பெட்ரோல், டீசல் விற்பனை வரி குறைப்பு கிடையாது: கருணாநிதி
சென்னை : "பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை மேலும் குறைக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை' என்பதை, முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார்.
அவரது கேள்வி - பதில் அறிக்கை:பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதன் காரணமாக, பஸ் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என நான் அறிவித்திருப்பது ஒன்றும் பெரிய சாதனையல்ல என ஒருவர் அறிக்கை விடுத்துள்ளார்.
அது சாதனையா, இல்லையா என்பதை, பஸ்களில் பயணம் செய்யும் சாமானிய மக்களைக் கேட்டால் சொல்வர்.ஆந்திர முதல்வர், பெட்ரோலியப் பொருட்களின் மீது மாநில அரசால் விதிக்கப்படும் வரி விகிதத்தைக் குறைக்கப் போவதாக இன்னும் அறிவிக்கவில்லை. அது பற்றி அமைச்சரவையிலே விவாதித்து முடிவெடுக்கப் போவதாகத் தான் சொல்லியிருக்கிறார்.தற்போது ஆந்திரா யோசித்துக் கொண்டிருக்கும் இந்த முடிவை, 2006ம் ஆண்டு பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்திய போதே, தமிழகத்தில் டீசல் மீதான விற்பனை வரியை 25 சதவீதத்தில் இருந்து 23.43 சதவீதமாகக் குறைத்துக் கொண்டோம்.
அது போலவே, 2008ம் ஆண்டு டீசல் விலை உயர்த்தப்பட்ட போது, தமிழக அரசு 23.43 சதவீதத்தில் இருந்து 21.43 சதவீதமாக குறைத்துக் கொண்டது. அப்போது, வேறு எந்த மாநிலமும் தங்களுக்கு கிடைக்கும் வரியைக் குறைக்கவில்லை.அது மட்டுமல்ல, தற்போது மாநிலங்களுக்கு உள்ள வருவாய் ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், இதையும் மேலும் மேலும் குறைத்துக் கொண்டே சென்றால் அது, மாநில அரசுகளின் நிதி நிலைமைகளை மிகவும் பாதிக்கும்.மாநில அரசுகள் தங்கள் வரியைக் குறைக்க வேண்டும் என சொல்லும் போது, தற்போது பெட்ரோலிய விலை உயர்வுக்காக போராட்டம் நடத்தப் போகிற பா.ஜ., இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் எந்த அளவுக்கு அவர்கள் வரியைக் குறைத்துக் கொண்டனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஆந்திராவில் பெட்ரோலுக்கு 33 சதவீதமும், டீசலுக்கு 22.25 சதவீதமும் விற்பனை வரி உள்ளது. கர்நாடகாவிலும் பெட்ரோலுக்கு நுழைவு வரி உட்பட 30 சதவீதமும், டீசலுக்கு 23 சதவீதமும் உள்ளது. கேரளாவில் செஸ் உட்பட பெட்ரோலுக்கு 30 சதவீதமும், டீசலுக்கு 25.69 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. பஞ்சாபில் கூடுதல் வரியோடு சேர்த்து பெட்ரோலுக்கு 37.5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.டீசலுக்கு மகாராஷ்டிராவில் 23 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் நுழைவு வரியோடு சேர்த்து 24 சதவீதமும், சத்திஸ்கரில் 25 சதவீதமும் அந்தந்த மாநில அரசுகளால் வரி வசூலிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பெட்ரோலுக்கு 30 சதவீதமும், டீசலுக்கு 21.43 சதவீதமும் வரி உள்ளது. எனவே, நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிக வரி வசூலிக்கப்படுவதாகச் சொல்வது சரியான தகவல் அல்ல.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் அளித்த பேட்டியில், தங்கள் கட்சிக்குள் கத்திரி போட முடியாது எனச் சொல்லியிருக்கிறார்.
அவர்கள் கட்சிக்குள் நான் கத்திரி போட வேண்டிய அவசியமில்லை. இதைச் சொல்லும் அவர் தான், சில ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சிக்குள் தனக்குத் தானே கத்திரி போட்டுக் கொண்டு வெளியேறி, பிறகு மீண்டும் அதிலே சேர்ந்து, ஒட்டு போட்டுக் கொண்டார். அந்தக் கட்சியிலே பிளவு ஏற்படுத்த, வேறு யாரும் வெளியில் இருந்து வரத் தேவையில்லை; இவர் ஒருவரே போதும்.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.