வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

வைதிக சைவம்- வேற்றுமையில் ஒற்றுமை

     சிவவழிபாடு நம் பாரதத் திருநாட்டின் தொன்மையானதும் பரவலானதுமாகும். இந்திய நாட்டில் உள்ள பலவகை மொழி, பண்பாடு, கலாச்சாரங்கள் முதலிய வேற்றுமைகளைக் கடந்து மக்களால் சிவன் வழிபடப் பெறுகிறார். இதற்கு இமயம் முதல் குமரிவரை பரவியுள்ள சிவன் திருக்கோவில்களே சான்றாம். திருக்கயிலையின் ஏகநாதனே வடக்கே நேபாளத்தில் பசுபதிநாதனாகவும், தெற்கே இராமேசுரத்தில் இராமநாதனாகவும், மேற்கே குஜராத்தில் சோமநாதனாகவும், கிழக்கே கொல்கொத்தாவில் நகுலேசுவரனாகவும், கலிங்கத்தில் இலிங்கேசுவரனாகவும், நடுவில் காசி விசுவநாதனாகவும்  கோவில் கொண்டுள்ளார்.
சிவனை வழிபடும் சிவநெறியாகிய சைவம் தென்னாட்டில் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே நிலவிய தொன்மைச் சமயமாகும். இதனைச் சைவம் என்ற பெயரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய மணிமேகலை ஆசிரியர் குறிப்பதால் அறியலாம்.
சிவமே முழுமுதற்பொருள் எனக்கொள்ளும்   மெய்யியல், அறவியல், ஒழுக்கக் கோட்பாடுகளுடன் கூடிய சைவசித்தாந்தநெறியொடு புராணக்கதைகளுடன் தொடர்புடைய சிவவழிபாட்டுநெறிகள், பலவகையில் வேறுபடும்.
சிவனை, சைவசித்தாந்தநெறி, உலகத்துக்கு “நிமித்தகாரணனாக’க் கூறும். பானையை உருவாக்க மண் முதற்காரணம். முதற்காரணம் காரியத்தை விட்டுப் பிரியாமல் இருக்கும். மண், சட்டியைவிட்டுப் பிரிவதில்லை. குயவன் நிமித்தகாரணம் அல்லது கருத்தாகாரணம். தண்டசக்கரம் துணைக்காரணம். சிவம் நிமித்தகாரணனாக, சிவசத்தியைத் துணைக்காரணமாகக் கொண்டு, மாயையாகிய முதற்காரணத்திலிருந்து பிரபஞ்சத்தைத் தோற்றுவித்தது எனச் சித்தாந்த சைவநெறி கூறும். எப்படி மண்ணிலிருந்து சட்டி உருவாகியதோ அப்படியே மாயை என்ற முதற்காரணத்திலிருந்து உடல் உடலிலுள்ள கருவிகள் உலகம் உலகபோக விடயங்கள் இறைவனால் படைக்கப்பட்டன. சட்டியைவிட்டு மண்ணைத் தனியாகப் பிரிக்க முடியாதவாறு போல மாயையாகிய முதற்காரணத்தை விட்டுப் பிரபஞ்சத்தைத் தனியாகப் பிரிக்க முடியாது.
சிவத்தை முதற்காரணமாகவும் துணைக்காரணமாகவும் கொள்ளும் கொள்கைகளும் உண்டு. சிவனை வழிபடுவோருக்குள் சமய ஆசாரம், ஒழுக்கம், உணவு சிவத்தின் வியாபகம், உலகு கடந்தநிலை, மெய்யறிதல், முத்திநிலை ஆகியன பற்றிய கருத்து வேறுபாடுகளும்  உண்டு.
கொள்கை வேறுபாடுகளைப் போலச் சிவனடியார்களின் திருவேடத்திலும் வேறுபாடுகள் உண்டு.
தம்முடைய திருவாரூர்த் திருப்பதிகத்தில் அப்பர் பெருமான், திருவாரூர்த் திருவீதிகள் எண்வகைக் கணத்தாரால் பொலிவு பெற்றதாகப் பாடியருளினார். எண்வகையாவார்: (1) அருளிப்பாடியர். (2) உரிமையிற்றொழுவார் (3) உருத்திர பல்கணத்தார். (4) விரிசடை விரதிகள் (5) அந்தணர் (6) சைவர் (7) பாசுபதர் (8) காபாலிகள். இவர்கள் அனைவரும் கொள்கையாலும் திருவேடத்தாலும் தம்முள் மாறுபட்டவர். ஆயினும் சிவத்தை வழிபடும் நெறியில் ஒற்றுமையுடையவர்.
1. அருளிப்பாடியர் என்பவர் கட்டளைகளை நிறைவேற்றுபவர்கள். 2.உரிமையில் தொழுவார் – ஆதிசைவர்களாகிய சிவாச்சாரியர்கள். முப்போதும் திருமேனி தீண்டி வழிபடும் உரிமையுடையோர். 3. உருத்திர பல்கணத்தார்- சைவத்தினுள் பலவகை அகப்புறச்சமயத்தவர்கள். விரிசடை விரதிகள் – மாவிரதிகள் என்னும் பிரிவினர். இவர்களை மற்றொரு திருப்பதிகத்தில் அப்பர் பெருமான், “வித்தகக்கோல வெண்டலைமாலை விரதிகள்” என்றர். தம் அடையாளமாகத் தலைமாலை, எலும்புமாலை முதலியன அணிதலால் ‘வித்தகக் கோல விரதிகள்’ என்றார். இறைவர், மானக்கஞ்சாற நாயனாருக்கு அருள்புரியவந்த திருக்கோலம் ‘மாவிரதிகள்’ திருக்கோலம். இவர்கள் எலும்புமாலையோடு, நீண்டதலமுடியைத் திரித்துப் பூணூலாக அணிவர்.(மானக்கஞ்சாற நாயனார் புராணம்21 -23,”மைவந்த நிறக்கேச வடப்பூணு நூலும்’”) 5. அந்தணர் – முனிவர்,வேதப்பிராமணர், ஆதிசைவர் முதலியோர். 6. சைவர்- சைவவாதி எனப்படுவோர், 7. பாசுபதர்- பாசுபதவிரதிகள், சைவத்தின் அகப்புறச் சமயத்தின் ஒருசாரார். 8. காபாலியர் – பச்சைக்கொடி ஒன்று கைக்கொண்டு நாள்தோறும் மனைதோறும் தலையோட்டில் பிச்சையேற்றுண்பவர்.
வேதவழக்கினை மேற்கொண்டொழுகிய வேதியரும் சிவனை வழிபடுதலால் சைவர் எனப்படுவர். மாவிரதிகள்,பாசுபதர், காபாலியர் முதலியோர் வேதநெறியினர் அல்லர். இவர்களுடைய சமய ஒழுக்கமும் ஆசாரமும் எத்தகையதாயினும் சிவனை வழிபடுவோர் ஆனதால் இவர்களும் சைவர்களே எனத் திருமுறைகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
திருஞானசம்பந்தர், “காதலாற் சைவர் பாசுபதர்களும் வணங்கும் சண்பைநகர்” என்கிறார்.(சண்பை நகர் – சீகாழி)  சிவனுக்குச் சைவன் என்பதொரு பெயர் உண்டு. காபாலிகள் சைவக் கோலம் பூண்டு தலையோட்டில் பலியேற்றுண்டு கோயில்களை இடமாகக் கொண்டு ஒழுகுவர். மத்தவிலாசத்தில் வரும் காபாலி திருக்கச்சியேகம்பத்தை இடமாகக் கொண்டவன். திருமயிலாப்பூரிலுள்ள திருக்கோயில் கபாலீச்சரம் எனப்படும். கபாலிகள் அங்கு வாழ்ந்ததால் அப்பெயர் பெற்றிருக்கக் கூடும். அங்கு ‘உருத்திர பல்கணத்தார்க்கு உணவு அட்டிடும்’ மாகேசுர பூசையைத் திருஞானசம்பந்தர் சிறப்பித்துப் பாடியுள்ளார். மாவிரதிகள், “தீக்கைபெற்று எலும்பு மாலையணிதல் முதலிய சரியை மேற்கொண்டொழுகுபவர்” இவர்கள் இருவரிடத்தும் சைவக்கோலம் சிறந்து விளங்குதல் பற்றித் திருஞான சம்பந்தர் சைவர் என்னும் சொல்லால் குறிப்பிட்டார்.
