
மறுபிறவிச் சம்பவங்கள்
மறுபிறவிச் சம்பவங்கள்
01-12-1985 தேதியிட்ட இல்லஸ்ட்ரேடட் வீக்லி வார இதழில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் புது தில்லியைச் சார்ந்த கீர்த்திநகர் என்னும் பகுதியில் வசித்து வரும் சாக்ஷி எனும் சிறுமி, ஷ்யாம் மித்ரா என்னும் பெரியவரை தனது முற்பிறவி மைந்தன் என்று அறிவித்துள்ள செய்தி இடம் பெற்றுள்ளது. தனது கூற்றை மெய்ப்பிக்க அச்சிறுமி தமது முற்பிறவிப் பெயர் ’போலி பாய்’ என்றும், ஷ்யாம் மித்ரா அப்பிறவியில் தன் மகன் என்றும், தான் தற்போது மறுபிறவி எடுத்து வந்திருப்பதாகவும் கூறியதோடல்லாமல், முற்பிறவியில் தம்மோடு இருந்தவர்களுடன் தான் பேசிய முக்கியமான, அந்தரங்கமான, குடும்பத் தொடர்புடையவர் மட்டுமே அறிந்த செய்திகளையும் கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளாள். மேலும் அதற்கு முந்தைய பிறவியைப் பற்றியும் அவள் கூறியிருக்கிறாள். அப்பிறவியில் தான் சிறு குழந்தையாக இருந்ததாகவும், தண்ணீர் தொட்டியில் வழுக்கி விழுந்து தாம் மரணமடைந்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள், பின் போலி பாயாகத் தாம் மறுபிறவி எடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறாள். போலி பாயாகத் தான் வாழ்ந்த காலத்தில் தன் கணவர் முரளிதருடன் ஹரித்வார் சென்றிருந்ததாகவும், அப்போது ஒரு குரங்கு தன்னைக் காதருகே கடித்து விட்டதாகவும் கூறும் சாக்ஷி, தற்போது மறுபிறவியிலும் அத்தழும்பு இருப்பதாகவும் கூறுகிறாள்.
