ஆண்டவனுக்கு உணவளித்தால்...

மகாபாரதத்தில்

 ஒரு கதை வருகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு சரியான உணவு இல்லை. காடுகளில் கிடைப்பதை சமைத்து திரவுபதி
அவர்களுக்கு போடுவது வழக்கம். அவர்களிடம் சூரியன் தந்த அட்சய பாத்திரம்

இருந்தது. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் அட்சயபாத்திரம் அள்ள அள்ள குறையாமல்
உணவு தரும் தினமும் பாண்டவர்களுக்கு உணவு வழங்கிய பின் கடைசியாக திரவுபதி
உண்பது வழக்கம். பிறகு அட்சய பாத்திரத்தைக் கழுவி வைத்துவிடுவாள்.
ஒருநாள் பாண்டவர்கள் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு துர்வாச ரிஷியும்
அவருடன் வந்திருந்த சீடர்களும் உணவருந்த வரப்போவதாக தர்மர் தெரிவித்தார்.
அன்றைய தினம் எல்லோரும் உணவருந்தி அட்சய பாத்திரம் கழுவி
வைக்கப்பட்டிருந்தது. திரவுபதி உணவுக்கு எங்கே போவாள்? மிகுந்த கவலையுடன்
உள்ளே போய் கிருஷ்ணபகவானை நினைத்து பிரார்த்தனை செய்தாள். சில நொடிகளில்
ஸ்ரீ கிருஷ்ணன் அந்த ஆசிரமத்திற்கு வந்துவிட்டார். திரவுபதிக்கு மிகவும்
மகிழ்ச்சியாகப் போய்விட்டது. கிருஷ்ணன் தன்னை சங்கடத்திலிருந்து
காப்பாற்றப் போகிறார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் கிருஷ்ணன்
அவளைப் பார்த்து, அம்மா நான் மிகுந்த பசியுடன் நெடுந்தொலைவிலிருந்து
வந்திருக்கிறேன். எனக்கு உடனே ஏதாவது உணவு கொடு என்று கேட்டார். திரவுபதி
கலங்கிப் போனாள். கண்ணா, இங்கே வரப்போகும் யோகிகளுக்கு எப்படி உணவளிப்பது?
என்று தெரியாமல் கலக்கத்துடன் உன்னை உதவிக்கு அழைத்தேன். நீயோ உனக்கே பசி
என என்னிடம் உதவி கேட்கிறாய். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நாங்கள்
சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. அட்சய பாத்திரத்தைக் கழுவிவிட்டேன்.
உணவுக்கு நான் எங்கே போவேன்? என்று கண்ணீர் ததும்ப கூறினார்.
கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே அப்படி இராது, நீ அட்சயபாத்திரத்தைக்
கொண்டுவா, நான் பார்த்து சொல்லுகிறேன். கட்டாயம் ஏதாவது மிச்சம்
இருக்கும் என்று கூறினார். திரவுபதியும் கொண்டு வந்து காட்டிய காலி
பாத்திரத்தின் உள்ளே பார்த்தார். ஒரு கீரை இலை அதில் ஒட்டிக்
கொண்டிருந்தது. அதை எடுத்து வாயில் போட்டுக்கொண்டு சுவைத்தார்
கிருஷ்ணபகவான். எனக்கு வயிறு நிறைந்துவிட்டது என்று வயிற்றைத்
தடவிக்கொண்டார். சிரித்துக்கொண்டே திரவுபதியை வெளியே அழைத்துவந்தார்.
அங்கே துர்வாசரும், மற்ற சீடர்களும் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். எங்கே
போகிறீர்கள்? என்று கேட்டார் தருமர். எங்களுக்கு வயிறு முழுமையாக
நிறைந்துவிட்டது. கொஞ்சம்கூடப் பசியில்லை. நாங்கள் புறப்பட்டுப் போகிறோம்.
அவசியமானால் காலையில் அடுத்தாற்போல் உள்ள ஆசிரமத்தில் சாப்பிட்டுக்
கொள்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். ஆண்டவனுக்குக் கொடுத்த
சொற்ப உணவில் அத்தனை பேருக்கும் வயிறு நிறைந்துவிட்டது என்பது பாரதக்
கதையின் தத்துவம். எப்படி என்று நீங்கள் கேட்கலாம். பெரிய மரம்
இருக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. தண்ணீர்
ஊற்றுகிறீர்கள். அடிமரத்தில் வேருக்கு தண்ணீர் ஊற்றுகிறீர்கள். அது
அவ்வளவு இலைகளுக்கும் செல்வதில்லையா? பக்தி சிரத்தையுடன் ஆலயத்தில்
செய்யும் சேவையின் பலன் அனைத்து மக்களையும் காக்கும் நன்மையை உத்தேசித்தே
நடக்கிறது