திருஞானசம்பந்தர் திருக்காளத்தி வழிபடச் சென்றபோது, அங்கு,
“பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர்
பலவேடச் சைவர்குல வேடர் மற்றும்
உம்பர்தவம் புரிவாரப் பதியில் உள்ளோர்
உடன்விரும்பி எதிர்கொள்ள உழைச்சென்று உற்றார்”
என்று தெய்வச்சேக்கிழார் கூறுகின்றார். நெருங்கிய சடாமுடி தரித்த தவமுனிவர்களும் கபாலத்தைக் கையில் ஏந்திய கபாலியரும் இன்னும் பலவிதமான சிவக்கோலம் பூண்ட சைவர்களும் வேடர்கூட்டமும் பிள்ளையாரைத் திருக்காளத்தியில் வரவேற்றனராம்  .
வைதிக சைவத்தினராகிய திருஞானசம்பந்தருடைய திருமணத்திற்கு வந்த கூட்டத்தினரை இன்னார் இன்னார் எனக் கூறிவந்த சேக்கிழார் பெருமான்,
“அறுவகை விளங்கும் சைவத்து அளவிலா விரதம் சாரும்
நெறிவழி நின்ற வேடம் நீடிய தவத்தி னுள்ளோர்
— — — குழாம் குழாம் ஆகி ஏக”    என்றார்.
அறுவகையாக விளங்கும் சைவத்தினராவார்: சைவம், பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம். வைதிகப் புறத்தரான இவர்களும் உரிமையுடன் வைதிகத் தலைவரின் திருமணத்தில் திரள் திரளாகக் கலந்து கொண்டனரென்றால், திருஞானசம்பந்தர் இவர்களைத் தழுவிக்கொண்ட சிறப்பையும் இவர்கள் அவரைத் தலைவராகக் கொண்ட சிறப்பையும் உணர்தல் வேண்டும்.
திருத்தொண்டர் புராணம் இவர்களுடைய திருவேடப் பொலிவை நன்கு எடுத்துக் காட்டுகின்றது. சேக்கிழார் சிவபெருமானுடைய மாவிரதக் கோலத்தை மானக்கஞ்சாற நாயனார் புராணத்திலும், கபால பயிரவக்கோலத்தைச் சிறுத்தொண்டநாயனார் புராணத்திலும் சேக்கிழார் விரித்தோதினார். அத்துடன் இச்சமயநெறி வடநாட்டில் உள்ளது எனவும் விதந்தோதினார். இவர்கள் குழுக்களாக, இல்லறத்தாரை விட்டு விலகித் தனியாக வாழ்பவர்கள் என்பதும் பெரியபுராணத்திலிருந்து தெரிகின்றது.
shiva-devoteeதிருமுறைகளில் சிவத்தை வருணிக்கும் பல தொடர்கள் இந்த அவைதிக சைவநெறியாளர்களின் தோற்றத்தைப் புலப்படுத்துவனவாக உள்ளன. “காடுடைய சுடலைப் பொடிபூசி”.; ”ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதி ரத்தினை ஏற்றுத், தோன்று தோள்மிசைக் களேபரந் தன்னைச் சுமந்த மாவிர தத்தகங் காளன்”( தோள்மேல் எலும்புக் கூட்டினைச் சுமக்கின்ற பெரிய விரதத்தையுடைய கங்காள வேடத்தை உடையவன். களேபரம், கங்காளம் – எலும்புக்கூடு), “நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவ்வடி மார்பன்” (நரைபொருந்திய மயிரால் இயன்ற பஞ்சவடியை அணிந்த மார்பை உடையவன். பஞ்சவடி – மயிரினால் ஆன பூணூல்)
மயிரையும் எலும்பையும் அறியாமல் தீண்டிவிட்டாலே தீட்டாகிவிடும், தீட்டினை நீக்க உடனே நீராட வேண்டும் என்பது வைதிகநெறி. ஆனால் பரமேசுவரனே தீண்டத்தகாத சாம்பலையும், மயிரையும் எலும்பினையும் அணிந்துள்ளான் என்று திருமுறைகள் துதிக்கின்றன.
