சுவிட்சர்லாந்தில் திருவிழா
சூரிச் : சுவிட்சர்லாந்தின் சென் மார்க்கிறேத்தன் சென்காலன் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வயானை சமேத கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் 3வது அலங்காரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மே 21ம் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கிய இவ்விழா ஜூன் 03ம் தேதியன்று வைரவர் மடை திருவிழாவுடன் நிறைவுபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், கூட்டுப் பிரார்த்தனைகள், மூலமூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள், வசந்தமண்டப அலங்கார பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முருகப் பெருமானின் உள்வீதி உலாவும் நடைபெற்றது. அலங்காரத் திருவிழா தினங்களில் பிரணவரூபக் காட்சி, சூரியபிரகாச காட்சி, சக்திவேல்ரூபக் காட்சி, ஷட்கோணரூபக் காட்சி, குருந்தமரசயனக் காட்சி, மாம்பழத் திருவிழா, வைகாசி விசாகம், வேட்டைத் திருவிழா, சப்பறத் திருவிழா,தேர்த் திருவிழா,தீர்த்தத் திருவிழா,பூங்காவனத் திருவிழா, வைரவர்மடை திருவிழா உள்ளிட்ட திருவிழாக்கள் கொண்டாடப்பட்டது. பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்தும், அக்னிச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். சென் மார்க்கிறேத்தன் சென்காலன் பகுதியைச் சுற்றி உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களால் நடத்தப்பட்ட இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.