காகபுசுண்டர்

   ச்சையால் வாழ்வு கொச்சைப்படும்” என்பது காகபுசுண்டர் என்னும் சித்தரின் கருத்தாகும். பரம்பொருளினை அடைவதே அனைவரது முழுமுதற் கொள்கை என்பதை வலியுறுத்துகிறார். யோகநிஷ்டை என்பதே இவரது ஞானவேட்கையாகும் என்று காகபுசுண்டரின் பாடல்கள் தெரிவிக்கின்றன. மூச்சை அடக்கி மூலப்பொருளைக் காணவும், பேச்சை ஒடுக்கி பிரம்மத்தை அடையவும் கற்றுத்தருவதே காகபுசுண்டரின் குறிக்கோளாகும். காகபுசுண்டரின் பிறப்பு பற்றி போகரின் சப்தகாண்டம் கூறுகிற கருத்தினைப் பற்றிப் பின்வருமாறு அறிவோம்:

“காகபுசுண்டர் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழித்ததையும் எத்தனையோ பிரம்மாக்கள் எத்தனையோ விஷ்ணுக்கள்,
எத்தனையோ சிவன்கள், அழிந்து போனதையும் ஒவ்வொரு பிரளயத்திற்குப் பின்பும், உயிர்கள் புதிது புதிதாக உண்டாவதையும் பார்த்ததாகக் கூறியுள்ளார்கள். காகபுசுண்டர் பல யுகங்கள் உயிரோடு இருந்ததாகக் கூறுகின்றார்கள்.”



   ஒரு சமயம் சக்தி கணங்கள் மது அருந்தி நடனமாடிக் களித்திருந்தனர். அப்போது சிந்திய மது கலந்த தண்ணீரை அன்னங்கள் அருந்திப் போதைக் களிப்பால் நடனமாடின. இதை சிவனும், பார்வதியும் கண்டு களித்தனர். அதனால் உண்டான சிவகணங்களை காகத்தின் வடிவில் அன்னத்தோடு சேர்ந்தார். அப்போதே அன்னம் கருவுற்று முட்டைகளை இட்டது. 20 முட்டைகள் அன்னக்குஞ்சுகளாகப் பொரிந்தது. 21வது முட்டையில் காகம் பொரிந்து வெளிவந்ததாம். அந்த காகமே காகபுசுண்டர்.

   அந்த 20 அன்னங்களும் அநேக நாள் இருந்து முக்தி அடைந்தன. சிவகலையின் தாக்கத்தால் வலுவான காகபுசுண்டர் தன் தவவலிமையால் என்றும் உயிரோடு இருக்கும் ஆற்றலைப் பெற்றார். காகபுசுண்டர் பலநூறு பிறவிகள் எடுத்தவர். இருந்தாலும் முந்தைய பிறவிகளின் நினைவுகளை மறக்காதவர். அவர் காக வடிவிலான சித்தராய் காகபுசுண்டராய் உருவெடுத்ததன் காரணத்தை அவர் கூறுவதாலேயே நாம் அறிவோம்.

“இந்த காகவடிவத்தில் தான் நான் இராமனிடம் பக்தி கொண்டேன். அவனுடைய அருள் இந்த உடலில் தான் எனக்குக் கிட்டியது. அதனால் தான் இந்த உடல்மீது எனக்கு வெறுப்பு இல்லை. நான் விரும்பினால் எனக்கு மரணம் வரும். இருந்தாலும் நான் காக வடிவத்தை விட்டுவிட மாட்டேன்.”
காகபுசுண்டருக்கு முற்பிறவி ஞாபகம் வந்து அலைமோதிய எத்தனை பிறவி எடுத்த போதிலும் அவர் அனுபவித்த பிராமணன் பிறவிதான் அவருக்கு மிகவும் அற்புதமான பிறவியாகத் தோன்றியது. அங்ஙனம், பிராமணனின் மகனாக இருந்தபோது குருகுலவாசமாக லோமச முனிவரின் ஆசிரமம் சென்றார். காகபுசுண்டருக்கு ஸ்ரீராமபிரானின் திருவடித்தாமரைகளை ரசிப்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்தார். ஆனால், லோமச முனிவரின் அறிவுரையை அலட்சியம் செய்தார். இதனை அறிந்த முனிவர் காகபுசுண்டரிடம், “நான் கூறும் உபதேசத்தை ஏற்க மறுக்கிறாய். இது உனக்கு நல்லதல்ல. எதற்கெடுத்தாலும் பய உணர்வு உன்னிடம் தலைகாட்டுகிறது. எனவே, உன்னைக் காகமாக உருவெடுக்க சபிக்கிறேன்,” என்று சாபமிட்டார்.

   பின்னர், சிறிது காலத்திற்குப் பின்பு காகபுசுண்டரின் குறிக்கோளை அறிந்த லோமச முனிவர் அவருக்கு தேவரகஸ்யமான இராமசரிதத்தை எடுத்து வைத்தார். அவருக்கு சகலசித்திகளும் கிடைக்க, அவர் விரும்புகிறபோது மரணம் சம்பவிக்கும் என்றும் ஆசீர்வதித்தார். மேலும், மாயை, யோகம், காலம், கர்வம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் காகபுசுண்டரை அணுகாது என்று ஆசிர்வதித்தார்.

காகபுசுண்டர் தாம் எத்தனையோ யுகப்பிரளயங்கள் தோன்றி அழிந்ததையும் எத்தனையோ பிரம்மாக்கள், எத்தனையோ விஷ்ணுக்கள் சிவன்கள் அழிந்து போனதைப் பார்த்ததாகவும், ஒவ்வொரு பிரளயத்திற்கு பிறகும் உலகம் சிருஷ்டிக்கப்பட்டதைப் பார்த்ததாகவும் அவர் கூறினார். இத்தகைய நிகழ்வுகள் பற்றி காகபுசுண்டர் துணைக்காவியத்தில் விளக்கமாகக் கூறப்படுகிறது. (வாசியோகம், நெற்றிக்கண் திறத்தல், தனிப்பகுதிகளில் விளக்கப்பட்டுள்ளது.)

                                   காகபுசுண்டர் அருளிய நூல்கள்:
காகபுசுண்டர் வைத்தியப்பெருங்குறள் காகபுசுண்டர் நாடிசோதிடம் காகபுசுண்டர் ஞானம் 80 காகபுசுண்டர் உபரிடதம் 31 காகபுசுண்டர் காவியம் 33 காகபுசுண்டர் குறள் 16 காகபுசுண்டர் பெரு நூல் 1000

சித்தர்களின் ஞானமும், ஆழமும், சாதாரண மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாதவை. வசிட்ட முனிவருக்கே உபதேசம் செய்யக்கூடிய அளவு தகுதி பெற்றவர் காகபுசுண்டர். போலி சித்தர்களையும், சாதுக்களையும் மிகக்கடுமையாக விமர்சிக்கிறார். காகபுசுண்டர் உள்ளொளி காணும்வரை யோக சாதனைகளை விடாமல் செய்ய வேண்டும் என்கிறார். இவர் திருச்சி வரையூரில் வாழ்ந்து அங்கேயே சமாதி அடைந்ததாக ஆய்வு நூல்கள் கூறுகின்றன.