முருகன் வழிபாடு


முருகன் போற்றி
ஓம் அருவாம் உருவாம் முருகா போற்றி
ஓம் திருவார் மறையின் செம்பொருள் போற்றி
ஓம் ஆறுமுகத்தெம் அரசே போற்றி
ஓம் மாறுகொள் சூரரை வதைத்தாய் போற்றி

ஓம் இருள்கெடுத் தின்பருள் எந்தாய் போற்றி
ஓம் உருள்பூங் கடம்பணி உரவோய் போற்றி
ஓம் ஈசற் இனிய சேயே போற்றி
ஓம் மாசறு திருவடி மலரோய் போற்றி
ஓம் உறுநரத் தாங்கும் உறவோய் போற்றி
ஓம் செறுநர்த் தேய்த்த செவ்வேள் போற்றி 
ஓம் ஊனில் ஆவியாய் உயிர்ப்போய் போற்றி
ஓம் கானில் வள்ளியின் கணவ போற்றி
ஓம் எழில்கொள் இன்ப வாரிதி போற்றி
ஓம் அழிவிலாக் கந்தனாம் அண்ணல் போற்றி
ஓம் ஏறு மயிலூர்ந் தேகுவாய் போற்றி
ஓம் கூறு மன்பர்க்குக் குழைவாய் போற்றி
ஓம் ஐயனாய் உலகை ஆக்குவாய் போற்றி
ஓம் செய்ய மேனியனே தேவே போற்றி
ஓம் ஒருவனாய் உலகெலாம் ஒளிர்வாய் போற்றி
ஓம் பருவம் முதிராப் பண்பே போற்றி
ஓம் ஓவற இமைக்கும் ஒளியே போற்றி
ஓம் மாமுதல் தடிந்த மறவ போற்றி
ஓம் ஒளவியம் அறுத்தோர்க் கருள்வாய் போற்றி
ஓம் தெய்வம் எல்லாந்தொழும் செய்யாய் போற்றி
ஓம் அஃகுதல் அற்றார் விளக்கே போற்றி
ஓம் கந்தா மணமார் கடம்பா போற்றி
ஓம் நந்தா விளக்கே நாயக போற்றி
ஓம் காப்பாய் படைப்பாய் கழிப்பாய் போற்றி
ஓம் மூப்பீறற்ற முதல்வா போற்றி
ஓம் முத்தமிழ் முதல்வனே போற்றி 
ஓம் கள்ளப் புலனைக் களைவாய் போற்றி
ஓம் கீழறும் அடியர் கிழிவோய் போற்றி
ஓம் ஏழல குந்தொழும் இறைவா போற்றி
ஓம் குன்றும் குழைதோட் குமர போற்றி
ஓம் என்றும் இளைய ஏறே போற்றி
ஓம் கூம்புகைத் தேவர் கோவே போற்றி
ஓம் பாம்பணி சிவனார் பாலக போற்றி
ஓம் கெண்டைக் கண்ணியர் கேள்வ போற்றி
ஓம் அண்டினர்க் கருளும் அங்கண போற்றி
ஓம் கேடில் முருகனாய்க் கிளர்ந்தாய் போற்றி
ஓம் வீடில் வீடருள் விமல போற்றி 
ஓம் கைவேல் கொண்ட காவல போற்றி
ஓம் நைவேற் கருள்வாய் நாயக போற்றி
ஓம் கொடைக் கடன்கொண்ட குழக போற்றி
ஓம் படைக்கடல் தலைவ பரனே போற்றி
ஓம் கோதில் அமிழ்தே குருமணி போற்றி
ஓம் போதில் அமர்ந்த பொன்னே போற்றி
ஓம் சிவபிரான் கண்வரு சேயே போற்றி
ஓம் நவசர வணத்தில் நகர்ந்தாய் போற்றி
ஓம் அறுவுரு அமைந்தே ஆடினாய் போற்றி
ஓம் அறுமீன் பாலுண் அமர போற்றி
ஓம் உருவுமை சேர்க்க உற்றாய் போற்றி
ஓம் பெருமை பிறங்கு பெரியோய் போற்றி
ஓம் நான் முகனைச் சிறை நாட்டினாய் போற்றி
ஓம் மான்மகள் வள்ளியை மணந்தாய் போற்றி
ஓம் செங்கண் கடாவைச் செலுத்தினாய் போற்றி
ஓம் அங்கண் குறிஞ்சிக் கரசே போற்றி
ஓம் இறைவனுக் கரும்பொருள் இசைத்தாய் போற்றி
ஓம் மறையிடைப் பொருளாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் பரங்குன்றமர்ந்த பரம்பர போற்றி
ஓம் திருச்செந்தில் வளர் சேவக போற்றி
ஓம் ஆவினன்கு குடி ஆண்டாய் போற்றி
ஓம் மேவி ஏரகம்வாழ் மிக்கவ போற்றி
ஓம் குன்று தோறாடும் குழந்தாய் போற்றி
ஓம் துன்று பழமுதிர் சோலையாய் போற்றி
ஓம் திசைமுகம் விளக்கும் செம்முக போற்றி
ஓம் இசைபெரு வேள்வி இனமுக போற்றி
ஓம் செங்களம் ஓர்க்கும் திருமுருக போற்றி
ஓம் மங்கல மான வானவ போற்றி
ஓம் வள்ளிபால் நகைகொள் மாமுக போற்றி
ஓம் திங்களின் ஒளிரும் சீர்முக போற்றி
ஓம் ஆர்வலர் ஏத்த அருள்முக போற்றி
ஓம் சிர்வளர் அழகின் செல்வா போற்றி
ஓம் மணிமுடி புனையாறணி முடி போற்றி
ஓம் துணையடி தொழுவார்க் கணைவாய் போற்றி
ஓம் செவியீராறுடைச் செம்மால் போற்றி
ஓம் கவித்தொடை புனைதோட் கந்தா போற்றி
ஓம் பன்னிரு கண்ணுடைப் பண்ணவ போற்றி
ஓம் என்னிரு கண்ணின் இலகுவோய் போற்றி
ஓம் பொருவில் ஒருவனாம் புலவ போற்றி
ஓம் அருணகிரிக்குக் கருள் அமல போற்றி
ஓம் நக்கீரற் கருள் நாதா போற்றி
ஓம் தக்க சங்கத்தமிழ் தந்தாய் போற்றி
ஓம் குமர குருபரற் கருளினை போற்றி
ஓம் அமரர் அறிஞர்களை அளியோய் போற்றி
ஓம் பந்த பாசங்களைப் பறிப்போய் போற்றி
ஓம் கந்தபுரி வாழ்வுகந்தோய் போற்றி
ஓம் தெய்வானை யம்மையைச் சேர்ந்தோய் போற்றி
ஓம் பொய்யிலா மனத்துட் புகுவோய் போற்றி
ஓம் கோழி வெல்கொடிக் கோவே போற்றி
ஓம் ஊழி தோறூழி உள்ளாய் போற்றி
ஓம் செய்யாய் சிவந்த ஆடையாய் போற்றி
ஓம் மெய் யெலாம் வெண்ணீறணிவோய் போற்றி
ஓம் மேவலர் மடங்காலம் விசாக போற்றி
ஓம் மூவர்கள் போற்றும் முத்த போற்றி
ஓம் தேவர்கள் சிறைமீள் சீர்வலாய் போற்றி
ஓம் சேவலும் மயிலும் சேர்த்தோய் போற்றி
ஓம் போர்மிகு பொருந புரவல போற்றி
ஓம் ஏர்மிகு இளஞ்சேய் எம்மிறை போற்றி
ஓம் தாரகற் கொன்ற தாழ்விலாய் போற்றி
ஓம் பாரகம் அடங்கலும் பரவுவோய் போற்றி
ஓம் தமிழ்மொழி இன்பில் தழைப்பாய் போற்றி
ஓம் அமிழ்திற் குழைத்த அழகா போற்றி
ஓம் கல்வியும் செல்வமும் களித்தருள் போற்றி
ஓம் பல்வகை வளனும் பணித்தருள் போற்றி
ஓம் இன்பார் இளைய ஏந்தால் போற்றி
ஓம் என்பால் அருள்புரி என்றும் போற்றி
ஓம் தமிழுக்குரிய பண்ணே போற்றி 
கந்தர் சஷ்டி கவசம் (ஆறுபடை வீடு)
(தேவராய சுவாமிகள் அருளிய கவசம் இது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற கவசம். இதனை ஆறுமுகக் கடவுள் முன்பு அல்லது அறுகோணச் சக்கரத்தின் முன் பாராயணம் செய்வது நற்பலன் தரும். பிரம்மா, விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லெட்சுமி ஆகிய ஆறு சக்திகளும் இணைந்து ஒரே சக்தியாக-சண்முகனாக விளங்குகின்றார். சஷ்டி அன்றும் செவ்வாய்க் கிழமையிலும் இக்கவசம் படிக்க பலன் அதிகமாகும். வம்ச விருத்தி, காரிய வெற்றிக்கு, சஷ்டியன்று காலையிலும், நோய் நிவர்த்தி, கிரகதோஷ நிவர்த்திக்கு செவ்வாய்க்கிழமை மாலையிலும் படிக்க விரைவில் பலன் கிடைக்கும். இது சமஷ்டிக் கோலப் பாராயணமானதால் அறிவு, செல்வம், வம்ச விருத்தி, வெற்றித் திறன் ஆகியவை படிப்பவர் விரும்பிக் கேட்டாலும் கேளாது இருந்தாலும் தானே அருளும் அரிய கவசம் ஆகும்.
