விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தமிழர்களின் நாகரீகம்!

          விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தமிழர்களின் நாகரீகம்!


      நாகப்பட்டினத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துருவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை ஒத்திருப்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் செம்பியன்கண்டியூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிந்து சமவெளிநாகரீகத்தின் எழுத்துவடிவங்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார். இவை இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்குமுன் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் ஒரு கற்கால கோடாரியைக் கண்டெடுத்தார். அந்தக் கோடாரியில் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்திருக்கும் எழுத்துவடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சிந்து சமவெளி நாகரீகத்தைத் தொடர்ந்து வந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் கோவையிலுள்ள சூலூரில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் கற்கால அச்சுவட்டுக்கள் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா நாகரீகத்தைச் சார்ந்ததாக உறுதிசெய்யப்பட்டது. தற்போது அது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சியிலுள்ளது. இதன்மூலம் தமிழ் மொழியின் வரலாற்றுச்சிறப்பு சாட்சிகளுடன் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அப்பொழுதே கடல்கடந்தும், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்தும் தங்கள் பரிமாற்றங்களை வைத்துள்ளது உறுதிசெய்யப்படுகிறது.