ரூ.5 கோடி மோசடி: சென்னை பாதரியார் மீது புகார்

                                               
           வேலை வாங்கி தருவதாக ரூ.5 கோடி மோசடி: சென்னை பாதரியார் மீது புகார்



சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் ராதா கிருஷ்ணனிடம் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:

சென்னை அண்ணாசாலை மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரும் நிறுவனம் நடத்தி வந்தவர் பாதிரியார் ஸ்டீபன் லூயிஸ்.

இவர் எனது மகன்கள் சுகுமாறன், சுரேஷ்குமார் ஆகியோருக்கும் அருள் என்பவருக்கும் ஐரோப்பிய நாடுகளான கனடா, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் பைபிள் மெடிலின் என்ற அறக்கட்டளை மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறினார். அதற்காக முன்பணம் செலுத்த வேண்டும் என்றார். ஒருவருக்கு ரூ. 2 லட்சம் வீதம் 3 பேருக்கும் தவணை முறையில் ரூ. 6 லட்சம் கட்டினோம். அதற்கு ரசீதும் போட்டு தந்தார்.

பல மாதங்கள் சென்றும் வேலை வாங்கி கொடுக்கவில்லை. நீங்கள் கிறிஸ்தவர்களாக மாறுங்கள். உங்கள் வீடு தேடி வேலை வரும் என்று ஆசை காட்டினார். அதை நம்பி நாங்களும் மதம் மாறினோம். அதன் பின்னரும் அவர் வேலை பெற்று தரவில்லை. மாறாக எங்களை தொடர்ந்து ஏமாற்றி வந்தார்.

ஒரு கட்டத்தில் கொடுத்த பணத்தை திருப்பி தருவதாக கூறி போலி காசோலை தந்தார். அவரிடம் சென்று அடிக்கடி பணம் கேட்டோம். அதற்கு அவர் தனக்கு பெரிய புள்ளிகளோடு தொடர்பு உள்ளது. பணம் கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதுவரை அவர் பணம் தரவில்லை.

எங்களை போல 100க்கும் மேற்பட்டவர்களிடம் இது போல ஆசை காட்டி மோசடி செய்துள்ளார். ரூ. 5 கோடிக்கும் மேல் அவர் மோசடி செய்துள்ளதாக தெரிகிறது. அவரிடம் இருந்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

இவரைப் போலவே 50 க்கும் மேற்பட்டோர் பாதிரியார் ஸ்டீபன்லூயிஸ், உதவியாளர் சைமன்பால் ஆகியோர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்க தியாகராய நகர் துணை கமிஷனர் முத்து சாமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.