கிறித்துவப் பள்ளிகளுக்கு ஒரு கொடை

christian_school_01
      ஒரு சில தினங்களுக்கு முன்பு ஒரு சிறிய பையன், என் பேரன் வயசு இருக்கலாம், கையில் ஒரு சின்ன ரசீது புஸ்தகத்துடன் வந்து நன்கொடை கேட்டான். என்ன என்று வாங்கிப் பார்த்தேன். அவன் வாசிக்கும் பள்ளிக்கூடத்தில் சர்ச் கட்ட பணம் வசூலிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 16 வருஷங்களுக்கு முன்பு, இதே போல என் மகனுடைய சிநேகிதர்கள் சிலர் பணம் கேட்டு என்னிடம் வந்தது என் மனசில் தோன்றி மறைந்தது. அப்போது நான் டிவியில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தப் பையன், பெயர் என்னவோ மறந்துவிட்டது, தயங்கித் தயங்கிப் பணம் கேட்டதும், ஒரு பையனுக்கு இவ்வளவு தொகை வசூலிக்கவேண்டும், இல்லை என்றால் சார் திட்டுவார் என்று சொன்னதும் மனசில் நிழலாடியது.
தொடர்ந்து இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு சங்கல்பம்! கிறித்துவ பள்ளிகளில் படிக்கும் ஹிந்து பிள்ளைகளின் நிலை சொல்லி மாளாதது. எல்லாப் பள்ளிக்கூடங்களும் இப்படி அல்ல என்று முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பெரும்பாலான பள்ளிக் கூடங்கள் இப்படித்தான் என்பதையும் சொல்லிவிடுகிறேன். நான் கேள்விப்பட்ட விஷயங்களை விட்டுவிட்டு, நானே நேரில் பார்த்த விஷயங்களை மட்டும், பள்ளிக் கூடங்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டுச் சொல்கிறேன். அப்போது இது ஒரு பொது விஷயமாக மாறுவதைப் பார்ப்பீர்கள். எல்லாம் நம் தலையெழுத்துதான் என்றும் முடிவுக்கு வருவீர்கள்.
ஒரு பையன், அவனது பள்ளியில் சர்ச் கட்டப் பணம் கேட்டு வந்தான். வீடு வீடாகக் கேட்டிருக்கிறான். ஒரு வீடு என் சிநேகிதனின் வீடு. சிநேகிதனின் தங்கை அந்தப் பையனை அழைத்துக்கொண்டு நேராக அவன் பள்ளிக்கூடத்துக்குச் சென்றுவிட்டாள். இதற்குத்தான் பையனை பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறார்களா என்று கேட்டிருக்கிறார்கள். பள்ளிக்கூட வாத்தியார் அந்தப் பையனின் அம்மாதான் வந்திருக்கிறார் என நினைத்து பயந்துவிட்டார் போல. பின்னர்தான் தெரிந்திருக்கிறது வந்தது பையனின் அம்மா இல்லை என்று. கொஞ்சம் தைரியம் வந்து பேசத் தொடங்கிய அந்த வாத்தியார், சர்ச் கட்ட பணம் கேட்கவே இல்லை என்று சாதித்துவிட்டார். ரசீதிலும் சர்ச் கட்ட என்று எங்கேயும் இல்லை. என் சிநேகிதனின் தங்கை இனிமேல் இது போலச் செய்யாதீர்கள், சர்ச் கட்டவேண்டும் என்றால் நீங்களே பணம் வசூலித்துக் கட்டுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தார்.
இன்னொரு கதையைப் பார்ப்போம். அந்தப் பள்ளிக்கூடம் அந்த ஊரிலேயே முக்கியமான பள்ளிக் கூடங்களில் ஒன்று. கிட்டத்தட்ட 1500 பிள்ளைகளுக்கு மேல் வாசிக்கிறார்கள். கிறிஸ்துவப் பள்ளிக்கூடம். பள்ளிக்கூடத்துக்கு உள்ளேயே சர்ச் உண்டு. பத்தாம் வகுப்பு பொதுப் பரீக்ஷைக்கு முன்னால் சர்ச் சென்று, ஸ்தோத்திரித்தால்தான் ஹால் டிக்கெட் தருவார்களாம். புனித நீரும் தெளிப்பார்களாம். எல்லாப் பிள்ளைகளும் இதனைச் செய்கின்றன. ஒரு பையன் தன் வீட்டில் இதைச் சொல்லி, எனக்கு அப்படி கும்பிட மனம் வரவில்லை என்று சொல்லியிருக்கிறான். பையனின் அப்பா பள்ளிக்கூடத்துக்கு வந்து சத்தம் போட்டிருக்கிறார். ஆனால் அந்தப் பையனுக்கு ஹால்டிக்கெட் தரவே இல்லை பள்ளிக்கூடத்தின் ஹெட்மாஸ்டர். பையனின் அப்பாவும் பரீக்ஷைக்கு ஒருவாரம் வரை பார்க்கலாம், இல்லை என்றால் பிரச்சினை பண்ணிவிடலாம், ஆனால் எப்படியும் கொடுத்துவிடுவார்கள் என்று நம்பி தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு வந்த வண்ணம் இருந்திருக்கிறார். கடைசியில் இந்தப் பையன் வந்து கும்பிடமாட்டான் என்று தெரிந்ததும், பரீக்ஷைக்கு இரண்டு நாள் முன்பு அந்தப் பையனுக்கு ஹால் டிக்கெட்டை ஒரு பியூனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்கள் பள்ளிக்கூடக் காரர்கள். அத்தனை நாள் அந்தப் பையனும் அந்தப் பையனின் குடும்பமும் அனுபவித்த கஷ்டங்கள் தேவைதானா? யாரையும் இப்படி, இவரைக் கும்பிடு என்று கட்டாயப் படுத்துவது தவறு என்று பள்ளிக்கூட நிர்வாகத்துக்குத் தெரியாதா என்ன?
school-boysஇன்னொரு கதை பெண் பிள்ளை பற்றியது. ஐந்தாம் வகுப்பு வரை சாதாரண அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் படித்த அந்தப் பெண் பிள்ளை எனக்கு தூரத்துச் சொந்தமும் கூட. வயது பதினொன்று. ஒழுங்காகப் படிக்கவில்லை என ஒண்ணாங் கிளாஸில் இரண்டு தடவை போட்டுவிட்டார்கள். ஆறாம் வகுப்புக்குப் போவதற்கு முன்பே பெரியவளாகிவிட்டாள். பவுடர் போட்டுக்கொண்டு, பொட்டு வைத்துக்கொண்டு, நிறைய பூ வைத்துக்கொண்டு, கொலுசு போட்டுக்கொண்டு செல்வதில் அவளுக்கு சந்தோஷம். ஆறாம் கிளாஸ் நல்ல பள்ளிக்கூடத்துக்க்குப் போகவேண்டும் என்ற ஆசையில் அவளது அப்பா ஒரு பெரிய பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டார். அந்தப் பள்ளியில் குங்குமம் வைத்துக்கொண்டு வரக்கூடாது, பூ வைத்துக்கொள்ளக்கூடாது, கொலுசு போட்டுக்கொள்ளக்கூடாது, வளையல் போட்டுக்கொள்ளக்கூடாது என்று பலவிதமான கட்டுப்பாடுகள்.
அப்படியே நொறுங்கிப் போய்விட்டாள் அந்தப் பெண் குழந்தை. எப்போதடா ஞாயிற்றுக் கிழமை வரும் என்று காத்துக்கொண்டிருப்பாள். ஒரு தடவை நான் வந்து பேசட்டுமா என்று கேட்டேன். ‘அவங்க போட்டுக்கிட்டு வரக்கூடாதுன்னு சொல்லலியே’ என்றாள். அப்ப நீ ஏன் போட்டுக்கிட்டு போகமாட்டேங்கிற என்று கேட்டபோது, அது அப்படித்தான், போட்டுக்கிட்டு போனா எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க அதான் என்றாள். எப்படி நெருக்கிறார்கள் பாருங்கள். தங்க வளையல் போட்டால் தொலைந்து போகும் என்பது சரிதான். அதற்காக சாதாரண கவரிங் வளையல் கூடப் போட்டுக்கொண்டு போகக்கூடாதா என்ன? இந்தப் பள்ளிக்கூடங்கள் நேரடியாக ‘நாங்கள் கிறிஸ்துவப் பள்ளிகள். அதனால் இதையெல்லாம் செய்யக்கூடாது’ என்று சொல்வதில்லை. மாறாக, அதற்கு ஏதேனும் காரணங் கற்பித்துத்தான் சொல்கிறார்கள். ஆனால் உள் நோக்கம் என்னவோ இதையெல்லாம் ஹிந்து மதச் சின்னமாகப் பார்த்து அதனை அனுமதிக்கக்கூடாது என்று நினைப்பதுதான். ஒருநாள் அந்தப் பெண் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது காலில் கொலுசு போட்டுக்கொண்டு, அதன் மேல் சாக்ஸ் போட்டுக்கொண்டு, ஷூ போட்டுக்கொண்டு போனாள். நீ நடக்கும்போது சத்தம் கேட்காதா என்று கேட்டேன். சாக்ஸ் போட்டிருக்கேன்ல, கேட்காது என்றாள். கொலுசு போடுவதன் அர்த்தமே அழிந்துபோக, மனத் திருப்திக்காக அப்படிப் போட்டுக்கொண்டு செல்லும் குழந்தையைப் பார்க்கப் பாவமாக இருந்தது.
இன்னொரு கிறிஸ்துவப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பையனின் அப்பா என்னிடம் ‘நேத்து என் பையன் என்னவோ பேசிக்கிட்டிருந்த சேசப்பான்னு சொன்னான், ஷாக்காயிடுச்சு’ என்றார். இந்த ஷாக் எல்லாம் தானாக வருவதல்ல, நாமாக சென்று ஏற்படுத்திக்கொள்வது என்று அவரிடம் சொல்லலாமா என நினைத்தேன். ஆனால் அவரைச் சொல்லியும் குற்றமில்லை. ஹிந்துப் பள்ளிக் கூடங்களில் சேர்க்கலாம் என்றால், பக்கத்தில் நல்ல ஹிந்துப் பள்ளிக் கூடங்கள் இருப்பதில்லை! சில ஹிந்து ஆன்மிக இயக்கங்கள் நடத்தும் பள்ளிக் கூடங்களிலோ கட்டணம் அதிகமாக இருக்கிறது. கட்டணம் குறைவாக வாங்கும் ஹிந்துப் பள்ளிக்கூடங்கள், நாம் வசிக்கும் இடங்களுக்கு அருகில் இருப்பதில்லை. ஆனால் கிறிஸ்துவப் பள்ளிகளோ நம் வீட்டுக்கு அருகில் நான்காவது இருக்கின்றன.
இப்படி நான் என்னுடைய சிநேகிதனிடம் சொல்லிக்கொண்டிருந்த போது அவன் சொன்ன விஷயம் இன்னும் வேதனையானதாக இருந்தது. இப்படி கிறிஸ்துவப் பள்ளிகளுக்குப் போட்டியாக ஒரு ஹிந்து அமைப்பு ஒரு ஹிந்துப் பள்ளியைத் தொடங்கியதாம். ஒரு மானேஜ்மெண்ட் பள்ளி. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் நடந்திருக்கிறது. பின்னர் போதிய பணம் இல்லாத காரணத்தால் நல்ல ஆசிரியர்களை நியமிக்க முடியாமல், பள்ளியின் போக்கும் தரமும் மிகவும் கீழே இறங்கிவிட்டதாம். ஹிந்து உணர்வு அவரை அந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்கிறது என்றாலும், என் பையனின் எதிர்காலம் என்னை அந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டாம் என்று தடுக்கிறது என்றார் அந்தத் தகப்பனார். ஏதேனும் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் வாசிக்கப் போடலாம் என்றால், அந்தப் பள்ளிக்கூடங்களின் தரமோ இன்னும் மோசம் என்றார். யோசிக்கவேண்டிய விஷயம்தான்.
பெரும்பாலான கிறிஸ்துவப் பள்ளிகள் அரசாங்க உதவியுடன் (கவர்மெண்ட் எயிடட்) நடப்பவைதான். அதாவது நம் அந்தப் பள்ளிகள் நடப்பதில் நம் வரிப்பணமும் உள்ளது. எனவே நாம் கொஞ்சம் விழித்துக்கொண்டால் போதுமானது. ஹிந்துப் பள்ளிக்கூடங்களாகப் பார்த்துச் சேர்க்க வழி இல்லை என்றால், இப்படி பள்ளிக்கூடங்களில் சேர்த்துவிட்டு, பாடம் நடத்துகிறேன் என்ற போர்வையில் மதப் பிரசாரம் நடத்துவதாகத் தெரிந்தால், நாம் பயப்படாமல் சென்று அந்தப் பள்ளிக்கூடத்தில் பேசவேண்டும். நம் பிள்ளைகளிடமும், நான் வந்து இப்படி பேசுவதால் உன்னை என்ன செய்வார்களோ என்று பயப்படாதே, அவர்களால் அப்படி ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இதை நிறைய பேர் செய்ய ஆரம்பித்தால் இப்படி பிரசாரம் செய்யும் வேலையை அவர்கள் நிச்சயம் நிறுத்தியே ஆகவேண்டும்.
நிறைய ஹிந்துப் பள்ளிகளிலும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் யாரும் இப்படி ஹிம்சைக்கு ஆளாவதில்லை. எல்லா ஹிந்துப் பள்ளிக்கூடங்களும் மறக்காமல் சர்வ சமயப் பிரார்த்தனைதான் நடத்துகிறார்கள். கோவிலுக்குள்ளே வந்து கும்பிட்டு, திருநீறு வாங்கிக்கொண்டு, பின்னர் ஹால் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு போ என்று ஒரு கிறிஸ்தவப் பையனைச் சொன்னால், அது வெளியில் தெரிந்தால், இந்த நாட்டில் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.