ராகம் -
பியாக் தாளம் - திஸ்ர ஏகதாளம்
பல்லவி
- பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
- பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய (பாரத)
- முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
- முழுமைக்கும் பொது உடைமை
- ஒப்பிலாத சமுதாயம்
- உலகத் துக்கொரு புதுமை - வாழ்க! (பாரத)
- மனித ருணவை மனிதர் பறிக்கும்
- வழக்கம் இனியுண்டோ ?
- மனிதர் நோக மனிதர் பார்க்கும்
- வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
- வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
- வாழ்க்கை இனியுண்டோ ?
- இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
- எண்ணரும் பெருநாடு,
- கனியும் கிழங்கும் தானி யங்களும்
- கணக்கின்றித் தரு நாடு - இது
- கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
- கணக்கின்றித் தரு நாடு - வாழ்க! (பாரத)
- இனியொரு விதிசெய் வோம் - அதை
- எந்த நாளும் காப்போம்,
- தனியொரு வனுக் குணவிலை யெனில்
- ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க! (பாரத)
- எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
- என்றுரைத்தான் கண்ண பெருமான்,
- எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
- இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
- இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
- இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க! (பாரத)
- எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
- எல்லாரும் இந்திய மக்கள்,
- எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
- எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க! (பாரத)