
இராமானுசரும்,பிள்ளைஉலகாசிரியரும்,வேதாந்த தேசிகரும்,மணவாளமாமுனிகளும் சமஸ்க்ருதத்திலும் பல சுவையான பாமரர்களுக்கும் விளங்கும்படி பல அருமையான ச்தோத்திரங்களும், காவிய நாடகங்களும் இயற்றியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துகளையே தங்கள் நூல்களிலும், வாழ்க்கை நடைமுறைகளிலும் பின்பற்றிவந்திருக்கின்றனர். தம் தம் சீடர்களுக்கும் அவ்வாறே கற்றுக்கொடுத்துள்ளனர்.
இவர்கள் காலத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பழக்கமுறைகளினால் வைணவர்களில் புதிய பிரிவாக வடகலை வைணவம் தோன்றியது.
தமிழ்ப் பிரபந்தங்களை வேதங்களாகவே மதிக்கவேண்டும் என்பது இராமானுஜரின் போதனை. அதனால் வேதங்கள், உபநிடதங்கள் இவைகளுக்கு பதிலாகவே பிரபந்தங்களை வைத்துக் கொள்ளலாம் என்று ஒரு கருத்து தலை தூக்கியது. இரு நூற்றாண்டுகளில் இந்த விதைக்கருத்து கொழுந்துவிட்டு மரமானபோது அது வைணவத்தையே இரு பிரிவுகளாக்கிவிட்டது. இப்படி ஏற்பட்டது தான் வடகலையும் தென் கலையும். தமிழ்ப் பிரபந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தது தென்கலை.
திருக்கச்சி நம்பிகள், இராமானுசர், அவரின் சீடர்கள் கூரத்தாழ்வார்,முதலியாண்டான், பின்னர் வேதாந்த தேசிகர் ஆகியோர் காஞ்சீபுரம் தேவப்பெருமாள் கோயில் மற்றும் சுற்றுவட்டார ஊர்களை சார்ந்தவர்களே.
பிற்காலத்தில் வடகலையாருக்கு முக்கிய நகரமாக காஞ்சீபுரமும், தென்கலையாருக்கு ஸ்ரீரங்கமுமாக இருந்ததே அவர்கள் அப்படி அழைக்கப்பட்டதற்குக் காரணம். காஞ்சீபுரத்தில் வடமொழிப் புலவர்களின் நடமாட்டம் அதிகம். ஸ்ரீரங்கமும் அதன் சுற்றுவட்டாரமும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள்.
இதைத்தவிர தத்துவ ரீதியாகவும் இருபிரிவுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் வேரூன்றின. ஆண்டவனின் அருள் யாருக்குக் கிடைக்கும்? சுயமுயற்சியுடன் ஆண்டவனை வழிபடுபவனுக்கா, அல்லது, ஆண்டவன் விட்ட வழி விடட்டும் என்று சுயமுயற்சியையும் கைவிட்டவனுக்கா? இரண்டாமவனுக்குத் தான் என்பது தென்கலை வைணவர்கள் கொள்கை. இக்கொள்கையை பூனை விதி என்பர். ஏனென்றால் பூனைக்குட்டியை தாய்ப்பூனை கவ்வி எடுத்துச்செல்கிறது. பூனைக்குட்டி சுயமாக முயற்சி ஏதும் செய்வதில்லை. ஆனால் குரங்குக் குட்டியோ தானே தாய்க் குரங்கைக் கவ்விக் கொள்கிறது. வடகலை வைணவக் கொள்கை இதுதான். சுயமுயற்சியால் தான் ஆண்டவனின் அருளைப்பெற முடியும் என்பர். சுயமுயற்சி என்பது இவ்விடத்தில் பக்தியும் பிரபத்தியும்.
வடகலையார் ஸ்ரீயாகிய மகாலட்சுமியை நாராயணன் என்ற மலரிலிருந்து பிரிக்கமுடியாத அதன் மணமாகக் கொள்வர். அதனால் ஸ்ரீயும் மோட்சத்தைக் கொடுக்கக் கூடியவள். தென்கலையாருக்கோ ஸ்ரீயும் ஒரு ஜீவன் தான்; ஆனால் முக்கியமான ஜீவன். ஆண்டவனிடம் நமக்காகப் பரிந்து பேசக்கூடிய ஜீவன்.
மதக்கோட்பாட்டு வல்லுனர்கள் வடகலைக்கும் தென்கலைக்கும் 18 வேறுபாடுகள் சொல்வர். ஒரு சராசரி வைணவனுக்கு இந்த வேறுபாடுகள் பொருளற்றவை. ஒரே பரம்பொருளான ஸ்ரீமந்நாராயணனிடம் அளவு கடந்த பக்தியும், இராமானுஜர் சொல்லியபடி எல்லா ஜீவர்களிடமும் காட்ட வேண்டிய அன்புமே அடிப்படை வைணவ லட்சணமாகும்.
இறைவனை வழிபடவும், ஆன்மீக அரும்பொருள்களை பாமரர்களும், எளியோரும், அந்தணர்களும் மிக எளிமையாக கற்கவும், தெரிந்துகொள்ளவும் வைணவம் நிகரற்ற சமயமாக போற்றப்படுகிறது. இறைவனைத்தொழவும்,அறிந்து கொள்ளவும், இறைத்தொண்டு ஆற்றவும், அனைத்து சாதியினருக்கும் எவ்வித தடையும் இல்லாமல் மிக்க எளியமுறையிலும்,மொழி வேற்றுமை இல்லாமலும் தூய்மையான ஆன்மீக வழியையே விஷிஷ்டாத்வைதம் எனும் வைணவ சமயம் உரைத்து கடைபிடிக்க செய்கிறது. மோக்ஷம் எனப்படும் ஆன்மா முக்தியடைய எளிய முறை பாற்கடல்நாதனான நாராயணனை அடிபணிந்து வழிபடுவதே என்பது வைணவத்தின் கோட்பாடு.