
திரிசூலத்தில் அர்த்தநாரீஸ்வரர்: சோழர் கால பஞ்சலோக சிலை
வைதிக சைவம் – ஒற்றுமையில் வேற்றுமை
தென்னாட்டுக்குரிய சைவநெறி பாரம்பரிய சிந்தனை வளர்ச்சியில் தோன்றியது; தமிழ் இலக்கண இலக்கிய மொழிப்பண்பின் வலிமையுடையது. வேறுபட்ட சிவவழிபாட்டு நெறிகள் பலவும் தமிழகத்தில் மையம் கொண்டமையால் எது உண்மைச் சைவநெறி என்பதில் குழப்பம் ஏற்பட்டது. அறிஞர்கள் சிலர் வேதப் புறமான காபாலிகம், காளாமுகம், பாசுபதம், மாவிரதம் ஆகிய நெறிகளே சைவம் எனக் கருதத் தலைப்பட்டனர். சடைமுடி தரித்தலும், சாம்பல் மெய் பூசுதலும் அக்கமணி அணிதலுமே சைவம் எனச்சிலர் கருதினர். சிலர் புலாலுண்ணாமை மட்டுமே சைவம் என்றனர். மற்றும் சிலர் சைவம் எந்தத் தத்துவ அடைப்படையுமில்லாத பெளராணிக மதம் எனக் குறுகிய பொருளில் புரிந்து கொண்டனர்.
சங்கரருடைய பிரம்மசூத்திர பாடியத்தில்தான் வடமொழி தத்துவ நூல்களில் முதன்முதலில் சைவத்தைப் பற்றிய குறிப்பு வருகின்றதென்றும் (பிரம்மசூத்திரம் II.2.37), அதில் சைவர்கள் ‘ஈசுவர காரணர்கள்’ எனக் குறிக்கப்படுகின்றார்களென்றும் கூறப்படுகின்றது.
இராமாநுஜர் , தம்முடைய பாடியத்தில் காபாலிகம், காளாமுகம் முதலிய வேதப்புறச்சமயங்களே சைவம் என்று கூறுகின்றது.
சங்கரரின் வரலாறு எழுதிய ஆனந்தகிரி என்பவர் சைவர்களின் பல பிரிவுகளையும் அவர்களின் ஆடை முதலிய புறத்தோற்றங்களின் வேறுபாடுகளையும் குறிப்பிடுவதோடு, காபாலிகர்களில் பிராமணக் காபாலிகர்கள், பிராமணரல்லாத காபாலிகள் என இரண்டு வகை உண்டு என்றும் கூறுகிறார்.
அதர்வண வேதம் உருத்திரனை வழிபடும் ‘விராட்டியர்’ எனப்படும் ஒருவகையினரைக் குறிப்பிடுகின்றது என்றும் அவர்களே சைவர்கள் என்றும் அவர்கள் சாதிப் பிரிவினைகளை அனுசரிக்காதவர்கள் என்றும் கூறப்படுகின்றது.
இராமானுஜர், சைவர் என்போர் மயானத்தில் வசிப்பவர்கள் என்றும் மசான சாம்பலை மெய் முழுவதும் பூசிக் கொள்பவர்கள் என்றும் மண்டையோட்டில் பிச்சை ஏற்று உண்ணும் மாவிரதத்தை உடையோராதலின் ‘மாவிரதிகள்’ எனப்படுவர் என்றும் கூறுகிறார்.
வடமொழிப் பாடியங்களைப் பெரிதும் நம்பிய ஒருசார்புடை மேனாட்டறிஞர்கள் சிலர் சைவத்தைப் பண்பாடற்ற பழங்குடியினரின் வழிபாட்டு நெறி என்றும் ஆண்குறி வழிபாட்டு நெறி என்றும் காட்டத் தொடங்கினர். ஃபிரேசர் என்னும் அறிஞர் தம்முடைய ‘சமயங்கள் மற்றும் அறவியல் கலைக்களஞ்சிய’த்தில் தென்னாட்டில் சில புகழ்பெற்ற பழமையான சிவன்கோவில்களில் இரத்தப் பலியும் கட்குடிக்களியாட்டமும் ஆண்டுதோறும் அனுமதிக்கப் பெற்றன என்றும், அது பழங்குடியினரின் கோவில்களைப் பிராமணர்கள் பற்றிக் கொண்டபோது பிராமணருக்கும் பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி நிகழ்வது என்றும் பிராமணருக்கு உள்நாட்டுத் தலைவர்களின் பாதுகாப்பு இருந்தது என்றும், அதற்கு நன்றியாகப் பிராமணர்கள் அந்தத் தலைவர்களுக்குச் சத்திரியத் தகுதியும் போலிச்சத்திரிய வம்சாவளியும் அளித்தனர் என்றும் எழுதினார். ஃபிரேசர், மேலும் , பிராமணர் அல்லாதவர்களும் சாதியில் விலக்கப் பெற்றவர்களும் சிவனை வழிபட்டார்களென்றும் சிவனுக்கு நரபலியிட்டார்களென்றும் அத்தகைய வழிபாடு ஸ்ரீசைலத்தில் ( திருமுறைகளில் போற்றப்படும் திருப்பருப்பதம்) நடைபெற்றது என்றும் தெரிவிக்கின்றார். ஷ்ரீசைலம் காபாலிகசைவர்களின் தலைமையிடமாகக் கூறப்பட்டது.
புகழ்பெற்ற சிவபத்தர்களாகிய ஹரதத்தர், நீலகண்ட சிவாச்சாரியார், அப்பைய தீட்சிதர் முதலியோர் சமஸ்கிருத மூலங்களின் அடைப்படையில், குறிப்பாகப் பிரம்மசூத்திர விளக்கத்தின் வழி ஒருவகைச் சைவ சித்தாந்தத்தைப் படைத்தனர். இந்தச் சைவம் ஏகான்மவாதச் சாயை உடையதாகவே இருந்தது.
ஹரதத்தர் கி.பி. 879ல் வாழ்ந்தார். அவர் ஹரிஹரதாரதம்மியம், சதுர்வேத தாற்பர்ய சங்கிரகம் முதலிய நூல்களைச் சிவபரமாகச் செய்தார். இவை மாதவச் சிவஞான முனிவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுத் தம்முடைய சிவஞான மாபாடியத்தில் மேற்கோளாகவும் காட்டப்படுகின்றன.
ஷ்ரீகண்டர் எனப்படும் நீலகண்ட சிவாச்சாரியார் கி.பி. 11 ஆம் நூற்றண்டில் வாழ்ந்தவர். இவர் சிவபரமாக பிரம்ம சூத்திரத்திற்குப் பாடியம் வரைந்தார். அது நீலகண்டபாடியம் என வழங்கப்படுவதாயிற்று. சங்கரர் இராமானுஜர் நிம்பர்கர் முதலியோருடைய கொள்கைகளை நீலகண்டர் தம்முடைய பாடியத்தில் கடுமையாகக் கண்டிக்கின்றார். சங்கரருடைய ஏகான்மவாத மாயாவாதக் கொள்கைகளால் அறிவு மயங்கிய மக்களை உண்மைச் சிவபத்தியின் மூலம் அறிவு தெளிவிக்கச் சிவனே நீலகண்டரை மண்ணுலகுக்கு அனுப்பியதாகவும் இவருடைய பாடியமே சுருதிகளுக்கு உண்மையான வியாக்கியானம் அளிக்கின்றதென்றும் கூறப்பட்டது. சுருதிகளின் அடிப்படையில் இவருடைய சித்தாந்தம் அமைந்ததால் இது ஸ்ரெளத சைவ சித்தாந்தம் எனப்பட்டது. இதற்கு சிவாத்துவித சைவம் என்றும் ஒரு பெயர் உண்டு.
ஏனோ நீலகண்டபாடியம் ஏனைய பாடியங்களான சங்கரபாடியம், இராமானுஜ பாடியம், மத்துவ பாடியம் போலப் பிரபலமடையவில்லை. சிவஞானபோதத்துக்குத் தமிழில் மாபாடியம் இயற்றியருளிய மாதவச் சிவஞானமுனிவர் நீலகண்டபாடியத்தின் சிலகருத்துக்களைத் தழுவிக்கொள்ளுகின்றார்.
மெய்கண்டதேவநாயனார் நீலகண்டருக்குச் சற்றுப்பின் பிறந்தவர். இவர் திருக்கயிலாய பரம்பரை புறச்சந்தானத்தின் முதல் ஆசாரியர். இவர் தம்முடைய சிவஞானபோதத்தில் சைவசித்தாந்தத்தை நிறுவினார். மெய்கண்டார் தம்முடைய கொள்கைகளை நிறுவும்போதே வேதத்திற்குப் புறமான உலகாயதம், நால்வகைப் பவுத்தம், சமணம், சாங்கியம் நையாயிகம் மீமாம்சை முதலியனவற்றையும் வேதமதங்களான மாயாவாதம் , ஏகான்மவாதம், பாஞ்சராத்திரம் முதலியனவற்றையும் பிரம்மசூத்திர வியாக்கியானங்களால் விளைந்த தத்துவக் குழப்பங்களையும் களைந்தார். பாடியக்காரர்களின் பேத, அபேத, பேதாபேத கொள்கைகளுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தார். அத்துவிதம் என்பதற்கு உண்மையான பொருள் இன்னதென்று உறுதிப்பட நிறுவினார். இந்திய தத்துவஞானத்திற்கு மெய்கண்டார் செய்த பேருதவி இது என்று போற்றப்படுகின்றது.

