சுப்பராம தீட்சிதர்


 அகவல்
கவிதையும் அருஞ்சுவைக் கான நூலும்
புவியினர் வியக்கும் ஓவியப் பொற்பும்
மற்றுள பெருந்தொழில் வகைகளிற் பலவும்
வெற்றிகொண் டிலங்கிய மேன்மையார் பரத
நாட்டினில் இந்நாள் அன்னியர் நலிப்ப.

ஈட்டிய செல்வம் இறந்தமை யானனும்
ஆண்டகை யொடுபுகழ் அழிந்தமை யானும்
மாண்டன பழம்பெவரு மாட்சியார் தொழிலெலாம்;
தேவர்கள் வாழ்ந்த சீர்வளர் பூமியில்
மேவிய குரக்கர் விளங்குதல் போல.

நேரிலாப் பெரியோர் நிலவிய நாட்டில்
சீரிலாப் புல்லர் செறிந்துநிற் கின்றார்;
இவரிடை
சுரத்திடை இன்னீர்ச் சுனையது போன்றும்,
அரக்கர்தங் குலத்திடை வீடண னாகவும்,

சேற்றிடைத் தாமரைச் செம்மலர் போன்றும்,
போற்றதற் குரிய புனிதவான் குலத்தில்
நாரத முனிவன் நமர்மிசை யரளால்
பாரத நாட்டில் பழமாண் புறுகென
மீட்டுமோர் முறைஇவன் மேவினன் என்ன,

நாட்டுநற் சீர்த்தி நலனுயர் பெருமான்
தோமறு சுப்ப ராமனற் பெயரோன்
நாமகள் புளகுற நம்மிடை வாழ்ந்தான்
இன்னான் தானும் எமையகன் றேகினன்;
என்னே நம்மவர் இயற்றிய பாவம்!

இனியிவ னனையரை எந்நாட் காண்போம்?
கனியறு மரமெனக் கடைநிலை யுற்றோம்
அந்தோ மறலிநம் அமுனைக் கவர்ந்தான்!
நொந்தோ பயனிலை நுவல யா துளதே?

விருத்தம்

கன்னனொடு கொடைபோயிற்று;உயர்கம்ப
நாடனுடன் கவிதை போயிற்று
உன்னரிய புகழ்ப்பார்த்த னொடுவீரம்
அகன்றதென உரைப்பர் ஆன்றோர்;
என்னகநின் றகலாதோன் அருட் சுப்ப
ராமனெனும் இணையி லாவிற்
பன்னனொடு சுவைமிகுந்த பண்வளனும்
அகன் றதெனப் பகர லாமே.

கலைவிளக்கே!இளசையெனும் சிற்றூரில்
பெருஞ்சோதி கதிக்கத் தோன்றும்
மலைவிளக்கே!எம்மனையர் மனவிருளை
மாற்றுதற்கு வந்த ஞான
நிலைவிளக்கே!நினைப்பிரிந்த இசைத்தேவி
நெய்யகல நின்ற தட்டின்
உலைவிளக்கே யெனத்தளரும்;அந்தோ!நீ
அகன் றதுயர் உரைக்ற் பாற்றோ?

மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்க லாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்;
உன்னருமைச் சொற்களையே தெய்விகமாம்
எனக்கருதி வந்தேன்;அந்தோ!
இன்னமொரு காலிளசைக் கேகிடின்,இவ்
வெளியன்மனம் என்ப டாதோ?