ஒரு நாளைக்கு வெறும் ஒரு கைப்பிடி அரிசி


 ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தார்.அவரை நாடி பலரும்,அவரது உபதேசமொழிகளை பெற்று இன்புற்று வாழ்ந்தனர்.


அதே ஊரில் ஒரு கருமியான செல்வந்தன் இருந்தான்.அவனுக்கும்
மோட்சம்,முக்தி போன்ற சில வார்த்தைகள் தெரியும்.மோட்சம் கிடைக்க
செலவில்லாத வழியை காண எண்ணியிருந்த அவனுக்கு,உள்ளூர் துறவியின் ஞாபகம் வந்தது.ஒரு நல்லநாள் பார்த்து அந்த கஞ்சமகாபிரபு


அத்துறவியை சென்று பார்த்து வணங்கினான்.
துறவியிடம் "அய்யா எனக்கு மோட்சம் கிடைக்க வழி சொல்ல வேண்டும்" என்றான்.

துறவியும், "சாஸ்திரங்கள் தெரிவிக்கிறபடி தர்ம மார்க்கத்தை கடைபிடிக்க
வேண்டும்.யாராவது ஏழை பசியோடு வந்தால் அன்னமிடவேண்டும்.
மேலும் தான தர்மங்கள் செய்து வந்தால் மோட்சம் கிட்டும் என்றார் .
துறவியை நமஸ்கரித்து விட்டு அக்கஞ்சன் வீடு திரும்பினான்.துறவியின்
வார்த்தைகளை நினைவுபடுத்தி பார்த்தான்.தினம் தினம் தரித்திரர்களுக்கு
அள்ளி கொடுத்தால் தமக்கு ஒன்றுமில்லாமல் என்று நினைத்து ஒரு முடிவிற்கு வந்தான்.
தினம் தினம் யாராவது ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு கைப்பிடி அரிசி தானம் செய்தான்.ஒருநாள் அந்த துறவியை மீண்டும் காண சென்றான் கஞ்சன்.
துறவியும் "ஏனப்பா நீ தினமும் நல்ல முறையில் தானதர்மம் செய்கிறாயா"? என்று கேட்டார் அவனிடம், "ஆமாம் தினமும் யாராவது
ஒருவருக்கு ஒருகைப்பிடி அரிசி தருகிறேன்" என்று பெருமையாக சொன்னான்.
துறவி பதில் எதுவும் பேசாமல்,அவர் பக்கத்தில் இருந்த ஒரு மரத்தின்
அடிபாகத்தை தன் கைவிரல் நகத்தால் கீரலானார்.
இது தொடரவே... கஞ்சன் பொறுக்க முடியாமல் துறவியிடம் "அய்யா தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறிர்கள்?" என்றான்.
அவரும் "என் கை நகத்தால் இம்மரத்தை வெட்டி சாய்க்க போகிறேன்"
என்றார்.அக்கஞ்சனும் "அய்யா அது எப்படி சாத்தியம்? ஒரு பிரமாண்ட
மரத்தை நகத்தால் கீறி சாய்க்க எப்படி முடியும்?கோடாளியினால் தான்
வெட்டி சாய்க்க முடியும்" என்று பெருமையாக பேசினான்.
உடனே துறவி "ஒரு நாளைக்கு வெறும் ஒரு கைப்பிடி அரிசியை தானம்
செய்து விட்டு நீ மோட்சம் பெற முடியும் என்று எண்ணும் போது,இதுவும்
சாத்தியம் தான்" என்றார்.
வந்த கஞ்சனுக்கு புத்தி தெளிந்தது.அன்று முதல் தனக்கென்று எதையும்
வைத்து கொள்ளாமல் தானதர்மங்கள் செய்ததோடு.. ஆன்மிக சாதனைகளை சிரத்தையுடன் செய்து வரலானான்.
                                                                        --அன்புடன் மீனா
source   http://vaalpaiyyan.blogspot.com/2010/05/blog-post_1388.html