பாரத தேவியின் திருத் தசாங்கம்



     பாரத தேவியின் திருத் தசாங்கம்

நாமம் (காம்போதி)
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்! - இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.
நாடு (வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! - வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.
நகர் (மணிரங்கு)
இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.
ஆறு (சுருட்டி)
வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.
மலை (கானடா)
சோலைப் பசுங்கிளியே! தொன்மறைகள் நான்குடையாள்
வாலை வளரும் மலைகூறாய்! - ஞாலத்துள்
வெற்பொன்றும் ஈடிலதாய் விண்ணில் முடிதாக்கும்
பொற்பொன்று வெள்ளைப் பொருப்பு.
ஊர்தி (தன்யாசி)
சீரும் சிறப்புமுயர் செல்வமுமோ ரெண்ணற்றாள்
ஊரும் புரவி உரைதத்தாய்! தேரின்
பரிமிசையூர் வாளல்லள் பாரனைத்தும் அஞ்சும்
அரிமிசையே ஊர்வாள் அவள்.
படை (முகாரி)
கருணை யுருவானாள் காய்ந்தெழுங்காற் கிள்ளாய்
செருநரைவீழ்த் தும்படையென் செப்பாய்! - பொருபவர்
மேல்தண்ணளியால் வீழாது, வீழின் தகைப்பரிதாம்
திண்ணமுறு வான்குலிசம் தேறு.
முரசு (செஞ்சுருட்டி)
ஆசை மரகதமே! அன்னை திரு முன்றிலிடை
ஓசை வளர்முரசம் ஓதுவாய்! - பேசுகவோ
சத்தியமே, செய்க தருமமே என்றொலிசெய்
முத்திதரும் வேத முரசு.
தார் (பிலகரி)
வாராய் இளஞ்சுகமே! வந்திப்பார்க் கென்றுமிடர்
தாராள் புனையுபணித் தார்கூறாய்! - சேராரை
முற்றாக் குறுநகையால் முற்றுவித்துத் தானொளிர்வாள்
பொற்றா மரைத்தார் புனைந்து.
கொடி (கேதாரம்)
கொடிப்பவள வாய்க்கிள்ளாய்! சூத்திரமும் தீங்கும்
மடிப்பவளின் வெல்கொடிதான் மற்றென்? - அடிப்பணிவார்
நன்றாரத் தீயார் நலிவுறவே வீசுமொளி
குன்றா வயிரக் கொடி.