்றம் அடைகிறார்கள் என்பது அன்னையின் அன்பிற்கு அல்லது பாதுகாப்பிற்கு அவர்கள் எப்படிப் பதிலளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது - வேறுபாடின்றி எல்லோர் பேரிலும் அவர் பொழியும் சக்திகளை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? அவர் கொடுப்பதை அவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா என்பதை‌ப் பொறுத்தது.

ஆனால் வெளித் தோற்றத்தில் எல்லோரையும் ஒன்றுபோல் நடத்தும் நோக்கமோ கடமையோ அன்னைக்கு இல்லை. அவர் அவ்வாறு செய்ய வேண்டுமென்று கோருவது அர்த்தமற்றது, மூடத்தனமானது. அவர் அப்படிச் செய்தால் அது பொருள்களின் உண்மைக்கும் இறைவனது நியதிக்கும் மாறாக அவர் நடப்பதாக ஆகும். ஒவ்வொரு சாதகனும் அவனுடைய இயல்பு, அவனுடைய திறமைகள், அவனுடைய உண்மையான தேவைகள் (அவன் கொண்டாடும் உரிமைகள், ஆசைகள் அல்ல) ஆகியவற்றிற்கு ஏற்றபடியும், அவனுடைய ஆன்மீக நலனுக்கு எது மிகவும் உகந்ததோ அதற்கு ஏற்றபடியும் நடத்தப்பட வேண்டும்.

அதைச் செய்வது எப்படி என்னும் விஷயத்தில் அன்னை தங்களுடைய அளவையின்படி அல்லது சமத்துவம், நியாயம் என்பவை பற்றிய தங்களுடைய கருத்துக்களின்படி அல்லது தங்களுடைய பிராணனின் கோரிக்கைகளின்படி அல்லது வெளி உலகிலிருந்து தாங்கள் கொண்டு வந்துள்ள கருத்துகளின்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கருதும் சாதகர்களின் அஞ்ஞானத்தின் ஆணைக்கு இணங்க மறுக்கிறோம். நாங்கள் எங்களிடமுள்ள ஒளியின்படியும் இந்தப் புவி இயற்கையில் நாங்கள் நிலைநாட்ட விரும்பும் உண்மையின்படியும் செயல்படுகிறோம்.

ந‌ன்‌றி : வைகறை

 source  http://tamil.webdunia.com