வைதிகமதம் தன்னுள் நாட்டார் வழிபாடுகளையும் பாமரவழிபாட்டையும் பழங்குடியினர் வழிபாட்டினையும்  உள்வாங்கித் தன்னுள் அடக்கிக் கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. இவ்வாறு வைதிகமதத்தில் கலந்துவிட்டவர்கள் தங்களுடன் தாங்கள் இதுவரை வழிபட்டுவந்த வழிபாட்டுச் சின்னங்களையும் வைதிக வழிபாட்டுக்குக் கொண்டுவந்துவிடுவர். அவை புராணக் கதைகளாலும் வேறு மரபுகளாலும் வைதிகத் தன்மை பெற்றுவிடும். மாரியம்மன் மாகாளி முதலியசத்திவழிபாடு, ஐயப்ப சாத்த வழிபாடு, முனியப்பன் கருப்பராயன் வழிபாடு, ஊர்த்தெய்வ வழிபாடு, மூத்தோர் முதலியன ஒருதெய்வ வைதிக வழிபாடாக மாற்றம் எய்திவிடும்.
சிலப்பதிகாரத்தில் மாசாத்தன் ஒருசிறுதெய்வம். கந்தபுராணம், மாசாத்தப்படலத்தில் சாத்தனைச் சிவனின் மகனாகப் படைத்து வைதிக தெய்வமாக உயர்த்துவிட்டது. அதற்கு வழிகோலியது, “சாத்தனை மகனாக் கொண்டாய்” என்னும் அப்பர்பெருமான் வாக்கு.
மாரியம்மன் என்று பாமரமக்கள் வழிபடும் பரசுராமனின் தாய் இரேணுகா தேவி , ‘ஏதமில் உயிர்த்தொகை எவற்றி னுக்கும்நீ, தாதைதாய் இமவரைத் தைய லகுமால்” என்று சிவபெருமான் அருள் செய்து, வைதிகக் கடவுளின் நிலைக்கு உயர்த்தியருளினான். பரசுராமரால் உயிரெழுப்பப்பட்ட இரேணுகை கணவனை யிழந்தமையால் வருந்தி, பரசுராமர் சொல்லால் காஞ்சியை அடைந்து ஒரு இலிங்கம் தாபித்துப் பூசித்து, சிவனருளால், தான் உலகத்தில் சில தாழ்ந்த மக்களால் வழிபடும் தெய்வமாக இருந்து, அவர்கள் வேண்டியவற்றைக் கொடுக்கவும், தான் பூசித்த இலிங்கத்தில் அம்மையப்பர் எழுந்தருளியிருந்து யாவர்க்கும் போகமும் வீடும் அருளும் வரங்களைப் பெற்றும் வைதிகக் கடவுளானாள். இது காஞ்சிப்புராணத்தில் இரேணுகேச்சரப் படலத்தில் உள்ள செய்தி.
திருஞானசம்பந்தர் காலத்தில் சமணர்களும் பவுத்தர்களும் திருநீறணிந்து சைவர்கள் ஆயினர். அவர்களோடு அவர்கள் வழிபட்ட தீர்த்தங்கரர் வடிவங்களும் தியானபுத்த வடிவங்களும் சைவத்துக்கு வந்துவிட்டன. திருமுறைகளில் பிச்சாடனக் கோலம் பல இடங்களில் சுவையாகப் பாடப்பட்டுள்ளது. தேவாரத்தில்தான் முதன்முதல் பிச்சாடனக் கோலம் பாடப்பட்டுள்ளது. இது திகம்பரசமணர்கள் சைவசமயத்தைத் தழுவியதன் பயன்போலும். கிராமங்களில் முனியப்பன் என்றும் தன்னாசியப்பன் என்றும் வழிபடப்படும் உருவங்கள் பவுத்தர்கள் வைதிக மதத்தைத் தழுவியதால் வழிபாடு போலும்.
பழைமையான சிவன் கோவில்களூக்குச் சென்று பார்த்தோமானால், பிரகாரங்கள் தோறும் சிறுசிறு கோவில்கள் இருக்கும். சூரியன் ,சந்திரன், துர்க்கை, காளி, பைரவர், விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள் முதலிய வெவ்வேறு தெய்வங்களின் சிறு கோஷ்டங்கள் பிரகாரங்களில் அமைந்திருக்கும்.  பெரிய கோவில்களில் வழிபடும்போது பிரகாரத்தில் உள்ள கோட்டங்களில் வழிபட்ட பின்னரே மூலத்தானத்திற்குச் சென்று வழிபட வேண்டும் என்றொரு முறை உள்ளது. இது பலதெய்வ வழிபாடு அன்று. இது மூலத்தானத்தில் உள்ள பரம்பொருளின் பெருமையை உணர்த்துவது.
