கர்ப்பத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட பெண்ணுக்கு குழந்தை

  கர்ப்பத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட பெண்ணுக்கு குழந்தை

இங்கிலாந்தில் கர்ப்பத்தடை ஆபரேஷன் செய்து கொண்ட பெண்ணுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் குழந்தை பிறந்தது. லண்டனைச் சேர்ந்தவர் டெபி அமோஸ். வயது 43. இவரது கணவர் மெல்வின் (57). டெபி 24 வயதாக இருக்கும்போது முதல் ஆண் குழந்தை பெற்றார். அவனுக்கு இப்போது வயது 19. அடுத்த சில ஆண்டுகளில் மேலும் 2 குழந்தைகள் பிறந்தன. மீண்டும் குழந்தை பிறப்பை தடுக்க, டெபி தனது 30 வயதில் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சைக்கு 99 சதவீத பலன் மட்டுமே உண்டு. 1 சதவீத தோல்விக்கும் வாய்ப்புள்ளது என டெபி &மெல்வின் தம்பதியை டாக்டர்கள் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து டெபி கருவுற்றார். அது அவருக்கு 6 மாதங்களுக்குப் பிறகே தெரிய வந்தது. எனவே, கருவைக் கலைக்க வாய்ப்பில்லாமல் போனது. நான்காவதாக சமீபத்தில் டெபிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுபற்றி டெபி கூறுகையில், கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் கருவுற்றது அதிர்ச்சி அளித்தது. அதுவும் 6 மாதங்கள் கழித்து வயிறு வீக்கத்துக்குப் பிறகே தெரிய வந்தது. எனது வயது கருதி பயந்தேன். எனினும், 4வது குழந்தை பெற்றதற்காக வருத்தம் இல்லை என்றார். போக்குவரத்து மேலாளராக உள்ள கணவர், தனது 60 வயதில் ஓய்வு பெற திட்டமிட்டிருந்தார். ஆனால், புதிய வரவால் அந்த திட்டம் தள்ளிப் போகக்கூடும் என்றும் டெபி தெரிவித்தார்.