கோயிற்கலை காப்போம்!


கடந்த மே மாதம் 26-ம் தேதி காளஹஸ்தி கோயில் கோபுரம் இடிந்து விழுந்தது. கோயில் கோபுரம் விரிசல்விடத் தொடங்கிய பின்னர்தான், அந்தக் கோபுரத்தின் தன்மை குறித்து ஆராயப்பட்டது. சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வெறும் செங்கற்களாலும் சுண்ணாம்பாலும் கட்டப்பட்ட அந்தக் கோபுரத்தை இனியும் காப்பாற்ற முடியாது என்று தீர்மானித்து, அந்தக் கோபுர வாசல்வழியாக பொதுமக்கள் யாரும் செல்ல முடியாதபடி முன்பே தடுப்பு போடப்பட்டிருந்தது. அந்தக் கோபுரம் இடிந்து விழுந்தபோது மனித உயிருக்குச் சேதமில்லை என்றாலும், அந்தக் கோயில் கோபுரத்தில் குடியிருந்த 200க்கும் மேற்பட்ட குரங்குகள் அனைத்தும் மடிந்தன.இந்தக் கோபுரத்தில் மிகஅழகான சுதைகளோ அல்லது சிலைகளோ இல்லை என்பதும், இக்கோபுரத்தைக் கட்டுவதற்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் நிதி கோடிகோடியாய் இருக்கிறது என்பதும் தெரிந்த விஷயங்கள்தான். இருப்பினும்கூட, ஆந்திர மாநில பக்தர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், இந்தக் கோபுரத்தில் காலப்போக்கில் சிதிலம் ஏற்பட்டு, உள்ளுக்குள் நீர் இறங்கும் நிலைமை ஏற்பட்டு  கோபுரம் சரிந்து விழுந்தது; கோபுரத்துக்குள் நீர் இறங்காதபடி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தால், கோபுரம் மேலும் 100 ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்பதுதான்.இந்தச் சம்பவத்தை தமிழ்நாடு அறநிலையத் துறை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாட்டில் உள்ள பல நூறு கோயில்கள் குறைந்தபட்சம் 500 ஆண்டுகள் முதல் 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமை கொண்டவை. இந்தக் கோயில்களுக்கு செயல் அலுவலர்கள் உண்டே தவிர, அறநிலையத் துறையில் பாதுகாப்பாளர் (கன்சர்வேட்டர்) என்ற பதவியே கிடையாது.கோயில் கற்சிலைகளுக்கும் கற்தூண்களுக்கும் ரசாயன வண்ணப்பூச்சு நடத்துவதால் அவற்றின் புராதனத் தன்மை கெட்டுப்போகிறது. ஆனால் அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. கோயிலில் மின்விசிறி, குழல்விளக்கு பொருத்துவதற்காக கற்தூண்களில் இரும்புக் கம்பிகளைக் கொண்டு இறுக்கியும், துளையிட்டும் கற்தூண்களைச் சேதப்படுத்துவதும் நின்றபாடில்லை.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மணற்சலவை என்ற பெயரில் சிலைகளின் மீது மணலை வேகமாக அடித்துத் தூய்மை செய்ததில் சிலைகளின் வழவழப்பான பாகங்கள் சிதைந்துபோயின. பின்னாளில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டாலும்கூட, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சிலைகளுக்கு ஒரே நாளில் நிகழ்த்தப்பட்ட சேதத்தை, மாற்றியமைக்க முடியவில்லை, முடியவும் முடியாது.தமிழ்நாட்டில் மிகப் புராதனமான கோயில்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் உள்ள மிக அழகான சிலைகளையும், தேர்களையும், கோபுரங்களையும் பாதுகாக்க வேண்டுமென்றால் மாவட்ட வாரியாக ஒரு கோயில் பாதுகாப்பாளரை நியமிக்க வேண்டியது மிகமிக அவசியம். இது காலத்தின் தேவையும்கூட.இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சோதிக்கவும், அக்கோயில்களுக்குத் தேவையான ரசாயனப்பூச்சு மற்றும் பராமரிப்புகளைப் பரிந்துரைக்கவும் பாதுகாப்பாளர் என்ற பதவி உள்ளது. புதுதில்லியில் உள்ள தேசிய அருங்காட்சியக நிலையத்தில் பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்புக்கான பட்டப்படிப்பு உள்ளது. இதில் ஆண்டுதோறும் 15 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். மைசூரில்கூட, இத்தகைய பாரம்பரியப் பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் புனரமைப்புப் பணிகளின்போது சிவில் என்ஜினீயரிங் முடித்த பொறியாளர்களைப் பயன்படுத்துகிறார்களே தவிர, பாதுகாப்பாளர் என்ற பதவியோ அல்லது அத்தகைய நபரின் மேற்பார்வையோ இருப்பதில்லை. தென்னிந்தியாவின் மரபுச் செல்வங்களில் மிக முக்கியமானவை கோயில்களும் அவற்றின் கற்சிலைகளும், கற்தூண் மண்டபங்களும்தான். ஒவ்வொரு கல்லும் ஒரு விதமான தனித்துவம் கொண்டவை. ஒவ்வொரு கல்லையும் அதன் தன்மைக்கேற்ப பராமரிப்புப்  பணிகளை மேற்கொள்ள வேண்டும். கருவறையில் உள்ள மூலவரின் சிலை எத்தகைய கல்லால் ஆனது என்பதைப் பொறுத்தே, அதற்கான சிறப்புத் தைலம் தயாரிக்கப்பட்டு பூசப்படுகிறது. இது அச்சிலையை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கும் ரசாயனப் பூச்சு. சில ஆலயங்களில் அபிஷேக முறைகள் கூட காப்பு முறைகளாகவே (பிரிசர்வேடிவ் டெக்னிக்) அமைக்கப்பட்டுள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்துவதும்கூட, புனரமைப்புப் பணியை மையப்படுத்தித்தான்.  இவ்வாறாக, நம் முன்னோர்கள் இத்தனை ஆயிரம் காலம் காப்பாற்றி நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ள கோயில்களையும் அதன் சிலைகளையும் காப்பாற்ற வேண்டுமானால், மாவட்ட வாரியாக அல்லது மண்டல வாரியாக ஒரு கோயில் பாதுகாப்பாளரை நியமித்து, கோயில்களை முறையாக ஆய்வுசெய்து, ஆலோசனை வழங்கச் செய்வது மிகமிக அவசியம்.வடஇந்தியாவில் கற்சிலைகள் குறைவு. தென்னிந்தியாவில் மட்டுமே கற்சிலைகள் அதிகம். ஆகவே சிலைகளைப் பாதுகாக்கவும், பல்வகை கற்களின் தன்மைகளை அறிந்திருக்கவும் கூடியவராக சிறந்த நபர்களைத் தேர்வு செய்வதும் அவசியம். அண்ணா  பல்கலைக்கழகத்திலேயே, பாரம்பரியச் சின்னங்களைப் பாதுகாக்கும் பாடப்பிரிவை தொடங்குவதையும்கூட வரவேற்கலாம்.ஒரு நாகரிகத்தின் அடையாளமாகக் கருதப்படுவது இலக்கியமும், கட்டடக்கலையும்தான். பண்டைத் தமிழர்கள் இதை நன்கு உணர்ந்திருந்ததால்தான்,  நமது இலக்கியத்தையும், கட்டடக்கலையையும் மதம் சார்ந்ததாக அமைத்தனர். அதனால்தான், அவை காலத்தைக்கடந்து இன்றுவரை தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றிய வண்ணம் இருக்கின்றன. மூவேந்தர்களின் மாடமாளிகைகளும் கூடகோபுரங்களும் அழிந்துவிட்டன. ஆனால், அவர்கள் எழுப்பிய ஆலயங்களும், அந்த ஆலயங்களின் வானளாவிய கோபுரங்களும் தமிழனின் நாகரிகத்தை மட்டுமல்ல, கட்டடக்கலையில் பண்டைத் தமிழருக்கு இருந்த வல்லமையையும் இன்றும் நிலைநிறுத்துகின்றன.இந்து அறநிலையத்துறை, தொல்லியல்துறை, தமிழ் பண்பாட்டுத்துறை என்று அரசுத்துறைகள் இருந்தால் மட்டும் போதாது. தொலைநோக்குப் பார்வையுடன் பாரம்பரியச் சின்னங்களான நமது ஆலயங்களைப் பாதுகாக்க, முறையாகத் தேர்ச்சிபெற்றவர்கள் நியமிக்கப்பட்டு, முனைப்புடன் செயல்பட்டாக வேண்டும்!