சம்பிரதாயமாகச் சிவஞானபோதத்தை மெய்கண்டார் இரெளரவ ஆகமத்திலிருந்து மொழிபெயர்த்தார் என்று கூறப்பட்டாலும் உண்மை காணலுறுவாருக்கு அது மெய்கண்டாரின் மூலப்படைப்பே எனத் தெரியவரும். மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பட்டாலும், உயிர் உலகு இறை பற்றித் தமிழ் மக்களின் சிந்தனை முதிர்ச்சி, தமிழ்மொழி இலக்கண அமைப்பு, திருமுறைகள் முதலியன மூலங்களாக அமைந்தன. தமிழ் மூலங்களே சிவஞானபோதத்திற்கு அடைப்படையாக அமைந்ததால், இது நிறுவிய சைவசித்தாந்தம் , தென்னாட்டுச் சைவசித்தாந்தம் எனப்படுவதாயிற்று.
தென்னாட்டுச் சைவசித்தாந்தத்தின் மூலநூல்கள் தமிழிலேயே இருப்பதாலும் இந்நூல்கள் வடமொழியிலோ ஆங்கிலத்திலோ மொழிபெயர்க்கப்படாததாலும், இச்சைவசித்தாந்தம் தமிழகத்திற்கு வெளியே அதிகம் அறியப்படாததாக உள்ளது.
தமிழ்மொழி அறிந்த மேனாட்டறிஞர்கள் சிலர் தமிழ் மூலநூல்களின் வழியே இச்சித்தாந்தத்தை அறிந்து , சைவசித்தாந்தம் தமிழ்ச்சிந்தனையின் அற்புதமான படைப்பு என்றனர்.(Choisest product of Tamil intellect)
டாக்டர்.ஜி.யூ போப்பு, ஹொய்சிங்டன், ஸ்கோமெரஸ் , டாக்டர் கார்டன் மேத்யூஸ் போன்ற மேனாட்டு அறிஞர்களும் திரு ஜே.எம்.நல்லுசாமிபிள்ளை, டாக்டர் வி.ஏ.தேவசேனாபதி, டாக்டர் கே சிவராமன், திரு நல்.முருகேசமுதலியார் முதலிய சான்றோர்கள் மேனாட்டு அறிஞர்கள் மற்றும் இந்தியத் தத்துவ அறிஞர்களின் கவனத்தைத் தென்னாட்டுச் சைவசித்தாந்ததின் மீது ஈர்த்தனர்.
மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தை மேனாட்டிற்கும் ஆங்கிலம் கற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யும் பணியில் மேனாட்டு அறிஞர்களின் தொண்டு எத்துணைச் சிறப்புடையதாக இருந்தாலும், பல குறைகளையும் கொண்டிருந்தது. அவர்கள் ஐரோப்பியர்களாகவும் கிறித்துவர்களாகவும் இருந்தமையால் சைவசம்பிரதாயத்துக்குள் நுழைய இயலாதவர்களாகவும் அவற்றை அறியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் அவர்கள் எழுதிய நூல்களில் பிழைகளும் இருந்தன.
எடுத்துக்காட்டாக, ஜி.யூ.போப் தம்முடைய திருவாசக மொழிபெயர்ப்பு நூலின் முன்னுரையில், ‘சத்தி நிபாதம்’ என்பதை, ‘சத்தியின் நிறுத்தம்’(cessation of energy) என மொழிபெயர்த்தார். இது எத்தகைய பிழை என சித்தாந்தம் அறிந்தோர் அறிவர்.
இந்திய தத்துவ அறிஞர்களும் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்தை அறிவதற்குப் போதுமான கவனம் செலுத்தவில்லை.
டாக்டர் சுரேந்திரநாத் தாஸ்குப்தா அவர்கள் இந்தியத் தத்துவ வரலாறு பற்றி ஐந்து தொகுதிகள், ஆயிரக்கணக்கான பக்கங்களில் வெளியிட்டுள்ளார். அதில், மெய்கண்டாரைப் பற்றியும் உமாபதிசிவத்தைக் குறித்தும் ஈரொரு பக்கங்களே காணப்படுகின்றன. உமாபதிசிவத்தின் பவுஷ்கராகம பாடியத்தைப் பற்றிய குறிப்பே இல்லை. வடமொழிப் பவுஷ்கர ஆகமத்தைப் பற்றிக் கூறும் இடத்தில் கூட உமாபதிசிவத்தைக் குறிப்பிட்டவில்லை. மாதவச் சிவஞானசுவாமிகளைப் பற்றியோ, சிவஞான மாபாடியத்தைப் பற்றியோ ஒரு குறிப்பும் கூட இல்லை. சிவஞான மாபாடியத்தைப் படிக்காமல் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தந்தைப் பற்றி ஒருவர் எப்படிப் பேச முடியும்?
தாஸ்குப்தாவின் புத்தகம் உலகம் முழுவதும் இந்தியத் தத்துவஞான வரலாற்றுக்குரிய பாடப் புத்தகமாகப் படிக்கப்படுகிறது. அவர் போப், ஸ்கொமெரஸ் ஆகியோரின் மொழிபெயர்ப்புகளிலிருந்து சைவத்தைக் குறித்துத் தம் கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளார். தாஸ்குப்தாவின் இந்த நூல் தென்னகசைவத்தைப் பொறுத்த அளவில் பல குறைகளை உடையதாக எனக்குத் தெரிகின்றது. இவர், போப் தம் மனம்போன போக்கில் பெரிதும் மிகைப்படுத்திச் சைவத்தைப் புகழ்ந்து விட்டார் என்றும் சைவம் ஏகான்மவாதம் சாங்கியம் நியாயம் ஆகியவற்றின் கலப்பு என்றும் போப் சைவத்தைப் பற்றிக் கூறிய மதிப்பீடுகள் மறுத்தற்குரியன என்றும் திருவாசகம் முதலியன வெறும் போற்றிப் பாடல்களே என்றும் மெய்ப்பொருட்குரிய கருத்துக்கள் புதியனவாக இந்தப் பத்தி நூல்களில் இல்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார். இவருடைய கருத்துப்படி, சைவசமய ஆசாரியர்கள், சந்தான ஆசாரியர்கள், தமிழிலுள்ள அவர்களுடைய நூல்கள் அனைத்தும் பொருட்படுத்தத் தக்கன அல்ல. அதற்கு இவர் கூறும் காரணம் விந்தையானது. 14ஆம் நூற்றாண்டில் உமாபதிசிவத்திற்குச் சம காலத்தவரான, மாதவரின் ‘சர்வ தரிசன சங்கிரகம்’ போஜ அரசனின் ‘தத்துவப் பிரகாசம்’ எனும் நூல்களில் தமிழ்ச் சைவ மெய்கண்ட நூல்கள் கூறப்படவில்லையாம்.
12ஆம் நூற்றாண்டில் மெய்கண்டதேவரின் திருவவதாரம் இந்திய தத்துவ ஞான வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால், அதனைத் தத்துவ வரலாற்றாசிரியர்கள் கண்டு அதற்குரிய இடத்தை அளிக்கத் தவறினர்.
சங்கரர், இராமானுஜர், மத்துவர், நீலகண்டர் முதலியோர் ‘பிரஸ்தானத் திரயம்’ எனப்படும் பிரமசூத்திரம், உபநிடதம், பகவத்கீதை ஆகிய மூன்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் கொள்கையை நிறுவினர். அவர்களைப் போல அல்லாமல், மெய்கண்டார், சம்பிரயமாக சைவசித்தாந்ததிற்கு வேதாகமங்கள் பிரமாணம் எனக் கூறப்பெற்றாலும், திருமுறைகள், தமிழிலக்கணம், பாரம்பரியத் தமிழ்ச்சிந்தனை ஆகியவற்றைப் பிரமாணமாகக் கொண்டு முதல் நூலாகச் சிவஞானபோதத்தை அருளிச் செய்தார். இந்நூல் மெய்கண்டாரின் சொந்தப் படைப்பே அன்றி மொழிபெயர்ப்பு அன்று.
பிரஸ்தானத் திரயத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட அத்துவிதம், துவிதம், விசிட்டாத்துவிதம் என்பன ஏற்கெனவே வழக்கில் உள்ளமையால் வேதோபநிடதங்களிலும் பிற பாடியங்களிலும் உள்ள கலைச்சொற்களைத் தம்முடைய நூலில் ஆண்டு, தம்முடைய கோட்பாட்டினை இந்தியத் தத்துவ உலகில் விவாதிக்கத் தக்க களத்தை உருவாக்கினார். 1.திதி. 2.அந்தம். 3.ஆதி. 4.மாயா. 5.இயந்திரம். 6.தநு. 7.ஆன்மா. 8.அந்தக்கரணம்.9.சகசம். 10.அவத்தை. 11.காந்தம். 12.பசாசம் 13.சிவசத்து.14. சூனியம். 15. சத்து. 16.அசத்து. 17. குரு. 18. அரன். 19.பாசம் 20.பதி. 21.ஞானம். 22. ஏகன் முதலியன அத்தகைய சொற்கள்.
