இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

                   

                 இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்


இஸ்லாமிய மதத்தில் பாலியல் சுதந்திரம் கிடையாது என்று கருதுவோர் இந்தக் கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும். லெபனானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், சட்டப்படி பல வாழ்க்கைத் துணைகளை மாற்றும் பாக்கியசாலிகள். இளம் வயதினருக்கான ஒன்றுகூடலில் உங்கள் மனங்கவர்ந்த ஆணை/பெண்ணை தெரிவு செய்யுங்கள். மதகுரு ஒருவரின் முன்னிலையில் தற்காலிக திருமணம் செய்து கொள்ளுங்கள். அந்த திருமணம் பந்தம் குறைந்தது ஒரு மணி நேரம், கூடியது ஒரு வருடம் நீடிக்கலாம். அதற்குப் பிறகு மண விலக்கு பெற்று இன்னொரு துணையை மணம் முடிக்கலாம்.

லெபனானில் மத அடிப்படைவாத ஹிஸ்புல்லா தற்போது இளம் முஸ்லிம்களுக்கு துணை தேடிக் கொடுக்கும் வேலையில் இறங்கியுள்ளது. ஹிஸ்புல்லாவின் ஷியா இஸ்லாமிய மதகுருமார் தற்காலிக திருமணங்களை சட்டபூர்வமாக்கியுள்ளனர். லெபனானில் ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் தனித்துவமான சட்டங்கள் உள்ளன. திருமண பந்தம் அந்தந்த மதப்பிரிவினருக்குள் மட்டுமே சாத்தியம். வேற்று மதத்தவர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ள விரும்புவோர் கடல் கடந்து சைப்ரஸ் சென்று மணம் முடித்து திரும்புகின்றனர். ஷியா முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை தாங்கும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் மதத்தலைவர்களும் கூட. இதனால் சட்டத் திருத்தங்களை செய்வதும் இலகுவாகின்றது.

2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பு ஏற்படுத்திய உயிரிழப்புகள், சொத்தழிவுகள் என்பன லெபனானிய ஷியா சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தென் லெபனானில் பெருமளவு ஷியா முஸ்லிம்கள் வாழ்வதும், அவர்கள் ஹிஸ்புல்லாவுக்கு தார்மீக ஆதரவு அளிப்பதும் குறிப்பிடத்தக்கது. நீண்ட கால இடதுசாரி அமைப்புகளின் வேலைத்திட்டம் காரணமாக பொதுவாக லெபனானிய மக்கள் மதச்சார்பற்றவர்கள். மத நம்பிக்கை கொண்டவர்கள் ஹிஸ்புல்லாவின் உறுப்பினர்களாகவும், மற்றவர்கள் வெறும் ஆதரவாளர்களாக மட்டுமே இருந்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் பொது மக்களுக்கு மட்டுமல்ல, ஹிஸ்புல்லாவுக்கும் பெரும் அழிவு ஏற்பட்டது. யுத்தத்தின் அகோரம் காரணமாக பலர் ஹிஸ்புல்லாவையும் குற்றஞ் சாட்டினார்கள். அதே நேரம் ஹிஸ்புல்லாவிற்கும் புதிய உறுப்பினர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஹிஸ்புல்லா ஏற்கனவே சமூக நலன் திட்டங்கள் மூலம் மக்கள் ஆதரவை தக்க வைத்துக் கொண்டது. இலவச மருத்துவமனை, இலவச பாடசாலை போன்ற திட்டங்கள் மக்களின் மனங்களை வெல்ல உதவியது. தற்போது அந்த வரிசையில் துணை தேடிக் கொடுக்கும் திட்டமும் சேர்ந்துள்ளது. ஊர்கள் தோறும் இருக்கும் ஹிஸ்புல்லா அலுவலகங்கள் இதனை தாமாகவே முன்வந்தது அமுல்படுத்துகின்றன. ஊரில் இருக்கும் ஹிஸ்புல்லா உறுப்பினருக்கு சொந்தமான உணவு விடுதி கூட ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்துகின்றது. ஒன்றுகூடலுக்கு சமூகமளிக்கும் வாலிபர்களும், யுவதிகளும் விரும்பியவரை தெரிவு செய்யலாம். அங்கேயே இருக்கும் மதகுரு திருமண ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைப்பார். ஒப்பந்தம் மிக எளிது. "என்னை உனக்கு (குறிப்பிட்ட அளவு கால) மண வாழ்வுக்கு ஒப்புக் கொடுக்கிறேன்." "அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்." அவ்வளவு தான். திருமணம் முடிந்து விடும். அவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மண ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும்.