இதே போல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் தனித்தனி சஷ்டிக் கவசம் உள்ளது.
இந்த ஆறுபடை வீட்டிற்குரிய சஷ்டிக் கவசத்தை கந்தசஷ்டி விரத நாட்களில் ஒருநாளைக்கு 36 தடவை வீதம் ஆறு நாட்களில் 216 தடவை கூறினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பதும், நினைத்த காரியம் நடக்கும் என்பதும் ஐதீகம்.
இதைத் தான் சட்(ஷ்)டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் தானே வரும் என்று பழமொழியாக கூறுகிறார்கள்)
1. திருச்செந்தூர் - கந்தர் சஷ்டி கவசம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள்
கந்தர் சஷ்டிகவசந் தனை.
குறள் வெண்பா
அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட
மைய நடஞ்செயும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரிரி
விணபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணபக வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயுங் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையுங் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக
ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்னம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் நிந்து
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்று
உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனிய வேல் காக்க
மார்பை யிரத்ந வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காரக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியிணை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க
முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க  கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும்
என்பெயர் சொலவும் இடிவிழுந் தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட் டலறி மதிகெட் டோடப்
படியினின் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுட னங்கம் கதறிடக் கட்டு
கட்டி யுருட்டு கால்கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில்செதி லாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடுவிடு வேலை வெருண்டது ஓடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத்
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
நில்லா தோட நீயெனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குற வாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாக
உன்னைத் துதிக்க உன்றிரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழிப் பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தில்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா விருக்க யானுனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியி லணியப்
பாச வினைகள் பற்றதுநீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புட னிரட்சி அன்னமும் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கவென் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரியம் அளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்துநீ றணிய
அட்டதிக் குள்ளோ ரடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர்
கந்தர்கை வேலாங் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றென துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
2. திருப்பரங்குன்றம் - கந்தர் சஷ்டிக் கவசம்
(இக்கவசத்தினை வள்ளி தெய்வயானை சமேதரராக விளங்கும் முருகப் பெருமான் திருமுன்பு பாராயணம் செய்வது நற்பலன்களைத் தரும். சோமவாரம் அன்று படிப்பது சிறப்பு. கல்வி சிறக்கும். மனக்கவலை அகலும். பயம் நீங்கும்.)
