
இதையேன் இப்போ சொல்றேன்னு நீங்க கேட்கலாம். அதாவது, பெட்ரோல் பத்தின அடிப்படை உண்மைகள் எந்த அளவுக்கு உங்களுக்குத் தெரியும்னு எனக்குத்தெரியாது. ஆனா, எனக்கு ஓரளவுக்குத்தான் தெரியும். அதாவது, பூமியின் பல்லாயிரம் மீட்டர் ஆழத்திலிருந்து, எப்போதோ மண்ணுக்குள்ளே மக்கிப்போன தாவரம்/விலங்குகளின் கழிவுகளிலிருந்து உருவாகும் ஒருவகையான எண்ணைதான் க்ரூட் ஆயில். அதுலயிருந்து கெடைகிற எத்தனையோ எரிபொருள்கள்ல ஒன்னுதான் பெட்ரோல்னுதான் எனக்குத் தெரியும்.
இப்படி என்னை மாதிரி, பெட்ரோல் பத்தின அரைகுறை அறிவோட இருக்குறவங்களைத்தான் நம்ம பெட்ரோல் விஞ்ஞானி ராமர் பிள்ளை நல்லா ஏமாத்த முயற்ச்சி பண்ணியிருப்பாருன்னு தோனுது. ஆமா, அவரு இப்போ என்ன பண்றாரு? ம்ம்ம்….நமக்கு இப்போ அதுவா முக்கியம்?!
சரி சரி விடுங்க, அவரு இப்போ என்ன பண்ணினா நமக்கு என்ன? நமக்கு தெரியவேண்டியதெல்லாம் பெட்ரோல் பத்தின மேலதிக விவரங்கள் அப்படித்தானே?! சரி வாங்க நாம பெட்ரோல் பத்தின, இதுவரை நம்மில் பல பேருக்கு தெரியாத பல ஆச்சரியமான உண்மைகள்/பலன்களைப் பத்தி தெரிஞ்சிக்குவோம்…..
- உதட்டுச்சாயம்: பெண்களோட உதடுகளை கவர்ச்சியாக காட்டும் உதட்டுச்சாயம் எங்கேயிருந்து வருது தெரியுமா உங்களுக்கு? பெட்ரோலியம்/பெட்ரோலியம் சார்ந்த வேதியல் பொருட்களான, க்ரைலேட்ஸ் (crylates), கோல் டார் சாயங்கள் (coal tar colorants) மற்றும் ப்ரொப்பிலீன் க்ளைக்கால் (propylene glycol). அதுமட்டுமில்லாம, உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்ச வேஸ்லின்-பெட்ரோலியம் ஜெல்லியை (Vaseline-petroleum jelly) உதட்டுச்சாய அடிப்படையாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்களாம்!
- சோலார் தகடுகள்: உலகத்தின் மின்சாரத்தேவையை சூரிய ஒளியினைப் பயன்படுத்தி பூர்த்தி செய்து, மனிதனின் வயிற்றில் பாலை வார்த்துக்கொண்டிருக்கும் சோலார் தகடுகள் எதனாலானவைன்னு யோசிச்சிருக்கீங்களா இதுவரைக்கும். நான் யோசித்ததில்லை! சோலார் தகுடுகளின் ப்ளாஸ்டிக் பகுதிகளும், ஒளி ஈர்க்கும் பகுதியும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களானவையாம். ஆனா, அதையும் தாவரம் சார்ந்த பொருட்கள் மற்றும் மக்கும் ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களால் உருவாக்க முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறார்களாம்!
