ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இளவரசி

                              ரூ.3 கோடி லஞ்சம் கேட்ட இளவரசி


          தன்னை தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நிருபரிடம் பிரிட்டிஷ் ராணி எலிசபெத்தின் மருமகள் சாரா ரூ. 3 கோடி லஞ்சம் கேட்டார்.

ராணி எலிசபெத்தின் 2வது மகன் இளவரசர் ஆன்ட்ரூ. இவரது முன்னாள் மனைவி சாரா பர்கூசன். நியூஸ் ஆப் தி வேர்ல்டு என்ற பத்திரிகையின் நிருபர் ஒருவர் இவரை சமீபத்தில் சந்தித்தார்.

அப்போது அவர் தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். இங்கிலாந்து நாட்டில் தொழிற்சாலை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் சாராவிடம் கூறினார்.

ஆன்ட்ரூவை சந்திக்க ஏற்பாடு செய்யவேண்டுமானால் தனக்கு ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும் என்று சாரா கேட்டுள்ளார். இதற்கு சம்மதித்த நிருபர் முதல் கட்டமாக ரூ.28 லட்சத்தை சாராவிடம் கொடுத்தார். அதை அவர் வீடியோவாக படம் எடுத்தபோதுதான் தன்னிடம் பணம் கொடுத்தவர் நிருபர் என்று சாராவுக்கு தெரிந்தது.

உடனே சாரா அந்த பணத்தைத் திருப்பி கொடுத்ததுடன், மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பிரிட்டிஷ் அரச குடும்ப வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாராவின் ஊழல் குறித்து கருத்துக் கூற அன்ட்ரூ மறுப்பு

அம்பலத்திற்கு வந்த சாராவின் லஞ்ச ஊழல் நடவடிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க பிரித்தானிய இளவரசர் அன்ட்ரூ மறுத்துள்ளார்.

நேற்று முன்தினம் “கிங்ஸ் குரொஸ்" புகையிரத நிலையத்திற்கு வந்த அன்ட்ரூவை திடீரென சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கருத்துக் கேட்டனர்.

கருத்துக் கூற மறுப்புத் தெரிவித்த அன்ட்ரூ, துரிதமாக அவ்விடத்தை விட்டு அகன்றுகொண்டார். இதேவேளை கடந்த 1996 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற் றுக் கொண்ட தனது முன்னாள் கணவர் அன்ட்ரூவுக்கு இவ் விடயம் குறித்து எதுவும் தெரியாது என சாரா கூறியுள்ளார்.