திருப்பரங் குன்றுரை தீரனே குகனே
மருப்பிலாப் பொருளே வள்ளி மனோகரா
குறுக்குத் துறையுறை குமரனே அரனே
இருக்கும் குருபரா ஏரகப் பொருளே
வையா புரியில் மகிழ்ந்துவாழ் பவனே
ஒய்யார மயில்மேல் உகந்தாய் நமோ நமோ
ஐயா குமரா அருளே நமோ நமோ
மெய்யாய் விளங்கும் வேலா நமோ நமோ
பழநியங் கிரிவாழ் பகவா நமோ நமோ
முழுவுடை முதல்வன் முதலாய் நமோ நமோ
விராலி மலையுறை விமலா நமோ நமோ
நாமரம் துளைத்தோன் மருகா நமோ நமோ
சூரசம் கார துரையே நமோ நமோ
வீரவே லேந்தும் வேளே நமோ நமோ
பன்னிரு கரமுடை பரமா நமோ நமோ
கண்களீ ராறுடைக் கந்தா நமோ நமோ
கோழிக் கொடியுடை கோவே நமோ நமோ
ஆழிசூழ் செந்தில் அமர்ந்தாய் நமோ நமோ
சசச சசச ஓம் ரீம்
வவவ வவவ ஆம் ஹோம்
பபப பபப சாம் சூம்
வவவ வவவ களம் ஓம்
லலி லிலி லுலு நாட்டிய அட்சம்
கக கக கக கந்தனே வருக
இக இக இக ஈசனே வருக
தக தக தக சற்குரு வருக
பக பக பக பரந்தாமா வருக
வருக வருகவென் வள்ளலே வருக
வருக வருகநிஷ் களங்கனே வருக
தாயென நின்னிரு தாள் பணிந்தேன் எனைச்
சேயெனக் காத்தருள் திவ்யமா முகனே
அல்லும் பகலும் அனுதினம் என்னை
எல்லிலும் இருட்டிலும் எரிபகல் படுக்கை
வல்லவிடங்கள் வராமல் தடுத்து
நல்ல மனத்துடன் ஞான குருஉனை
வணங்கித் துதிக்க மகிழ்ந்து நீ வரங்கள்
இணங்கியே அருள்வாய் இறைவா எப்போதும்
கந்தா கடம்பா கார்த்தி கேயா
நந்தன் மருகா நாரணி சேயே
எண்ணிலாக் கிரியில் இருந்து வளர்ந்தவனை
தண்ணளி அளிக்கும் சாமி நாதா
சிவகிரி கையிலை திருப்பதி வேளூர்
தவக்கதிர் காமம் சார்திரு வேரகம்
கண்ணுள் மணிபோல் கருதிடும் வயலூர்
விண்ணவர் ஏத்தும் விராலி மலைமுதல்
தன்னிக ரில்லாத் தலங்களைக் கொண்டு
சன்னதி யாய்வளர் சரவண பவனே
அகத்திய முனிவனுக்(கு) அன்புடன் தமிழை
செகத்தோர் அறியச் செப்பிய கோவே
சித்துகள் ஆடும் சிதம்பர சக்கரம்
நர்த்தனம் புரியும் நாற்பத்தெண் கோணம்
வித்தாய் நின்ற மெய்ப்பொரு ளோனே
உத்தம குணத்தாய் உம்பர்கள் ஏறே
வெற்றிக் கொடியுடை வேளே போற்றி
பக்திசெய் தேவர் பயனே போற்றி
சித்தம் மகிழ்ந்திடச் செய்தவா போற்றி
அத்தன் அரியயன் அம்பிகை லட்சுமி
வாணியுடனே வரையுமாக் கலைகளும்
தானே நானென்று சண்முக மாகத்
தாரணியுள்ளோர் சகலரும் போற்றப்
பூரணகிருபை புரிபவா போற்றி
பூதலத் துள்ள புண்ணியதீர்த் தங்கள்
ஓதமார் கடல்சூழ் ஒளிர்புவி கிரிகளில்
எண்ணிலாத் தலங்கள் இனிதெழுந் தருள்வாய்
பண்ணும் நிட்டைகள் பலபல வெல்லாம்
கள்ளம் அபசாரம் கர்த்தனே எல்லாம்
எள்ளினுள் எண்ணெய்போல் எழிலுடைஉன்னை
அல்லும் பகலும் ஆசா ரத்துடன்
சல்லாப மாய்உனைத் தானுறச் செய்தால்
எல்லா வல்லமை இமைப்பினில் அருளி
பல்லா யிரநூல் பகர்ந்தருள் வாயே
செந்தில் நகர்உறை தெய்வானை வள்ளி
சந்ததம் மகிழும் தயாபர குகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
அரண்மகிழ் புதல்வா ஆறுமுகா சரணம்
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.

3. பழநி - கந்த சஷ்டிக் கவசம்
(செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இக்கவசத்தினைப் பாராயணம் செய்ய தோஷம் நிவர்த்தியாகும். நற்பலன் மிகவும் இக்கவசத்தினைப் பாராயணம் செய்யலாம்.)
