திருமூலர்

  
   திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றருளிய மகா ஞானி ஆவார். இவர் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். சகுனகிரி மலை பல சித்தர்கள்
தங்கித் தவம் புரிந்த இடமாகக் கருதப்படுகிறது. சதுரகிரி மலையின் விசேஷத் தன்மை பற்றி நந்தீசுவரர் தான் திருமூலருக்கு எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து ஒரு உருவமாக அமைந்ததால்தான் இதற்கு சதுரகிரி என்று பெயர் வந்ததாகத் திருமூலரின் சீடரான காலாங்கிநாதர் வருணிக்கிறார். 
 
 
 இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் தப்பிலாமன்றில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டது 8000 வருடங்கள் முன்னர் ஆகும். இது இராமாயண காலத்துக்குச் சமமானதாகும். திருமூலர் வைத்தியம், யோகம், ஞானம் என்ற முப்பெருந் துறைகளைப் பாடியுள்ளார்.