இந்தியாவில் மிஷநரிகள் குறித்து அருண் ஷோரியின் ஆய்வுகள்

arun_shourie_missionaries_bookகாலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் அரசு நிர்வாகம், கிறிஸ்தவ மிஷநரிகள் மற்றும் இந்தியவியலாளர்கள் (indologists) எனப்பட்ட வரலாற்றாசிரியர்கள் இவர்கள் மூவரும் எப்படி தங்களுக்குள் வேலைப் பங்கீடு செய்து கொண்டனர் என்பதை Missionaries நூலின் இரண்டாம் பாகம் விரிவாகவே பேசுகிறது. இந்த மூன்று குழுக்களுக்கும் இடையில் நிறைய கருத்து வேற்றுமைகள் இருந்தன. ஆனால் அவையெல்லாம் வழிமுறைகள், செயல்பாடுகளைப் பற்றித் தான். தங்களது இறுதி இலக்கு என்ன என்பது பற்றி அவர்களிடையே எந்தக் குழப்பமும் ஐயமும் இல்லை – இந்தியாவின் பாவிகள் அனைவரையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவது, பிரிட்டிஷ் ஆட்சியை இந்தியாவில் நீடித்து நிலைபெறச் செய்வது, இவை இரண்டுமே இந்த இலக்குகள்.
கீழ்க்கண்ட விஷயங்களில் மூன்று தரப்பினருமே முழுமையாக உடன்பட்டனர்:
1. இந்தியா அறியாமை, பாகுபாடுகள் மற்றும் பொய்மையின் கூடாரம்.
2. இந்த நிலைக்குக் காரணம் இந்துமதம்.
3. இந்துமதத்தை நடத்திச் செல்வதில் பிராமணர்களுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. அதனால் இந்துமதத்தை வலுவிழக்கச் செய்ய, பிராமணர்களைக் குறிவைத்து வெறுப்புப் பிரசாரங்கள் முடுக்கப் படவேண்டும்.
4. இந்த இந்திய மக்கள் இப்பேர்ப்பட்ட துயரத்தில் இருப்பதாலும், ஏசு ஊழியம் செய்ய நம்மை அறைகூவியிருப்பதாலும், இவர்கள் அனைவரையும் கிறிஸ்தவத்திற்கு இட்டுச் செல்வது நமது புனிதக் கடமையாகிறது.
5. புனித சிலுவை வீரர்கள் இந்துமதம் என்ற இந்தக் கோட்டையின் உறுதியான சுவர்களை சுற்றிவளைத்து, பலமிழக்கச் செய்து, தகர்க்க வேண்டும் (பிரிட்டிஷ் அதிகாரியின் சொற்களில் - “The walls of the mighty fortress ..” are to be “encircled, undermined and finally stormed by the soldiers of the cross”).
6. புனிதக் கடமையை நிறைவேற்ற சிறந்த வழி பிரிட்டிஷ் அரசு அதிகாரத்தை விரிவாக்குவதும், உறுதிப் படுத்துவதும், நீடிக்கச் செய்வதுமே ஆகும்,
7. அரசே கிறிஸ்தவ மதத்தை அதிகாரபூர்வமாகப் பரப்புமானால், அது குடிமக்களிடத்தில் கோபத்தையும், கொந்தளிப்பையும் உண்டாக்கும், அதனால், அரசு நடுநிலையைக் கடைப்பிடிப்பதாகவே தன்னைக் காட்டிக் கொள்ள வேண்டும்.
8. ஆனால், அரசின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும். அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வி அளிப்பது என்ற விஷயமே ஏராளமானவர்களைக் கிறிஸ்தவம் நோக்கி வரச் செய்யும். மேற்கத்திய கலாசாரத்தையும், ஐரோப்பா அடைந்து வரும் நவீன முன்னேற்றங்களையும் பற்றி கல்வி கற்கும் இந்தியர்கள் அறிய வருவதே போதும், இந்து மதத்தை அது தீர்த்துக் கட்டிவிடும், ஏனென்றால் ”அந்த மதத்தால் அறிவுபூர்வமான பரிசோதனையை ஒரு கணநேரம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது”! (Its not a religion that can stand a “moment’s scrutiny”)
9. அதே போன்று, மிஷநரிகளின் பங்களிப்பும் பிரிட்டிஷ் அரசுக்கு முக்கியமானதாக இருக்கும். மதம் மாறியவர்கள் மட்டுமல்ல, தொடர்ந்த கிறிஸ்தவ மதப் பிரசாரத்தின் தாக்கத்திற்கு உள்ளாகும் அனைவரும் பிரிட்டிஷ் அரசின் ஆதரவாளர்களாகவும், அந்த அரசை நீடிக்க வைப்பவர்களாகவும் விளங்குவார்கள்.
10. அறிஞர்களின் பணியும் இதே அளவுக்கு முக்கியமானதாக இருக்கும். மிஷநரி அறிஞர்கள், அறிஞர்கள் என்ற போர்வையில் இருக்கும் மிஷநரிகள் – இந்த இரண்டு தரப்பினரும் இணைந்து இந்து மதத்தின் தீமைகள் அனைத்தையும் அம்பலப் படுத்தி, அதனை வேரறுப்பதில் உதவுவார்கள்.
11. இயல்பாகவே, மிஷநரிகள் கீழ்சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீது அதிகக் கவனம் செலுத்துவார்கள். இந்து சமூகத்தை இது பல கூறுகளாக்கும்.
12. அறிஞர்களின் ஆய்வுகள் இதே பணியை வேறு தளத்தில் செய்யும். இந்துமதத்தில் நடைமுறையில் இருக்கும் சிறு தவறுகளைக் கூட அவை பூதாகாரமாக்கும். மக்களிடத்தில் இருக்கும் சிறு பிணக்குகளில் இருந்து பெரிய சமூக மோதல்களுக்கான நியாயங்களை அவை உற்பத்தி செய்யும். இவ்வகையில் பிரிட்டிஷ் ஆட்சியின் உறுதித் தன்மைக்கு அவை வலு சேர்க்கும்.
Missionaries நூல் (பக்கங்கள் 58-62) ஒரு விரிவான பட்டியலாக இந்த விஷயங்களைக் கூறுகிறது. அதன் சுருக்கமான வடிவத்தையே மேலே அளித்துள்ளேன். இந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் ஆதாரபூர்வமாக நூலில் ஷோரி விளக்கிச் செல்கிறார். இறுதியில் இப்படிக் கூறுகிறார் -
“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பரவியது ஒருவகையிலான விபத்து; பிரிட்டிஷார்களே தயங்கினாலும் அப்போது இந்தியா இருந்த நிலையில் அவர்களை இழுத்துப் பிடித்து இந்தியர்களே ஆட்சி பீடத்தில் உட்கார வைத்திருப்பார்கள்” என்ற அளவில் தான் நான் பள்ளிப் பருவம் முதல் படித்துவரும் எல்லா வரலாறுகளும் கூறி வந்தன. எனவே, இப்படி ஒரு பட்டியலை யாராவது அளித்தால், இது பின் நிகழ்வுகளை வைத்து முன் தீர்மான்ங்களை வேண்டுமென்றே கட்டமைக்கும் விதமாக இருக்கிறது என்று தான் நானே கருதியிருப்பேன். ஆனால் அந்தக் கருத்து தவறு என்பதை நான் இந்த ஆய்வுகளில் மிக விரைவாகவே உணர்ந்து கொண்டேன்.. பிரிட்டிஷ் காலத்திய பிரதான அதிகாரிகள் மற்றும் முக்கிய அறிஞர்களின் எழுத்துக்களை ஒருமுறை படித்துச் செல்பவருக்கே எப்பேர்ப்பட்ட கச்சிதமான திட்டமிடுதல் இதில் இருந்தது என்று விளங்கும். அதோடு, அக்காலத்திய மிஷநரிகளின் சுற்றறிக்கைகள், மிஷநரி சொஸைட்டிகளின் ஆவணங்கள் இவற்றைப் படித்தால், இது தொடர்பான கொஞ்சநஞ்ச சந்தேகங்களும் தீர்ந்து விடும்”
சில முக்கிய ஆதாரங்கள் அவற்றின் மூல வடிவில் முழுமையாக இந்த நூலிலேயே தரப்பட்டிருக்கின்றன. பால்மெர்ட்ஸன் பிரபு, ஹாலிஃபாக்ஸ் பிரபு, சர் மேக்வர்த் யங் ஆகிய அதிகாரிகளின் விரிவான மேற்கோள்களும் இவற்றில் அடக்கம்.
christmas_in_india_during_british_rajநூலின் அடுத்த பகுதியின் பெயர் “வெற்றிடங்களை உருவாக்குதல், பின்னர் நிரப்புதல்” (Creating vacuums, filling them). பிரிட்டிஷ் காலனியர்களின் நோக்கங்களும், திட்டங்களும் இவ்வளவு தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் இருக்கின்றன. அக்காலத்திய உரைகளையும், சான்றுகளையும் பார்த்தால் இவற்றில் மறைமுக எண்ணம் கூட இல்லை என்று தோன்றுகிறது. ஆயினும், இதைப் பற்றி இன்றைய இந்தியர்களின் கூட்டுப் பிரக்ஞையில் (collective consciousness) ஏன் எந்த உணர்வுமே இல்லை? என்று ஷோரி ஓரிடத்தில் கேட்கிறார். இதைப் படிக்கையில், ஹம்பியின் இடிபாடுகளை முன்வைத்து, இஸ்லாமிய ஆக்கிரமிப்பு அரசாட்சி இந்தியாவின் நாகரீகத்தை முற்றாக சீரழித்ததைப் பற்றிய வரலாற்றுப் பிரக்ஞை ஏன் இந்தியர்களிடம் இல்லவே இல்லை என்று இதே போன்றதொரு கேள்வியை வி.எஸ். நய்பால் தனது புகழ்பெற்ற கட்டுரை ஒன்றில் அலசுவது நினைவுக்கு வருகிறது.
இதற்குக் காரணம் என்ன? அந்த காலனிய திட்டங்கள், குறிப்பாக கல்வி தொடர்பானவை பெருமளவில் வெற்றியடைந்து விட்டன என்பதே. “ரத்தத்திலும் நிறத்திலும் மட்டுமே இந்தியர்களாகவும், ரசனைகளிலும் கருத்துக்களிலும் நெறிகளிலும் அறிவுத்தளத்திலும் முழுக்க ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஒரு வர்க்கத்தினரை உருவாக்க வேண்டும்” என்ற மெக்காலேயின் திட்டம் தன் இலக்கில் தவறவில்லை. ”ஆனால், சுதந்திர இந்தியாவிலும் இத்தகைய நிலைமை தொடர்வதற்குக் காரணம் 40 வருடங்களுக்கும் மேலாக நாம் கடைப் பிடித்து வந்த வக்கிரமான மதச்சார்பின்மை கோட்பாடு. நமது தேசிய அடையாளத்தைப் பீடித்திருக்கும் மாசுகளை அகற்றும் வல்லமை வாய்ந்த ஒவ்வொரு கலாசார அம்சமும், இந்த வக்கிரத் தனம் உருவாக்கிய இரட்டைவேட அளவுகோலில் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உரியதாகவே சித்தரிக்கப் பட்டது” என்கிறார் ஷோரி. (Missionaries, பக்கம் x-xi)
சுதந்திர இந்தியாவில், கிறிஸ்தவ மிஷநரிகளின் மொழியிலும், வழிமுறைகளிலும் மட்டும் தான் மாற்றம் ஏற்பட்டதே தவிர. அவர்களது கொள்கைகளும், இலக்குகளும் காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்தது போன்று அப்படியே தான் உள்ளன. இக்கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட இரு கிறிஸ்தவ ஆவணங்களை அலசுவதன் மூலம் ஷோரி இந்தக் கூற்றை முழுமையாக, ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறார்.
1994 ஜனவரியில் புணேயில் ஷோரி ஆற்றிய உரைக்குப் பின் அங்கு வந்திருந்த மிஷநரிகள் அவரிடம் கேட்ட கேள்விகள், கட்டுரை ஆரம்பத்தில் நாம் பார்த்த மகாத்மா காந்தி உரையாடலில் அந்தப் போலந்து நாட்டு மிஷநரி கொண்டிருந்த அதே நிலைப்பாடுகளை அப்படியே கொண்டிருந்தன. இந்தக் கேள்வி பதில்களின் தொகுப்பே நூலின் கடைசி அத்தியாயம்.  ”நீங்கள் கான்வெண்டில் தானே படித்தீர்கள்? ஏசுவைப் பற்றிய எந்த அம்சம் உங்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது” என்று ஒரு பாதிரி கேட்கிறார். ”அவரது தியாகம், எதிராளிகளை மன்னிக்கும் தன்மை” இப்படி ஷோரி பொதுவாக பதில் சொல்கிறார். பாதிரி விடுவதில்லை, “அதுவல்ல நான் கேட்க வந்த்து, ஏசு ஒருவரே சத்தியமான ஜீவனுள்ள கடவுளின் குமாரன் என்று நீங்கள் உணர்ந்தீர்கள் தானே?” என்று மடக்குகிறார். ஷோரி கடவுள் என்ற விஷயத்தைப் பற்றி இப்படி தடாலடி முடிவுகளைத் தன்னால் எடுக்க முடியாது என்று அறிவியல் பூர்வமாக சிரமப் பட்டு விளக்க வேண்டியதாகிறது.
கேள்விகள் ஏன் அப்படியே இருந்தன? ஏனென்றால் அவற்றை உருவாக்கிய அந்தக் காலனிய கிறிஸ்தவ மனம் மாறவேயில்லை, அப்படியே தான் இருக்கிறது. அங்கு வந்திருக்கும் கிறிஸ்தவத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள் ஒவ்வொருவரும் சர்ச்சும், மிஷநரிகளும் மாறிவிட்டனர் என்று உறுதியளிக்க முயன்றனர். “எனவே, பழைய சரித்திரத்தை வைத்து மிஷநரிகளுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பது சரியானதல்ல” என்று ஷோரியிடம் வாதாடினர்.
ஆனால், ஷோரி தான் இதனை நம்பவில்லை என்று இந்த நூலில் பதிவு செய்கிறார். உண்மையிலேயே மிஷநரிகள் மாறிவிட்டார்களா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு ஐந்து சோதனைகளை அவர் பட்டியலிடுகிறார்.
முதலாவதாக, இந்தியாவைப் பற்றியும், இந்துமதம் பற்றியும் படு மோசமான, கீழ்த்தரமான அவதூறுகளை சர்ச் திட்டமிட்டுப் பரப்பியது என்பதை அது நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவேண்டும்.
இரண்டாவதாக, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களையும், தான் மதம் மாற்ற விரும்புபவர்களையும், தனது இரண்டு மையமான கோட்பாடுகளைப் பற்றிய அறிவுபூர்வமான ஆராய்ச்சிகள் குறித்து சர்ச் எந்த அளவு பரிச்சயப் படுத்துகிறது என்பது தெரியவேண்டும். “பைபிள் கடவுளின் வசனம், அதில் எந்தத் தவறும் இல்லை” என்பதும் ”போப் எந்தத் தவறும் இல்லாதவர், அவற்றுக்கு அப்பாற்பட்டவர்” என்பதுமான அந்த இரண்டு மையமான கோட்பாடுகள்.
இன்றைக்கு அறிவியல் சிருஷ்டி, பரிணாமக் கோட்பாடு, மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் உள்ள தொடர்பு, உடல்-மனம் ஆகிய விஷயங்களைப் பற்றிய மிக ஆழமான, விரிவான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டு விட்டது என்ற விஷயத்தை மேற்கத்திய நாடுகள் அனைத்திலும் வெளிப்படையாகவே சர்ச் பேசுகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள தனது விசுவாசிகளிடமும், மேய்ச்சல் ஆடுகளிடமும் இது பற்றி சர்ச் பேசுகிறதா என்பது மூன்றாவது பரிசோதனையாக இருக்கும்.
நான்காவது பரிசோதனை ”பிறமதங்களுடன் திறந்த மனதுடன் உரையாடுவது” பற்றிய தனது கொந்தளிக்கும் தவிப்புகளை எந்த அளவுக்கு சர்ச் தாண்டிச் செல்கிறது என்பதைப் பொறுத்து இருக்கும். “பிற மதங்கள் முழுதாகப் பொய்யானவை அல்ல; அவற்றின் மூலமும் மோட்சம் அடைவது சாத்தியம்” என்று கடுப்புடனும், வெறுப்புடனும் வேறு வழியில்லாமலும் சம்பிரதாயத்திற்காக சர்ச் அறிக்கைகள் விடுகிறது. இந்த நிலை மாறி, சர்ச் உண்மையிலேயே பிற மதங்களை மதிக்கவும், ”சத்தியம் என்பது எந்தக் குழுவின் தனிச் சொத்தும் அல்ல, அது பல தளங்கள் கொண்டது, பல வழிகளில் அதனை அடையலாம்” என்ற இந்திய தத்துவத்தை ஏற்றுக் கொள்ளவும் செய்யுமா என்பதைப் பொறுத்து இந்த சோதனை அமையும்.
arun_shourie_20090826ஐந்தாவதாக, முள்ளாகக் குத்தி உறுத்திக் கொண்டிருக்கும் மதமாற்றங்கள். ”பிற மதங்கள் மூலமும் இறைநிலை அடைவது சாத்தியம்” என்று சர்ச்சே அறிக்கை விடுகையில், மக்களை மந்தை மந்தையாக மதம் மாற்றுவதற்கு என்ன முகாந்திரம், அவசியம் இருக்கிறது? குறிப்பாக, வடகிழக்கு இந்தியாவிலும், மற்ற பகுதிகளிலும் சர்ச் செயல்படுத்தும் கீழ்த்தரமான மோசடிகள் மூலம் மதம் மாற்றுவதற்கு என்ன தேவை உள்ளது? இந்தப் புரிதலை ஏற்றுக் கொண்டு தனது சம்பிரதாயமான மதமாற்ற வெறியை சர்ச் முழுமையாக மட்டுப் படுத்துமா இல்லையா என்பதைப் பொறுத்து இந்த சோதனை அமையும்.
நூலின் இறுதியில், புணே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதிரியார்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் அவர்களுக்குக் கசப்பான விஷயங்களையும் மிகவும் கண்ணியமாகவும், அமைதியான முறையிலும், பொறுமையுடனும் கேட்டுக் கொண்டிருந்த்தையும், பின்னர் அதே நிதானத்துடன் உரையாடியதையும் மறக்காமல் ஷோரி பதிவு செய்கிறார். ”அந்த நிகழ்ச்சி முழுவதும், என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போலவே நான் உணர்ந்தேன். மாறுபட்ட கருத்துக்களை நேர்கொள்வது எப்படி என்று அவர்களிடம் நாம் கற்றுக் கொள்ளவேண்டும்” என்று முடிக்கிறார்.
பிற்சேர்க்கையாக, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டு கிறிஸ்தவ ஆவணங்களும் அவற்றின் முழு வடிவிலும் தரப்பட்டுள்ளன.
