
போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்தீமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.
அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.
கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.
