230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு


சுவீடனைச் சேர்ந்த சுழியோடிகள் சிலரினால் வட இங்கிலாந்தின் \'பல்டிக்\' கடலில் 230 வருடங்களுக்கு முற்பட்ட வைன் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 55 மீற்றர் ஆழத்திலேயே இந்த வெய்வு க்ளிக்வெட் (Veuve Clicquot) ரக வைன் போத்தல்கள் 30 இற்கும் மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1780களில் கடலில் மூழ்கிய மரக்கப்பல் ஒன்றினுள்ளிருந்தே இந்த வைன் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைன் வகைகளில் இதுவே பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸின் 16ஆவது லூயிஸ் மன்னனினால் ரஷ்ய அரண்மனைக்கு இந்த வைன் போத்தல்கள் பரிசாக அனுப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

16ஆம் லூயிஸ் மன்னனினால் இந்த வைன் போத்தல்கள் அனுப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அதன் பெறுமதி பல மில்லியன்களாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். தற்பொழுது இந்த வைன் போத்தல்களுக்கு சுமார் 69 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் விலை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு காலமாக இந்த வைன் போத்தல்கள் கடலுக்கடியில் இருந்தும் இன்னமும் எப்படி பாவனைக்குகந்ததாக இருக்கிறதெனவும் ஆய்வாளர்கள் அறிக்கை விட்டிருக்கின்றனர். கடலுக்கடியில் 55 மீற்றர் என்பது மிகவும் இருண்ட பகுதி.

இங்கு வெப்பநிலை நான்கு பாகைக்கும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடல் நீரில் உப்புத்தன்மை இருப்பதால் பழுதடைவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

பொருட்களை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு இதைவிட வேறு நல்ல இடம் கிடைக்காது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Veuve Clicquot ரக வைன் உற்பத்தி 1772 இலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னரே அவை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தமையும் குளிப்பிடத்தக்கது