பாகிஸ்தானில் அணு உலைகள் அமைப்பதில் சர்வதேச விதிமுறைகளை மீற மாட்டோம்: இந்தியாவிடம் சீனா உறுதி


   பாகிஸ்தானில் அணு உலைகள் அமைக்கும் விவகாரத்தில் எந்த விதத்திலும் சர்வதேச விதிமுறையையும், பொறுப்பையும் மீறி நடந்து கொள்ள மாட்டோம் என்று இந்தியாவிடம் சீனா உறுதி அளித்துள்ளது. சீனாவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பெய்ஜிங்கில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இதைத் தெரிவித்தார். சீனாவுக்கு சென்றுள்ள சிவசங்கர் மேனன், அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவோ, வெளியுறவு அமைச்சர் யாங் ஜிசி உள்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசினார். இந்த சந்திப்பின் போது,பாகிஸ்தானில் இரு அணு உலைகளை சீனா நிறுவவுள்ளது தொடர்பாகவும் விவாதித்தனர். அப்போது, பாகிஸ்தானில் அணு உலைகளை அமைக்கும் விஷயத்தில் சர்வதேச விதிமுறைகளை சீனா மதித்து நடக்கும் என்று உறுதி அளித்ததாக சிவசங்கர் மேனன் கூறினார்.