- சுருக்கமில்லா ஆடைகள்: உடை என்றாலே உலகம் விரும்புவது பருத்தியினாலான ஆடைகளைத்தான். ஆனா, பருத்தி ஆடைகள்ல பிரச்சினை என்னன்னா, காலப்போக்கில் நூல் அகன்றுவருவது, நைந்துபோவது, சுருங்கிப்போவது இப்படி எத்தனையோ. இதுக்கெல்லாம் நிவாரணமா வந்து நிக்கிறது பாலியஸ்டர் ஆடைகள். இந்த பாலியஸ்டர் ஆடைகள் உருவாக பல வகையான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களும் அவசியமாம்! ஆக, நம் அன்றாட அத்தியாவசியதேவையான ஆடைகளுக்கும் பெட்ரோலியம் அவசியமாகிறது.
- பபுள் கம்: நம்மில் நிறைய பேருக்கு பிடித்த பபுள் கம் சாப்பிட்டப்பெல்லாம், இது எதுலேர்ந்து உற்பத்தியாகுதுன்னெல்லாம் நான் யோசிச்சதில்லை. ஆனா, இப்போதான் தெரியுது நாம சாப்பிடுற பபுள் கம்மு கூட இந்த பெட்ரோல்லேர்ந்து கெடைக்கிற பாலியெத்திலீன் மற்றும் பாராஃபின் மெழுகுலேர்ந்துதான் உற்பத்தி செய்றாங்களாம்! அப்படீன்னா, நாம சாப்பிடுற கம்மு கூட மக்காத குப்பை வகையைச் சேர்ந்ததுதான். அதனால, நீங்க அடுத்த முறை பபுள் கம் சாப்பிடும்போது, உங்களால ஒரு சிறு பகுதி மக்காத குப்பை இந்த பூமியில அதிகமாகுதேன்னு யோசிச்சுப்பாருங்க!
- க்ரேயான்: நம்ம குழந்தைகள் வருங்காலத்துல பெரிய ஓவியரா ஆகுறதுக்கு, அவங்க ஓவியப் புத்தகத்துலயும், அப்பப்போ நம்ம வீட்டு சுவத்துலயும் கூட வரைஞ்சு பயிற்ச்சி எடுத்துக்கிறதுக்கு உதவுற க்ரேயான் பென்சில்களும் , பெட்ரோலிலிருந்து கிடைக்கும் பாரஃபின் மெழுகுல செய்யப்பட்டதுதானாம். அப்புறம் நமக்கெல்லாம் மின்சாரமில்லாத இரவுப்பொழுதுகள்ல வெளிச்சம் கொடுக்குற மெழுகுவர்த்திகள்கூட இந்த பாரஃபின் மெழுகினாலானவைதான்.
- ஆஸ்பிரின் மாத்திரைகள்: ஜண்டு பாம் ஜண்டு பாம்….வலியைப்போக்கும் பாம். தலைவலி உடல்வலி அனைத்தையும் நொடியில் போக்கிடுமேன்னு விளம்பரப்படுத்தப்படுற ஜண்டு பாம்மினால போகாத தலைவலியைப் போக்கவும், ஜுரம் மற்றும் இருதய நோய் வராமல் தடுக்கக்கூட உதவுவது ஆஸ்பிரின் (Aspirin) என்னும் ஒரு மாத்திரை. இந்த மாத்திரை பென்சீன் என்னும் வேதியல் பொருளிலிருந்து உருவாக்கப்படுகிறதாம். அந்த பென்சீன் கூட பெட்ரோலிலிருந்துதான் கிடைக்கிறதாம். அட, இது தெரியாதே எனக்கு இதுவரைக்கும்?!
- காலுறைகள்: உடலை இருக்கி அனைத்தபடி, உடலின் பல்வேறு பகுதிகளில் அணியப்படும் ஒரு வகை நைலான் ஆடைகளான, டைட்ஸ் அல்லது பேன்டிஹோஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பெண்களுக்கான உள்ளாடைகள் என எல்லாமே பெட்ரோலிலிருந்து உருவாகும் ஒருவகை ப்ளாஸ்டிக்கான தெர்மோப்ளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படுபவைதானாம். இது கடந்த 1935 ஆம் ஆண்டு, திரு. வாலேஸ் கெரோதர்ஸ் என்னும் விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது!