பாகிஸ்தான்-சீனா இடையே ரயில்பாதை அமைக்க திட்டம்: இந்தியா கவலை


பாகிஸ்தான்-சீனா இடையே ரயில்பாதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக வந்த தகவல் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.ஏற்கெனவே சீனாவின் பல்வேறு நகரங்களிலிருந்து திபெத் பீடபூமி வழியாக இந்திய எல்லை வரை ரயில்பாதைகள் உள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான்-சீனா இடையே ரயில்பாதை அமைப்பது தொடர்பாக விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.இதுகுறித்து தில்லியில் மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் எம்.எம். பல்லம் ராஜு புதன்கிழமை கூறியதாவது:இது நிச்சயம் இந்தியாவுக்கு கவலை அளிக்கக் கூடிய செய்திதான். இதுதொடர்பாக இந்தியாவின் எதிர்ப்பை சீனா, பாகிஸ்தானுக்குத் தெரிவிப்போம்.இந்தத் திட்டம் குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் சீனாவும், பாகிஸ்தானும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்புத்துறை விஷயங்களில் நெருக்கமான உறவு இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரியவந்துள்ளது என்றார் அவர்.சீனாவிலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து கில்கித்-பல்டிஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்குள் வந்து அரபிக் கடல் வரை ரயில்பாதைகளை அமைக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன. இந்த ரயில்பாதை காரகோரம் மலைப்பகுதியாக வழியாகவும் செல்லும் என்றும் தெரியவந்துள்ளது.