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
குருபரா குமரா குழந்தைவே லாயுதா
சரவணை சண்முகா சதாசிவன் பாலா
இரவலர் தயாபரா ஏழைபங் காளா
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா
வரமெனக்(கு) அருள்வாய் வாமனன் மருகா
இரண்டா யிரம்வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா
இலட்சத் திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்
வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூரசம் காரா துஷ்டநிஷ் டூரா
கயிலாய மேவும் கனகசிம் மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா
அகத்திய மாமுனிக்(கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முருகாற் றுப்படை சொல்லிய
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனகமிசைக் குதவா
திருவரு ணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா
ஆயிரத் தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம்சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா
குருவாம் பிரமனைக் கொடுஞ்சிறை வைத்து
உருப்பொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
சுருதிமெய் யோகம் சொல்லிய(து) ஒருமுகம்
அருள்பெரு மயில்மீ(து) அமர்ந்தது ஒருமுகம்
வள்ளிதெய் வானையை மருவிய(து) ஒருமுகம்
தெள்ளுநான் முகன்போல் சிருட்டிப்பது ஒருமுகம்
சூரனை வேலால் துணித்த(து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்
தானவர் வேண்டுவ தருவ(து) ஒருமுகம்
ஞான முதல்வர்க்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட்செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோ நம
கூரகம் ஆவினன் குடியாய் நமோ நம
சர்வசங் கரிக்குத் தனயா நமோ நம
உறுசோலை மலைமேல் உகந்தாய் நமோ நம
எல்லாக் கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாகச் சண்முகத் துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந் தருளி
உல்லா சத்துறும் ஓங்கார வடிவே
மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சர்வ முக்கோணத் தந்தமுச் சத்தியை
வேலா யுதமுடன் விளங்கிடும் குகனைச்
சீலமார் வயலூர் சேந்தனைத் தேவனை
கைலாச மேருவா காசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோ ணத்தில் நளினமாய் அர்ச்சனை
கங்கை யீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி
வாய்அறு கோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரை தன்மேல்
ஆகாச வட்டத்(து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை
தந்திர அர்ச்சனை தலைமேல் கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக் கட்டி
அக்கினிக் குதிரை ஆகாசத் தேவி
மிக்கமாய் கருநெல்லி வெண்சாரை உண்பவர்
பாகமாய் ரதமும் பகல்வழி யாரை
சாகா வகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ் சுகல்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்தி ரனைக்கண்(டு) அறிந்தே யிடமாய்ச்
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறு முகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன்விளை யாடி
மேலைக் கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக் குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி
மனத்தில் பிரியா வங்கண மாக
நினைத்த படிஎன் நெஞ்சத் திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க்(கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்(து) ஆறு முகமும்
மாறா திருக்கும் வடிவையும் காட்டிக்
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்க
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தெரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னேவந்து
அஷ்டாவ தானம் அறிந்தவுடன் சொல்லத்
தட்டாத வாக்கு சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிர பந்தம்
எழுத்துச் சொற்பொருள் யாப்பல ங்காரம்
வழுத்தும் என்நாவில் வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கும் வாக்கும்
சமுசார சாரமும் தானேநிசமென
வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக் குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்லஉன் பாதமும் நாடிய பொருளும்
சகலகலை ஞானமும் தானெனக் கருளி
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்
கிட்டவே வந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அநேக மூர்க்கமாய்
துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடைப் பூதமும்
வேதாளம் கூளி விடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுநடுங்க
பேதாளம் துர்க்கை பிடாரி நடுநடுங்க
பதைபதைத் தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்த மிதித்தங்(கு) உருட்டி நொறுக்கிச்
சூலத்தாற் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப் பருகி
மழுவிட் டேவி வடவாக் கினிபோல்
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீர பத்திரன் சக்கரம்
திருவை குண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினிச் சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்
ஏக ரூபமாய் என்முனே நின்று
வாகனத் துடன்என் மனத்துள் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவுமுச் சாடனம்
வம்பதாம் பேதனம் வலிதரும் ஆரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடணம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே சபித்து
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் எதுவேண் டினும்
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சம்காரா!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

4. சுவாமி மலை - கந்தசஷ்டி கவசம்
(இக்கவசம் வியாழக்கிழமையன்று பாராயணம் செய்வது சிறப்பாகும். கல்வி மேன்மை பெறும். செல்வமும், நல்ல பதவியும், பேரும் புகழும் கிட்டும்.)
ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கார மாக உதயத் தெழுந்தே
ஆங்கார மான அரக்கர் குலத்தை
வேரறக் களைந்த வேலவா போற்றி
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா போற்றி பழநியின் கோவே
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான்மரு கோனே வள்ளி மணாளனே
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னைக்
காணநீ வந்து காப்பதும் கடனே
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் முதல்வா புனித குமாரா
சித்தர்கள் போற்றும் தேசிகா போற்றி
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதற் பொருளே
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசய மாக அமைத்தவா போற்றி
திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே
சதுரட் சரத்தால் சாற்றுதல் யோகம்
மதுர மாய் அளிக்கும் மயில்வா கனனே
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவத்தால்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத்(து) இருக்கும் நித்தனே சரணம்
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறுசிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்
சரவணை வந்த சடாட்சரப் பொருளே
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந்(து) ஓடத் தாரகா சுரன்முதல்
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தோய்
சீர்திருச் செந்தூர்த் தேவசே னாதிபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி
இஷ்டசித்திகள் அருள் ஈசன், புதல்வா
துஷ்டசங் காரா சுப்பிர மணியா
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொள்ளாக் காட்சி காட்டிய சடாட்சர
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அர்ச்சனை செய்ய அனுக்ரகம் அருள்வாய்
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரோ(டு) என்னைச்
சல்லாப மாகக் சகலரும் போற்ற
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்
சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு
திட்டு முறைகள் தெய்வச் சாபம்
குட்டல் சோம்பல் கொடிய வாந்தியம்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்
உன்னுடைய நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுன் கடனே செந்தில் நாயகனே
தெய்வநா யகனே தீரவே சரணம்!
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!!

5. திருத்தணி - கந்தசஷ்டிக் கவசம்
(வியாழக்கிழமையன்றும், பரணி, கிருத்திகை, நட்சத்திர நாட்களிலும் காலை மாலை இருவேளைகளிலும் பாராயணம் செய்ய வேண்டும். குடும்பத்தவர் அனைவரும் ஒருசேர பாராயணம் செய்ய குடும்பப்பீடைகள் அகலும். செல்வம் பெருகும். காரியசித்தி கிட்டும். வைகாசி விசாகத்தன்று இதனை பதினாறு முறை பாராயணம் செய்ய மிகுந்த பலன் கிடைக்கும்.)
கணபதி துணைவா கங்காதரன் புதல்வா
குணவதி உமையாள் குமரா குருபரா
வள்ளிதெய் வானை மருவிய நாயகா
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியநு கூலா
திருவா வினன்குடி சிறக்கும் முருகா
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா
சண்முக நதியும் சராபன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழநிக்கு இறைவா
ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா
ஆறு சிரமும் ஆறுமுகமும்
ஆறிரு புயமும் ஆறிரு காதும்
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணீறணி திருநுதல் அழகும்
கருணை பொழியும் கண்ணான்கு மூன்றும்
குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்
காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபாலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட
ஈச்வரன் பார்வதி எடுத்துமுத் தாடி
ஈச்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்
கையால் எடுத்துக் கனமார்(பு) அணைத்தே
ஐயா! குமரா! அப்பனே! என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்
கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே கொட்டி முருகா! வருகவென்(று)
அந்நேரம் வட்டமிட் டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா வருக
தாவிய தகரேறும் சண்முகா வருக
ஏவியவே லேந்தும் இறைவா வருக
கூவிய சேவற் கொடியோய் வருக
பாவலர்க் கருள்சிவ பாலனே வருக
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா வருக
பொன்போல் சரவணப் புண்ணியா வருக
அழகிற் சிவனொளி அய்யனே வருக
களபம் அணியுமென் கந்தனே வருக
மருமலர்க் கடம்பணி மார்பா வருக
மருவுவோர் மலரணி மணியே வருக
திரிபுர பவனெனும் தேவே வருக
பரிபுர பவனெனும் பவனே வருக
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி வருக
காலில் தண்டை கலீர் கலீரென
சேலிற் சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்
அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி
பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்
மந்திர வாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்
ஒருகோடி சூரியன் உதித்த பிரபைபோல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமணி அணியுமா பரணமும்
வாயிலநன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோக பந்தியும்
மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்
ஒழுகிய சந்தனம் உயர் கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்
அணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்
நவமணிப் பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்
கருணை பொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேற்குடை ஒருகை தண்டாயுதம்
ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை
இருக்கும் குருபரா ஏழைபங் காளா
வானவர் முனிவர் மகிழ்ந்து கொண் டாடத்
தானவர் அடியவர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்யச்
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பயிரவர் ஆனந்த மாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சப்த ரிஷிகள் சாந்தக மென்னச்
சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லக்ஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய
ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க
தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
ஏவற் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தருவர் பாடிக் கவரிகள் வீசிச்
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல்உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேத்த
நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க
மங்கள மாக வைபவம் இலங்க
தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்
வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலற்ற சூலத்தை அறுத்துச் சயித்து
விடவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்ப்பதி செந்தூர்
திருவாவி னன்குடி திருவே ரகமும்
துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலி மலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை
கண்ணிய மாவூற்று கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்
பதினா லுலகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந்(து) அடியார்தம்
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட வரமும் கிருபைப் படியே
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

6. பழமுதிர்ச்சோலை - கந்தசஷ்டிக் கவசம்
(இக்கவசத்தினைப் பாராயணம் செய்தால் தமிழில் சிறந்த புலமை பெறலாம். பசி, பிணி அண்டாது.)
சங்கரன் மகனே சரவண பவனே
ஐங்கரன் துணைவனே அமரர்தம் கோனே
செங்கன்மால் மருமகனே தெய்வானை கேள்வனே
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே
பழநிமா மலையுறும் பன்னிரு கரத்தனே
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்
சரவண பவனே சட்கோணத் துள்ளுரை
அரனருள்சு தனே அய்யனே சரணம்
சயிலொளி பவனே சடாட்சரத் தோனே
மயில்வா கனனே வள்ளலே சரணம்
திரிபுர பவனே தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்
திகழொளி பவனே சேவற் கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்
பரிபுர பவனே பன்னிரு கையனே
தருணமிவ் வேளை தற்காத் தருளே
சவ்வும் ரவ்வுமாய் தானே யாகி
வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவண பவனே
குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்சமென் றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங்(கு)
அஞ்சலி செய்வதன் அமுதமும் உண்டு
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீர வாகுவோ(டு) ஒன்பான்
தம்பி மா ராகக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்கத்
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேகம தாக
உமையுடன் வந்தினி துவந்து புரிந்து
அயனைச் சிறைவிடென்(று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கௌரி லக்ஷ்மி கலைமக ளுடனே
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித்தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்த வமரர்கள் தமக்குச்
சேனா பதியாய் தெய்வீகப் பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெருமானே
திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவே ரகமுதல்
எண்ணிலாத தலங்களில் இருந்தாடும் குகனே
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே
தஞ்சமென்(று) ஓதினர் சமயம் அறிந்தங்(கு)
இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழநித் தேவ குமாரா
காண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யாஎன்
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலக்ஷ்மி வாழ் அருளெனக்(கு) உதவி
இட்டமாய் என்முன் னிருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே
அருணகிரி தனக்(கு) அருளியதமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட
சஷ்டிக் கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த்திறம் தந்தருள் வோனே
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் தமிழ்தரும் அரனே
சரணம் சரணம் சங்கரன் சுதனே
சரணம் சரணம் சண்முகா சரணம்.
வைரவேல் போற்றி
ஓம் அருள்வேல் போற்றி
ஓம் அபயவேல் போற்றி
ஓம் அழகுவேல் போற்றி
ஓம் அரிய வேல் போற்றி
ஓம் அயில் வேல் போற்றி
ஓம் அனைய வேல் போற்றி
ஓம் அன்பு வேல் போற்றி
ஓம் அற்புத வேல் போற்றி
ஓம் அடக்கும் வேல் போற்றி
ஓம் அகராந்தக வேல் போற்றி
ஓம் ஆளும் வேல் போற்றி
ஓம் ஆட்கொள் வேல் போற்றி
ஓம் இனிய வேல் போற்றி
ஓம் இரங்கு வேல் போற்றி
ஓம் இலை வேல் போற்றி
ஓம் இறை வேல் போற்றி
ஓம் ஈர்க்கும் வேல் போற்றி
ஓம் ஈறிலா வேல் போற்றி
ஓம் உக்கிர வேல் போற்றி
ஓம் உய்க்கும் வேல் போற்றி
ஓம் எழில் வேல் போற்றி
ஓம் எளிய வேல் போற்றி
ஓம் எரி வேல் போற்றி
ஓம் எதிர் வேல் போற்றி
ஓம் ஒளிர் வேல் போற்றி
ஓம் ஒப்பில் வேல் போற்றி
ஓம் ஒடுக்கும் வேல் போற்றி
ஓம் ஓங்கார வேல் போற்றி
ஓம் கதிர் வேல் போற்றி
ஓம் கனக வேல் போற்றி
ஓம் கருணை வேல் போற்றி
ஓம் கந்தன் வேல் போற்றி
ஓம் கற்பக வேல் போற்றி
ஓம் கம்பீர வேல் போற்றி
ஓம் கூர் வேல் போற்றி
ஓம் கூத்தன் வேல் போற்றி
ஓம் கொடு வேல் போற்றி
ஓம் கொற்ற வேல் போற்றி
ஓம் சமர் வேல் போற்றி
ஓம் சம்கார வேல் போற்றி
ஓம் சக்தி வேல் போற்றி
ஓம் சதுர் வேல் போற்றி
ஓம் சங்கரன் வேல் போற்றி
ஓம் சண்முக வேல் போற்றி
ஓம் சமரில் வேல் போற்றி
ஓம் சர்வ சக்திவேல் போற்றி
ஓம் சின வேல் போற்றி
ஓம் சீறும் வேல் போற்றி
ஓம் சிவ வேல் போற்றி
ஓம் சிறைமீட்கும் வேல் போற்றி
ஓம் சித்ர வேல் போற்றி
ஓம் சிங்காரன் வேல் போற்றி
ஓம் சுரர் வேல் போற்றி
ஓம் சுடர் வேல் போற்றி
ஓம் சுழல் வேல் போற்றி
ஓம் சூர வேல் போற்றி
ஓம் ஞான வேல் போற்றி
ஓம் ஞானாரக்ஷக வேல் போற்றி
ஓம் தனி வேல் போற்றி
ஓம் தாரை வேல் போற்றி
ஓம் திரு வேல் போற்றி
ஓம் திகழ் வேல் போற்றி
ஓம் தீர வேல் போற்றி
ஓம் தீதழி வேல் போற்றி
ஓம் துணை வேல் போற்றி
ஓம் துளைக்கும் வேல் போற்றி
ஓம் நல் வேல் போற்றி
ஓம் நீள் வேல் போற்றி
ஓம் நுண் வேல் போற்றி
ஓம் நெடு வேல் போற்றி
ஓம் பரு வேல் போற்றி
ஓம் பரன் வேல் போற்றி
ஓம் படை வேல் போற்றி
ஓம் பக்தர் வேல் போற்றி
ஓம் புகழ் வேல் போற்றி
ஓம் புகல் வேல் போற்றி
ஓம் புஷ்ப வேல் போற்றி
ஓம் புனித வேல் போற்றி
ஓம் புண்ய வேல் போற்றி
ஓம் பூஜ்ய வேல் போற்றி
ஓம் பெரு வேல் போற்றி
ஓம் பிரம்ம வேல் போற்றி
ஓம் பொரு வேல் போற்றி
ஓம் பொறுக்கும் வேல் போற்றி
ஓம் மந்திர வேல் போற்றி
ஓம் மலநாசக வேல் போற்றி
ஓம் முனை வேல் போற்றி
ஓம் முரண் வேல் போற்றி
ஓம் முருகன் வேல் போற்றி
ஓம் முக்தி தரு வேல் போற்றி
ஓம் ரத்தின வேல் போற்றி
ஓம் ராஜ வேல் போற்றி
ஓம் ருத்திர வேல் போற்றி
ஓம் ருணமோசன வேல் போற்றி
ஓம் வடிவேல் போற்றி
ஓம் வஜ்ர வேல் போற்றி
ஓம் வல் வேல் போற்றி
ஓம் வளர் வேல் போற்றி
ஓம் வழிவிடு வேல் போற்றி
ஓம் வரமருள் வேல் போற்றி
ஓம் விளையாடும் வேல் போற்றி
ஓம் வினைபொடி வேல் போற்றி
ஓம் வீர வேல் போற்றி
ஓம் விசித்திர வேல் போற்றி
ஓம் வெல் வேல் போற்றி
ஓம் வெற்றி வேல் போற்றி
ஓம் ஜய வேல் போற்றி
ஓம் ஜகத் ஜோதி வேல் போற்றி