
‘சிவமாக்கி எனையாண்ட’ என்பார் மணிவாசகர். ‘தன்னைப்போலத் தன்னடியார்க் கின்பளிப்பவன்’, ‘தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவான்’ என்றும் திருஞானசம்பந்தர் பாடுகின்றார்.
தன்னைப்போல் உயிர்களையும் ஆனந்தமயமாக்கும் இச்சைமிகுதியால் (அன்பினால்) உயிர்களோடு அநாதியே அவன் நிலைபெற்றுள்ளான். இறைவனின் இத்திட்டத்தை ‘அன்பின் மன்னும் அரனே மலந்துரந்து’ என்று சிவஞானபோதம் கூறும்.
‘ஆன்மாவைத் தனது திருவடிக்கண் சேர்த்துக் கோடற்கு உளதாகிய இச்சை மிகுதியால் அவ்வான்மாவின்கண் அநாதி முதல் அத்துவிதமாய் நிலைபெறும் முதல்வன்’ எனச் சிவஞானமாபாடியம் அவனுடைய திருக்குறிப்பை விளக்கிற்று.
இறைவன் உயிர்களின் பொருட்டு உலகு உயிர்களுடன் கொண்டிருக்கின்ற தொடர்பை அத்துவித சம்பந்தம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. அதற்கு இரண்டற்ற தொடர்பு என்பது பொருள்.
அந்த அத்துவிதசம்பந்தம் சைவ சாத்திரங்களில் மூன்று நிலையாகப் பேசப்படுகின்றன:
1. கலப்பினால் ஒன்றாதல். (அபேதம்)
2. பொருள் தன்மையினால் வேறாதல். (பேதம்)
3. உயிருக்கு அனுபவம் அளிக்க உடனாதல். (பேதாபேதம்)
1. கலப்பினால் ஒன்றாதல்:
ஒருவனைப் பெயர் சொல்லி அழைத்தால் அவன் உடனே ஏனென்று கேட்கின்றான். அந்தப் பெயர் அவன் உடலுக்கு இட்டதா? அல்லது உயிருக்கு இட்டதா?
‘உடலும் உயிரும்போல’ என்பது இந்த சம்பந்தத்திற்குக் காட்டப்படும் உவமை.
உடலும் உயிரும் வேறு என்றாலும் இரண்டும் சேர்ந்த கலப்பினால் ஒன்றாகி அந்தப் பெயருக்கு உரியதாகின்றது. மேலும் உயிர் இருந்தால்தான் உடல் இயங்கும். உயிர் இல்லையேல், உடல் அழிந்துவிடும்.
உடலும் உயிரும் கலந்து ஒரே பொருளாக இருப்பது போல இறைவன் உலகு உயிர்களில் கலந்து இருக்கின்றான்.
உயிரின் கலப்பு இல்லாமல் உடம்பு தனித்து இராது; இயங்காது. அதுபோல இறைவனின் கலப்பு இல்லாமல் உலகும் உயிரும் தனித்து இருக்கவும் இயலாது; இயங்கவும் இயலாது. உலகப்பொருள்கள் அவ்வவற்றிற்கு உரிய இயல்புகளோடு இருப்பது, இறைவன் அவற்றோடு, தான் தன் சத்தியினால் கலந்திருக்கும் கலப்பினாலேயே ஆகும். சூரியனின் ஒளியும், சந்திரனின் தண்மையும் நிலத்தின் வலிமையும் நீரின் குளிர்ச்சியும் நெருப்பின் வெப்பமும் காற்றின் அசைவும் கடவுளின் ஆற்றல் அவற்றில் கலந்திருப்பதனாலாயே ஆகும்.
இவ்வாறு முதல்வன் உலகு உயிர்களில் கலந்து அவைகளாகவே இருப்பதைத் திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய நின்ற திருத்தாண்டகமும், வேத மந்திரமான ருத்திரமும் பாடுகின்றன. இவ்விரண்டு நூல்களும் இறைவன் உலகத்தோரால் மிக உயர்ந்தனவாகக் கருதப்படுவனவற்றோடும் மிக இழிந்தனவாகக் கருதப்படுவன வற்றோடும் வேற்றுமையின்றிக் கலந்து ஒன்றாயிருப்பதை எடுத்துக்கூறுகின்றன.
இறைவனது பூரண வியாபகத்தில் நன்று தீது, பிறப்பு இறப்பு, ஆதி அந்தம், உயர்வு இழிவு, இன்பதுன்பங்கள் போன்ற இரட்டைகள் இல்லை என்ப்தை இவ்விரண்டு நூல்களும் எடுத்தியம்புகின்றன.
இந்த நூல்களின் பொது நோக்கத்தை வேண்டும் என்று மறைத்தோ அல்லது, புரியாமலோ, சிலர்‚ ருத்திரத்தில் சில தொடர்களை மட்டும் பிரித்தெடுத்து, சிவன் ‘வேட்டைக்காரன், திருடர்களின் தலைவன், பசுக்களை மேய்த்துக் கொண்டு பித்தனாக ஊளையிட்டுக் கொண்டு திரிபவன்’ என்றுகூறித் தம்முடைய அறியாமையை (அறிவை?) வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.
புராணங்களில் மறையவனாகவும் வேதியனாகவும் தோன்றும் இறைவனே இழிந்த பன்றியாகவும் வேட்டுவனாகவும் பள்ளனாகவும் வந்த கதைகள் இக்கருத்தை வெளிப்படுத்துவனவேயாகும்.
2. பொருள் தன்மையினால் வேறாதல்:
இறைவன் உயிர்களோடு கலந்து அவையேயாக இருந்தாலும் அதேசமயம் அவற்றின் வேறாகவும் இருப்பன். இறைவனும் சித்து (அறிவு உடையபொருள்), உயிரும் அறிவுடைப் பொருள்.
என்றாலும் இறைவன் அறிவிக்கும் சித்து, உயிர் இறைவன் அறிவிக்க அறியும் சித்து. இது போன்று, பொருள்தன்மையில் உயிர், இறை ஆகிய இந்த இரு சித்துக்களிடையில் வேற்றுமை உண்டு.
இறைவன் பொருள்தன்மையால் வேறாகி உயிருடன் கலந்து நிற்பதற்கு சைவசாத்திரம் கூறும் உவமை, ‘கண்ணொளியோடு கலந்து நிற்கும் சூரியவொளிபோல்’ என்பது.
கண், காட்சிப் புலனை உடையதென்றாலும் தானே பொருளைக் காணாது சூரியஒளி கண்ணொடு கலந்து நின்று காட்டினால்தான் கண் காணும். எனவே கண் காண்கின்றபொழுது, கண்ணொளியும் சூரியவொளியும் கலந்தே நிற்கின்றன. அவ்வாறு காட்சியில் இருவொளிகளும் கலந்து நின்றாலும் கண்ணொளி வேறு சூரிய ஒளி வேறே.
கண்ணொளி பொருளைக் காண்கின்றது. சூரியவொளி பொருளைக் காட்டுகின்றது. அதாவது, சூரியவொளி கண்ணுக்குக் காட்டும் உபகாரத்தைச் செய்கின்றது.
கண்ணைப் போல உயிர்; சூரியனைப்போல சிவன். உயிர் ஒரு பொருளை அறிந்து சீவிக்கும்போது, சிவனும் அவ்வுயிருடன் இயைந்தே நிற்பான். அவன் அறிவிக்க, ஆன்மா அறியும். உயிர் அறியும் அந்த நிலையில், உயிரும் சிவனும் பிரிக்கமுடியா அத்துவிதமாக இருந்தாலும் சிவன் உயிருக்கு அறிவிக்கும் பொருளாக பொருள் தன்மையில் வேறுபட்டு நிற்பன். அதாவது, சிவன் உயிருக்குக் காட்டும் உபகாரத்தைச் செய்பவனாக இருப்பன். உயிர் அந்த உபகாரத்தின் பயனை அனுபவிக்கும் பொருளாக இருக்கும்.
சிவன் பொருள் தன்மையில் வேறாகி உயிரை இயக்குகின்றான்; உயிர் இயங்குகின்றது.
இறைவன் அறிவிப்பான் என்பதன் பொருள், உயிர் அறிவை விளக்கி, அது பொருளை அறியும் தகுதியைப் பெறச் செய்வான் என்பதே கருத்து.
3. இறைவன் உடனாதல்:
இறைவன் வேறாய் நின்று பொருளை உணர்த்துவதனால் பொருளை அறியும் தகுதியை அடைந்தாலும் கூட, உயிர் பொருளைத் தானே அறியும் திறனைப் பெறுவதில்லை. இந்த நிலையிலும் இறைவன் உபகரிக்கின்றான். உயிரறிவு பொருளை அறியும் படி உயிரறிவுடன் தானும் உடன்நின்று பொருளை அறியும் உபகாரத்தைச் செய்கின்றான்.
உயிர் ஒன்றை அறியும்போது சிவனும் உடன்நின்று தானும் அறிவதற்குக், ‘கண்ணொளியோடு கலந்து நிற்கும் உயிரறிவு’ உவமையாகக் காட்டப்படுகின்றது.
கண் ஒரு பொருளைக் காணும்போது அதனுடன் உயிரறிவும் இடையீடின்றிக் காண்கின்றது. உயிரறிவு கண்ணுடன் உடன்நிற்கவில்லை என்றால் கண் அந்தப் பொருளைக் காணாது. பொறி, புலனை அறியும்பொழுது உயிரறிவும் உடன் நின்றால்தான், அப்பொறி ,புலனை அறிய இயலும். கண் ஒரு பொருளைக் காண மனம் அங்கில்லையென்றால் கண்ணுக்கு அந்தப் பொருள் காட்சிப்படுவதில்லை.
எனவே, உயிர் பொருள்களை அறிவதற்கும், அறிந்து அனுபவிப்பதற்கும் இறைவன் உடனாகின்றான் என அறிதல் வேண்டும்.
இந்த உவமையைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
உயிர் பொறிகளோடு உடனாகி நின்று காண்பதன் பயன் பொறிகளுக்கன்று; உயிருக்கே. இந்த உவமையின்படிப் பார்த்தால் சிவன் உயிரோடு உடன் நின்று காட்டித் தானும் காண்கின்றான் என்றால், காண்பதன் பயன் சிவனுக்கல்லவா ஆகவேண்டும். அவ்வாறன்று. சிவன் வியாபக அறிவுள்ளவன். அவனுடைய வியாபகத்தில் எல்லாம் அடங்கியிருத்தலினால் அவன் எதனையும் சுட்டி அறிய வேண்டுவதில்லை. சிவன் உயிரின் உடன் நின்று காட்டிக் காண்பதன் பயன் உயிருக்கே அன்றிச் சிவனுக்கில்லை. இந்த வேறுபாட்டை அறிதல் வேண்டும்.
இறைவன் சடப்பொருள்களுடனும் சித்துப் பொருள்களுடனும் ‘உடனாய்’ இருப்பதனால், சடப்பொருள்கள் அவற்றுக்குரிய ‘இயக்கம்’ பெறுகின்றன. சித்துப் பொருள்கள் அறிவைப் பெறுகின்றன.