ஜீவ சமாதி என்றால் என்ன?


ஜீவ சமாதி என்று பேசப்படுகிறதே அப்படி என்றால் என்ன? அது இறந்த நிலையா அல்லது உயிரோடு இருக்கும் நிலையா? சமாதியில் அமைந்த பிறகு உடலில் உயிர் இருக்காதே! பிறகு அதை ஜீவ சமாதி என்று எப்படிக் கூறுகிறார்கள்? என்றெல்லாம் உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம்.

அமைதியான மனதுடன் கூடிய ஆழமான தவ வாழ்க்கை மூலமே சாத்தியப்படும் விஷயம் அது.


ஞானிகள் தவத்தின் மூலமாகவு, தற்சோதனையின் மூலமாகவும் தன்னுடைய உயிரைத் தூய்மை செய்து முழுமைப் பேறு நிலையடைந்தும், காயகல்பத்தின் மூலமாகத் தன் வித்துவைக் கெட்டிப்படுத்தியும், உலக வாழ்க்கையில் தான் செய்ய வேண்டிய கடமையெல்லாம் செய்து நிறைவு பெற்றும், இனிமேல் நான் இவ்வுலகில் சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தைப் பெற்றும் விட்டால், மனதை இறைநிலையோடு இணைத்துவிட்டு லம்பிகா யோகத்தின் மூலம் உயிரை உடலோடு சுவரச் செய்து விடுவார்கள்.

முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின் படி சீடர்கள் உடலைப் புதைத்துவிடுவார்கள். மன இயக்கமும் உடல் இயக்கமும் நின்று விட்டாலும் இந்த உடலைவிட்டு ஜீவன் பிரியாதிப்பதால் உடல் கெடாமல் இருக்கும். இதெவே ஜீவசமாதி என்றழைக்கப்படுகிறது.
இதுபோல தமிழ் நாட்டில் மகான்கள் அடக்கமான பதினெட்டு ஸ்தலங்கள் உள்ளன. பழனி, திருப்பதி, சிதம்பரம் வைத்தீஸ்வரன் கோவில், மந்த்ராலயம் போன்ற இடங்களிலெல்லாம் சித்தர்கள் அடக்கமாகியிருக்கிறார்கள்.
அந்த இடத்தின் மேல் நம் முன்னோர்கள் சிலைகளை வைத்து கோயில் கட்டி வழிபாட்டுக்குரியதாக அமைத்துள்ளனர். என்றைக்கும் அந்த மகானுடைய ஆற்றல் அவருடைய உடலைவிட்டுப் பிரியாதிருக்கும்.

அவர்கள் உலக நன்மைக்காக உடலடக்கம் பெற்ற போது எண்ணிய எண்ணங்கள் எல்லாம் அங்கேயே இருப்பதால் அதை மக்கள் சுற்றிவர சுற்றிவர, அந்த மகான்களுடைய எண்ணங்கள் மக்களை வழிநடத்தும்.
சித்தர்கள் அடக்கமான கோயில்களுக்குக் குடமுழுக்குத் தேவையில்லை. "ஜீவன்" என்றால் உயிர். "சமாதி" என்றால் சமன் - ஆதி. ஆதிக்குச் சமமாக மனம் நிலைபேறு அடையும் நிலையே ஜீவசமாதி.

- யோகிராஜ் வேதாந்திரி மகரிஷி.