தற்காலிக திருமணங்கள் ஹிஸ்புல்லாவின் அரசியல் ஆதாயங்களுக்காகவும் நடத்தப் படுகின்றன. "மக்களின் பாலியல் தேவையை பூர்த்தி செய்ய உதவுவதன் மூலம் அரசியல் விசுவாசம் உறுதிப் படுத்தப்படுகின்றது." இவ்வாறு தெரிவித்தார் ஒரு ஹிஸ்புல்லா தலைவர். இது போன்ற தத்துவம் தான் மேலை நாடுகளிலும் பின்பற்றப் படுகின்றது. சாதாரண மக்களுக்கு பாலியல் சுதந்திரம் வழங்கியதன் மூலம், மேற்கத்திய அரசாங்கங்கள் மக்களின் அரசியல் ஆதரவை நிச்சயப்படுத்திக் கொண்டன. ஹிஸ்புல்லாவின் செயல்திட்டத்திற்கு அது மட்டும் காரணமல்ல. இன்னொரு ஷியா நாடான ஈரானில் தற்காலிக திருமண முறை தொன்று தொட்டு நிலவி வருகின்றது. அந்தக் கலாச்சாரத்தை ஹிஸ்புல்லா ஈரானில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

சிலர் தற்காலிக திருமண முறை சமுதாய அக்கறையின் பாற்பட்டதாக கூறுகின்றனர். போரினால் கணவன்மாரை இழந்த விதவைகள் இந்த திட்டத்தின் மூலம் பலன்பெற்றுள்ளதை மறுக்க முடியாது. அதே போல இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்ட முஸ்லிம் சமுகத்தில் பிறந்த இளைஞர்கள் ஏங்கும் சுதந்திரத்தை நிதர்சனமாக்குகிறது. ஆனால் பெரும்பாலான இளைஞர்களுக்கு பாலியல் கவர்ச்சியே முதன்மையானதாக உள்ளது. இரு வருடங்களுக்குள் நூற்றுக்கணக்கான துணைகளை மாற்றியதாக சிலர் தெரிவித்தனர். மறு பாலாரின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் இளம் சமுதாயம், ஹிஸ்புல்லாவின் அரசியல் கூட்டங்களுக்கு அள்ளுப்பட்டு போகின்றது. முதலில் தனக்கென துணை தேடும் ஆர்வத்துடன் வருவோர், மெல்ல மெல்ல ஹிஸ்புல்லாவின் அரசியல் கருத்துகளை உள்வாங்கிக் கொள்கின்றனர். உறுப்பினர் தொகையை அதிகரிக்கவும், மத நம்பிக்கைகளை ஊட்டுவதற்கும் இது ஒரு குறுக்குவழி. இந்த நடைமுறை ஏற்கனவே நம்மூர் இந்துக் கோயில்களில்/கிறிஸ்தவ தேவாலயங்களில் இருப்பதாக சொல்கிறீர்களா? அதுவும் சரி தான்.

"திருமணம் ஒரு வகை சட்டபூர்வ விபச்சாரம்." என்று கூறினார் பெரியார். தற்காலிக திருமண பந்தத்தை சிலர் விபச்சாரத்திற்கான போர்வையாக பயன்படுத்துகின்றனர். சில கிரிமினல்கள் இதை பயன்படுத்தி பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளியமை கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்ற சமயங்களில் ஹிஸ்புல்லா தவிர்க்கவியலாது ரகசிய பொலிசின் உதவியை நாடியது. இருப்பினும், பாலியல் வேட்கை கொண்ட இளைஞர்கள், தற்காலிக திருமணங்களை பயன்படுத்தி தமது இச்சையை தீர்த்துக் கொள்வதை ஹிஸ்புல்லா தடுப்பதில்லை. ஹிஸ்புலாவின் தற்காலிக திருமண திட்டம் சமூகத்தில் விமர்சிக்கப்படாமல் இல்லை. ஈரானில் இருந்து வரும் பெருமளவு நிதி, ஹிஸ்புல்லா அமைப்பின் கீழ் மட்ட தலைவர்கள் மட்டத்தில் "அனுபவிக்கும் ஆசையை" தூண்டி விட்டுள்ளதாக சிலர் குசுகுசுக்கின்றனர்.

ஹிஸ்புல்லா தற்காலிக திருமணங்களை சாமானிய மத்தியில் மட்டுமே ஊக்கப்படுத்தி வருகின்றது. பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் தனது உறுப்பினர்கள் தற்காலிக திருமணம் செய்வதை தடைசெய்துள்ளது. ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் நிரந்தர திருமண பந்தம் கூட, அமைப்பின் அங்கீகாரம் கிடைத்த பின்னரே சாத்தியம். ஹிஸ்புல்லாவின் இராணுவ அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் அதே சமயம், வெகுஜன அமைப்பு நெகிழ்ச்சியான போக்கை கொண்டுள்ளது. மேற்கத்திய நாகரீகத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட மக்களை வென்றெடுப்பதற்கு பொறுமையும், திட்டமிடலும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது.