வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு



வருக செல்வ!வாழ்கமன் நீயே!
வடமேற் றிசைக்கண் மாபெருந் தொலையினோர்
பொற்சிறு தீவகப் புரவலன் பயந்த
நற்றவக் புதல்வ! நல்வர வுனதே!
மேதக நீயும்நின் காதலங் கிளியும்

என்றனைக் காணுமா றித்தனை காதம்
வந்தனிர்!வாழ்திர்!என் மனம்மகிழ்ந் ததுவே
செல்வகேள்! என்னரும் சேய்களை நின்னுடை
முன்னோர் ஆட்சி தொடங்குறூஉம் முன்னர்
நெஞ்செலாம் புண்ணாய் நின்றனன் யாஅன்.

ஆயிர வருடம் அன்பிலா அந்நியர்
ஆட்சியின் விளைந்த அல்லல்கள் எண்ணில.
போனதை எண்ணிப் புலம்பியிங் கென்பயன்?
மற்றுன் நாட்டினோர் வந்ததன் பின்னர்,
அகத்தினில் சிலபுண் ஆறுதல் எய்தின.

போர்த்தொகை அடங்கிஎன் ஏழைப் புத்திரர்
அமைதிபெற் றுய்வ ராயினர். என்வே,
பாரத தேவி பழமைபோல் திருவருள்
பொழிகர லுற்றனள்,பொருள்செயற் குரிய
தொழிற்கணம் பலப்பல தோன்றின,பின்னும்

கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்,
எனப்பல தீமைகள் இறந்துபட் டனவால்.

மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான
ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்
பாலரின் மீது படுதலுற் றனவே.
ஆயினும் என்னை?ஆயிரங் கோடி
தொல்லைகள் இன்னும் தொலைந்தன வில்லை.

நல்குர வாதி நவமாம் தொல்லைகள்
ஆயிரம் எனைவந் தடைந்துள நுமரால்
எனினுமிங் கிவையெலாம் இறைவன் அருளால்
நீங்குவ வன்றி நிலைப்பன வல்ல.
நோயெலாந் தவிர்ப்பான் நுமரே எனக்கு.

மருத்துவ ராக வந்தனர் என்பதூஉம்
பொய்யிலை.ஆதலிற் புகழ்பெறும் ஆங்கில
நாட்டின ரென்றும் நலமுற வாழ்கவே!
என்னருஞ் சேய்களும் இவரும்நட் பெய்தி
இருபான் மையர்க்கும் இன்னலொன் றின்றி

ஒருவரை யொருவர் ஒறுத்திட லிலாது,
செவ்விதின் வாழ்க!அச் சீர்மிகு சாதியின்
இறைவனாம் உந்தை இன்பொடு வாழ்க!
வாழ்க நீ! வாழ்கநின் மனமெனும் இனிய
வேரிமென் மலர்வாழ் மேரிநல் லன்னம்!
மற்றென் சேய்கள் வாழிய! வாழிய!