ராமானுஜர்


மோருக்கு விலை மோட்சம்
  திருமலை திருப்பதியில் ராமானுஜர் தம் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது மோர் விற்கும் இடையர் குலப்பெண்மணி ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அவளிடம் குடிப்பதற்கு மோர் கேட்டனர் சீடர்கள். அவளும் விலை ஏதும் சொல்லாமல், சீடர்களுக்கு வேண்டிய
அளவுக்கு மோர் கொடுத்தாள். ராமானுஜரையும், சீடர்களையும் கண்ட அவளுக்கு மனதிற்குள் தானும் இவர்களைப் போல பக்தியில் லயித்து முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.

ராமானுஜர் அவளிடம், ""மோர் என்ன விலை?'' என்று கேட்டார். ""சுவாமி! எனக்கு காசு வேண்டாம். பெருமாளுடன் வாசம் செய்யும் பரமபதத்தில் மோட்சம் பெற வழிகாட்டுங்கள்'' என்று கேட்டாள்.
""உனக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். ஆனால், மோட்சத்தை வழங்கும் தகுதி தான் எங்களுக்கு இல்லை. திருமலையின் மேலே நம் எல்லோருக்கும் மோட்சம் தரும் பெருமாள் அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்!'' என்றார் ராமானுஜர்.
""சுவாமி! திருமலையில் இருக்கும் பெருமாள் வாய் திறந்து பேச மாட்டாரே! நீங்கள் தான் எனக்காக சிபாரிசு ஓலை தரவேண்டும்'' என்றாள். ராமானுஜரும் மோர் விற்கும் இடைச்சியின் நம்பிக்கையை மதித்து சிபாரிசு கடிதம் ஒன்றினை திருமலை திருப்பதி பெருமாளுக்கு எழுதத் தொடங்கினார். சீடர்கள் அனைவரும் வேடிக்கை செய்கிறாரா, விநோதம் செய்கிறாரா என்று புரியாமல் விழித்தனர்.
ராமானுஜரின் சீட்டோலையை வாங்கிய மோர் விற்கும் பெண், திருமலைக்கு புறப்பட்டாள். பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள். ""இது என்ன சீட்டோலை?'' என்று அவர்கள் கேட்டனர். ராமானுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,""உனக்கு மோட்சம் கொடுத்தேன்'' என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.

எனக்கு பிள்ளைகள் இல்லையே! வருந்திய ராமானுஜர்
நம்மாழ்வாரைப் "பகவானின் திருவடி' என்று போற்றுவர். அதுபோல தன்னை நம்மாழ்வாரின் திருவடியாக உலகம் கருதவேண்டும் என்பது ராமானுஜர் எண்ணமாக இருந்தது. ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரைப் பக்தியுடன் வழிபாடு செய்து வந்தார் ராமானுஜர்.
ஒருநாள் ராமானுஜர் ஆழ்வார் திருநகரியிலுள்ள (திருச்செந்தூர் அருகிலுள்ள ஊர்)
சங்கனித்துறையில் நீராடினர். ஆற்றங்கரையில் ஆடை உடுத்தி, திருமண் காப்பிட்டு சீடர்களுடன் கோயிலுக்கு கிளம்பிய நேரத்தில், ஆற்று மணலில் துணி காயவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவர். அவருடைய திருவடிகளை வணங்கினார்.
தான் வணங்கியதோடு தன் பிள்ளைகளை, ""சடகோபா வா! காரிமாறா வா! குருகூர் நம்பி வா!'' என்று பெயர் சொல்லி அழைத்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கச் சொன்னார். அந்த தொழிலாளியையும், அவருடைய பிள்ளைகளையும் கண்டு வியப்பில் ஆழந்தார் ராமானுஜர்.

""இந்த தொழிலாளியைப் போல இல்லறத்தில் வாழ்ந்து, நம்மாழ்வாரின் இனிய திருநாமங்களை (பெயர்கள்) பிள்ளைகளுக்கு இட்டு அழைக்கும் பெரும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லையே! காவி கட்டி இப்படி துறவியாகி விட்டேனே!'' என்று வருந்தினார். இந்த நிகழ்ச்சியின் மூலம் நம்மாழ்வார் மீது, ராமானுஜர் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தியுணர்வு வெளிப்படுகிறது.