காளிப் பாட்டு



யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;
பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;
போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய்
இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்
பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?
அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;
துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய்