ஷீரடி சாய்பாபா கோயிலில் ஸ்டாலின் மனைவி


சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். விழாவில் பங்கேற்ற அவர் பாபாவின் அரிய அற்புத விஷயங்களை ஆர்வமுடன் கேட்டறிந்தார். 50 ஆண்டுகள் பழமையானது மயிலை ஷீரடி சாய்பாபா கோயில். பாபாவின் பக்தரான நரசிங்கசுவாமிகள் இந்த கோயிலை நிர்வகித்தார்.


நாடி வரும் பக்தர்கள் : இந்த கோயிலின் தனிச்சிறப்பு என்னவெனில் மற்ற கோயில்கள் போல் அல்லாமல் பாபாவின் அருகில் சென்று வழிபட முடியும். பளிங்கு சிலையாக உருவம் கொண்ட இந்த சுவாமிக்கு பட்டாடைகள் போர்த்தி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். இந்த கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் வருகை பெரும் அளவில் இருக்கும். இங்கு கடந்த சில நாட்களாக புனரமைப்பு பணி நடந்தது. புதிய கோபுரம் கம்பீரமாக எழுப்பி கும்பாபிஷேகம் விழா 5 நாட்களாக கொண்டாடப்பட்டது. 5ம் நாளில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி யாகசாலை பூஜை, சிறப்பு பஜனை ஆகியன நடந்தன. மாலையில் ஷீரடி சாய்பாபாவின் வீதி உலா நடந்தது.


துணை முதல்வர் ஸ்டாலின் மனைவியின் எளிமை : இந்த இனிய விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பங்கேற்றார். இவர் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தை ஆவார். கும்பாபிஷேகம் முடிந்து சீரடி சாய்பாபாவுக்கு நடந்த அபிஷேகத்தை நேரில் நின்று பார்த்தார். ஒரு மணி நேரம் காத்திருந்து, பிரசாதங்களை பக்தர்களோடு , பக்தராக பெற்றுக்கொண்டார். துணை முதல்வர் மனைவி என்பதை காட்டிக்கொள்ளவில்லை.


பாதுகாப்பு கெடுபிடிகள் எதுவும் இல்லை. இதனால் ஏனைய பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். யாருக்கும் இடையூறும் இல்லாமல் பொறுமையாக பக்தர்களோடு நின்று வணங்கியதை அங்கு வந்திருந்த பக்தர்கள் கனிவுடன் பார்த்தனர். துணை முதல்வர் மனைவி துர்காவின் எளிமையை அங்கு இருந்த பக்தர்கள் வியந்து பாராட்டினர். சாய்பாபாவின் அற்புதங்களை பெண் ஒருவர் கூறுவதை, ஆர்வமுடன் கேட்டு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


உரிய பலன் உண்டு : இந்த கோயிலை பொறுத்தவரை சாதி, மதம் பாராமல் எல்லா பிரமுகர்களும் இங்கு வந்து செல்வதாக ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தெரிவித்தார். இங்கு நம்பிக்கையுடன் வரும் பக்தர்களுக்கு உரிய பலன் கிடைப்பதை தாம் கண்கூடாக பார்த்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.