பிற அத்துவிதங்களினின்றும் வேறுபடுத்திக் காட்டும்வகையில் மெய்கண்டாரின் கோட்பாடு ‘ சுத்தாத்துவித வைதிக சைவசித்தாந்தம்’ என அழைக்கப்படலாயிற்று. வேதத்தில் முதல்வனுக்கும் உயிருக்கும் உள்ள உறவினை விளக்கும் ‘அத்துவிதம்’ என்னும் பதத்திற்கு மெய்கண்டாரே உண்மையான பொருளை விளக்கியருளினார்.
தாயுமானவ சுவாமிகள், மெய்கண்டாரே சுத்தமான அத்துவிதத்தைக் கண்டு கூறினார், பிறரெல்லாம் கூறிய அத்துவிதம் மலசம்பந்தமான அத்துவிதம் என்னும் பொருளில்.
“பொய்கண்டார் காணாப் புனிதமாம் அத்துவிதம்
மெய்கண்ட நாதனடி மேவுநா ளெந்நாளோ”
எனப் போற்றினார்.
‘அத்துவிதம்’ என்னும் வடசொல்லுக்கு நிகராகத் திருமுறைகள் ‘உடனாதல்’ என்னும் பதத்தைப் பயன்படுத்தின. மலத்தால் கட்டுண்ட ‘பெத்தநிலை’யாயினும், மலத்தினின்றும் விடுபட்ட ‘முத்திநிலை’யாயினும் எந்த நிலையிலும் ஆன்மா முதல்வனை விட்டு நீங்குவதில்ல. முதல்வன் எந்நிலையிலும் ஆன்மாவின் ’உடனாகவே’ இருக்கிறான். பெத்தநிலயில் உடனாதலைப் ‘பெத்தாத்துவிதம்’ என்றும் , முத்திநிலையில் உடனாதலைச் ‘சுத்தாத்துவிதம்’ என்றும் சைவசித்தாந்த நூல்கள் கூறும்.
உயிரின் இயல்பினை மணிவாசகர் ‘இரண்டுமிலித் தனியன்’ என்று கூறுவார். “இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா” என்னும், சிவஞானபோதம். ஆன்மாவின் இவ்வியல்பினைச் ‘சார்ந்ததன் வண்ணமாதல்’ என்றும் கூறுவர். கேவலநிலையில் மலத்தைச் சார்ந்து மலத்தின் வண்ணமாக ஆன்மா இருக்கும். சகலநிலையில் ஆன்மா கருவிகளோடு சார்ந்து கருவிகள் வண்ணமாக இருக்கும். சுத்தநிலையில் சிவத்தைச் சார்ந்து சிவத்தின் வண்ணமாக இருக்கும்.
கேவலம் சகலம் ஆகிய பெத்த நிலைகளில் சிவம் உயிருடன் கூடி நின்றே அவற்றை உய்விக்கின்றது. “உய்யவென் னுள்ளத்தில் ஓங்காரமாய் நின்ற மெய்யா”, ‘மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க’’ ‘யானேதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டா நின்றாய்’ முதலிய திருமுறைத் தொடர்கள் மெய்கண்டார் குறிக்கும் முதல்வனின் காணும் உபகாரம் காட்டும் உபகாரம் ஆகியவற்றிற்குப் பிரமாணம் ஆகின்றன. இத்தகைய திருமுறைத் தொடர்கள் மெய்கண்டாரின் சைவ சித்தாந்தத்திற்கும் திருமுறைகளுக்கும் உள்ள அழுத்தமான உறவுகளைக் காட்டுவன.
திருஞானசம்பந்தர் காலத்தில் வேதநெறி , இந்திய வழிபாட்டு நெறிகளுக்கிடையே (Cults) வேற்றுமையில் ஒற்றுமை கண்டது. இது பத்திநெறியின் பயன்பாடு. மெய்கண்டார் தத்துவத்துறையில் எல்லா நெறிகளும் குழம்பிய நிலையில் உண்மையான வைதிக சைவநெறி இன்னதெனத் தெளிவு காண ஒற்றுமையில் நுண்ணிய வேற்றுமைகளைக் கண்டார். இது அறிவு நூலின் பயன்பாடு.