மனத்திற்குக் கட்டளை

பேயா யுழலுஞ் சிறுமனமே!
பேணா யென்சொல் இன் றுமுதல்
நீயா ஒன்றும் நாடாதே
நினது தலைவன் யானேகாண்;
தாயாம் சக்தி தாளினிலும்
தரும மெனயான் குறிப்பதிலும்
ஓயா தேநின் றுழைத்திடு வாய்
உரைத்தேன் அடங்கி உய்யுதியால்.