shivaperuman17இசுலாமிய மதத்தைச் சார்ந்த என் நண்பர் ஒருவர் உங்கள் கோவில்களில் என்ன இத்தனை உட்கோவில்களும், தெய்வங்களும்? எனக் கேலியாக வினவினார். அதற்கு நான் நேரிடையாகப் பதில் சொல்லவில்லை. குடிசையில் வாழ்பவனைக் குடிசைக் கதவைத் திறந்தவுடன் பார்த்துவிட முடியும். எங்கள் சுவாமி மகாராஜன், தியாகராஜன், பிரபஞ்சத்திற்கு ஏக சக்கிரவர்த்தி. அவனுடைய பரிபாலனத்துக்கேற்ற பரிவாரங்களும் மிகுதி. கூப்பிட்ட குரலுக்கு வந்து பணி கேட்க எங்கள் பெருமானுடைய திருமாளிகையில் அவர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். பெருமானுடைய ஊழியர்களின் அனுமதி பெற்றுப் பெருமானை தரிசிப்பதுதான் முறை.நாம் நினைத்தவுடன் அவரைச் சென்று கண்டுவிட முடியாது.   நவாபுகளின் அரண்மனைகள் ஏன் இவ்வளவு பெரியனவாக உள்ளன? நவாபுக்கு ஒரு அறை போதுமே அல்லவா? எனக் கேட்டேன். அவர் சற்று நேரம் யோசித்து விட்டு ஒன்றும் பேசவில்லை.
சிறுதெய்வ வழிபாட்டினரை பண்பாட்டுயர்வு நிலைக்கு வைதிகம் இவ்வாறு அழைத்துச் செல்லுகின்றது. இது வைதிக நெறியின் பண்பு.  நாட்டார் வழிபாட்டு நெறிகளைப் பழித்து அழித்து ஒழிக்காமல்  அவற்றைத் தழுவி ஏற்றுக் கொண்டு ஒருபெருந்தெய்வ வழிபாட்டினை அறிமுகப்படுத்தும் வைதிகநெறியின் ஆற்றலை உணர்ந்து போற்ற வேண்டும்.
கி.பி. 6, 7 ஆம் நூற்றாண்டுகளில் வைதிகப் புறத்ததான பவுத்த, சமண மதங்களின் கடுந்தாக்கத்தை எதிர்கொள்ள சிவபரம்பொருளை முழுமுதலாகக் கொண்டு வழிபடும் பல்வேறு சிவவழிபாட்டுநெறிகளையும் ஒன்று திரட்டி அவற்றுள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இன்றியமையாமை  இருந்தது. வழிபாட்டுநெறிமுறைகள், கொள்கை வேறுபாடுகள், சிவசின்னம் முதலியவற்றில் தோற்ற வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு அப்பால் அனைத்து நெறிகளுக்கும் பொதுவாக இருந்த சிவபத்தி ஒன்றே  வேறுபட்ட சிவவழிபாட்டு நெறிகள் பலவற்றையும் வலுவுடன் ஒருங்கு பிணைத்தது. “எவரேனுந் தாமாக விலாடத்திட்ட திருநீறுஞ் சாதனமுங் கண்டால் உள்கி உகந்தடிமைத் திறம்பேணி” எனும் அப்பர் பெருமான் வாக்கு, இவ்வாறு வழிபாட்டுப் பேதங்களைக் கடந்து அணைத்துக் கொள்ளும் போக்கினுக்குச் சான்று பகர்கின்றது. தலைமகனாகி வந்த தமிழ்ஞானசம்பந்தப் பிள்ளையார், திருத்தொண்டின் நெறிவாழ வந்த திருநாவுக்கரசு நாயனார் ஆகியோரின் அருந்தொண்டால் சைவம்  நிலைகொண்டபின், தமிழகம் சிவத்தை வழிபடும் அனைத்து நெறியாளர்களுக்கும் புகலிடமாக மாறியது. திருவாரூர் சிவராஜதானி ஆயிற்று. அதனை அப்பர் பெருமானின் திருவாரூர்த் திருப்பதிகங்கள் எடுத்துக் காட்டுகின்றன.