இமயமலை நதிகள் 20 ஆண்டில் வற்றும் ஆபத்து

                            இமயமலை நதிகள் 20 ஆண்டில் வற்றும் ஆபத்து
    இமயமலையில் இருந்து பாயும் நதிகள் அனைத்தம் அடுத்த 20 ஆண்டுகளில் வற்றிவிடும் ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சர்வதேச தண்ணீர் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள், சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதில் இந்திய புவியியல் ஆராய்ச்சி குழு ஒன்றின் தலைவர் சந்தீப் வாஸ்லேகர் கூறியதாவது: உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாற்றங்களால் இமயமலையில் பனிப் பாறைகள் வேகமாக உருகுகின்றன. அதனால், மலையில் உற்பத்தியாகி இந்தியா, சீனா, நேபாளம், வங்க தேசம் வழியாக பாயும் நதிகளில் நீர் வேகமாக குறைந்து வருகிறது. 


அடுத்த 20 ஆண்டுகளில் அந்த நதிகள் வறண்டு விடும் ஆபத்து உள்ளது. நான்கு நாடுகளும் மொத்தம் 27,500 க்யூபிக் மீட்டர் அளவுக்கு தண்ணீர் இழப்பை சந்திக்கக்கூடும். இது நேபாளத்தில் இப்போது கிடைக்கும் ஒட்டுமொத்த நீரைவிட அதிகம். 20 ஆண்டுகளில் ஏற்படவுள்ள நதி நீர் இழப்பால் இந்தியா சீனாவில் 2050ம் ஆண்டுக்குள் நெல், கோதுமை உற்பத்தி 50 சதவீதம் குறைந்து விடும். அதனால், இந்தியா, சீனாவுக்கு மட்டும் ஆண்டுக்கு 20 முதல் 30 கோடி டன் அரிசி, கோதுமை இறக்குமதி செய்ய நேரிடும். இந்த தேவை அதிகரிப்பால் சர்வதேச உணவு சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டு, உணவு பொருட்கள் விலை பல மடங்கு உயரும். நதிகள் வறண்டு போகும் ஆபத்தால் அவற்றின் படுகையில் வசிக்கும் கோடிக்கணக்கான மக்கள் இடம்பெயர்வார்கள்.
 

 2050ம் ஆண்டு வாக்கில் இப்படி சுமார் 10 கோடி பேர் இடம் மாறக்கூடும் என்று கணித்துள்ளோம் என்றார். இதே கருத்தை சர்வதேச தண்ணீர் வாரத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற மேலும் பல நிபுணர்கள் தெரிவித்தனர்.