Missionaries in India
By Arun Shourie
Paperback
List Price: Rs. 295
Publisher: South Asia Books ( 1998 Edition)
ISBN-10: 8172232705
ISBN-13: 978-8172232702
இப்புத்தகத்தை அமேசான்.காம் தளம் மூலமும் (வெளிநாடுகளில்), ஃப்ளிப்கார்ட்.காம் தளம் மூலமும் (இந்தியாவில்) வாங்கலாம். புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்.
ஷோரி விதந்தோதிய கண்ணியம், மிஷநரி பெருந்தன்மை எல்லாம் கூட அந்த அரங்கில், அந்தத் தருணத்திற்கு மட்டும் தான் என்பதை பின்வந்த நிகழ்ச்சிகள் தெளிவாக எடுத்துக் காட்டின. ஷோரி தன் கருத்துக்களை வெளியிலகிற்கு அறிவிக்கும் வகையில் புத்தகமாகவும் எழுதி அது வெளிவந்தவுடன், அவரை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்த கண்ணியமிக்க கனவான் ஃபாதர் அகஸ்டின் கஞ்சமலா தன் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்தார். எல்லாப் பத்திரிகைகளிலும் உள்ள கிறிஸ்தவ நிருபர்கள், செய்தியாளர்கள் மூலமாக அருண் ஷோரிக்கும், இந்தப் புத்தகத்திற்கும் எதிரான கடும் பிரசாரத்தை அவர் முடுக்கி விட்டார். ஷோரியைப் பற்றிய தனிப்பட்ட தாக்குதல்களும், இந்த நூலைப் பற்றிய தவறான, திரிக்கப் பட்ட தகவல்களும் எல்லா முக்கிய ஊடகங்களிலும் மீண்டும் மீண்டும் பளிச்சிட வைக்கப் பட்டன.
ஹைதராபாத்தில் உள்ள பிரக்ஞா பாரதி என்ற சிந்தனையாளர்கள் அமைப்பு, Missionaries in India நூலைப் பற்றி வெளிப்படையாக பொதுத் தளத்தில் அருண் ஷோரியுடன் விவாதம் செய்யத் தயாரா என்று கேட்டு இந்தியாவின் பல திருச்சபைகளிலும் உள்ள தலைமைப் பாதிரியார்களுக்கும், ஆர்ச்பிஷப்புகளுக்கும் அழைப்பு விடுத்தது. அவர்களில் ஒருவர் கூட இந்த சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லித் தட்டிக் கழித்து விட்டனர். ஃபாதர் அகஸ்டின் கஞ்சமலா ஒருவர் மட்டும் தான் முன்வந்தார். முதலில் ஷோரியின் நூலை மறுத்துத் தான் பேச வாய்ப்பளிக்க வேண்டும், அதன் பிறகே ஷோரி தன் விளக்கங்களை அளிக்கவேண்டும் என்ற அவரது நிபந்தனையும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
1994, செப்டம்பர் 4 அன்று இந்தப் பொது விவாதம் மக்கள் அரங்கில் நிகழ்ந்தது. ஃபாதர் கஞ்சமலா எழுப்பிய ஒவ்வொரு மறுப்புக்கும் விரிவான, ஆதாரபூர்வமான விளக்கங்களை ஷோரி அளித்தார். அருண் ஷோரியின் நூல் பற்றி மிஷநரிகளின் எதிர்வினைகளும், இந்த விவாதமும் எல்லாம் சேர்த்து முழுமையாக ஒரு புத்தகமாகப் பதிப்பிக்கப் பட்டிருக்கிறது - “Arun Shourie and his Christian critic”, Voice of India, New Delhi, 1995. பின்னர் Voice of India வெளியிட்ட History of Hindu-Christian encounters (AD 304 to 1996) என்ற நூலிலும் இது ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.
கிறிஸ்தவ மதமாற்றிகளுடனான அருண் ஷோரியின் உரசல்கள் இத்துடன் நிற்கவில்லை. ஆறு வருடங்கள் கழித்து, 2000ஆம் ஆண்டு, அவர் இதே விஷயத்தைப் பற்றி இன்னொரு புத்தகமும் எழுத நேர்ந்தது.