சீனாவுடனான ஒப்பந்தத்தை நாங்கள் மூடிமறைக்கவில்லை - பாகிஸ்தான்

எங்கள் நாட்டில் சீனாவின் ஒத்துழைப்புடன் இரு அணு உலைகள் கட்டுவது தொடர்பாக செய்து கொண்ட ஒப்பந்தத்தை நாங்கள் மூடிமறைக்கவில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.  2009-ம் ஆண்டு சீனாவுக்கு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி சென்றிருந்தார். அப்போதே அணு உலைகள் அமைப்பது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி பல மாதங்கள் ஆனநிலையில் இதுகுறித்து அணு எரிபொருள் வழங்கல் நாடுகள் குழுவிடம் சமீபத்தில்தான் சீனா தகவல் அளித்துள்ளது என்று அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். சீனாவில் 6 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், புதன்கிழமை பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார். சீனாவின் ஒத்துழைப்புடன் பாகிஸ்தானில் இரு அணு உலைகளை நிறுவுவது உறுதியாகிவிட்டது. இந்த திட்டத்தில் எவ்வித மாற்றமும் இருக்காது. அணு உலைகள் அமைப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர தாங்கள் தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துவிட்டது என்றும் அவர் கூறினார். பாகிஸ்தானில் அணு உலைகளை நிறுவுவதில் சர்வதேச விதிமுறைகளை எந்தவிதத்திலும் மீறக்கூடாது என்பதில் சீனாவும், பாகிஸ்தானும் உறுதியாக உள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், சீன பிரதமர் வென் ஜியாபாவோ உள்பட அந்நாட்டின் முக்கிய தலைவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, பாகிஸ்தானில் அணு உலைகளை சீனா அமைப்பது தொடர்பாக விவாதித்தார். அப்போது, பாகிஸ்தானில் அணு உலைகள் அமைக்கும் விஷயத்தில் சர்வதேச விதிமுறைகளை மதித்து நடப்போம் என்று சீனத் தலைவர்கள் உறுதி அளித்தது குறிப்பிடத்தக்கது.